அமெரிக்காவால் முடியாததை கத்தார் சாதித்தது எப்படி?

தெற்கு இஸ்ரேலில் இருந்து 200க்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாக கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் பிடித்துச் சென்ற விவகாரம் பெட்ரோல் வளமிக்க மிகச் சிறிய குட்டி நாடான கத்தாரை சர்வதேச ராஜ்ஜீய உறவுகளின் மையத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

இந்த பணயக் கைதிகளின் எதிர்காலம் ஓரளவுக்கு கத்தாரின் கைகளில் உள்ளது என்று சொன்னால்கூட தவறில்லை. ஏன் அப்படி?

இதற்கு மிக எளிய காரணம் என்னவென்றால், இஸ்ரேலுக்கும் அதன் பரம எதிரியான ஹமாஸுக்கும் இடையில் ஒரு முக்கிய மத்தியஸ்தராக கத்தார் திகழ்கிறது.

இந்த நிலையில்தான் தற்போது, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தமும் பணையக்கைதிகளின் விடுவிப்பும் வரும் வெள்ளிக்கிழமை தொடங்கும் என கத்தார் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இதுவரை பணையக்கைதிகள் விடுவிக்கப்பட்டதில் கத்தாரின் பங்கு முக்கியமானது. அதே போல வரும் வெள்ளிக்கிழமை, ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் 13 பணையக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என கத்தார் வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் மஜித் அல்-அன்சாரி தெரிவித்தார்.

பத்திரிக்கையாளர்களிடம் அவர் பேசுகையில், “வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு இடைக்கால போர் நிறுத்தம் தொடங்கும். அன்று மாலை 4 மணிக்கு 13 பணையக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். வெள்ளிக்கிழமையிலிருந்து தொடர்ந்து 4 நாட்களில் 50 பணையக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்” என அவர் தெரிவித்தார்.

இதன் ஒரு பகுதியாக இஸ்ரேல் சிறைகளில் இருக்கும் பாலத்தீனிய கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு காஸா பகுதியில் நடந்த வந்த சண்டையும் முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பும் பணயக் கைதிகள் நான்கு பேர் விடுவிக்கப்பட்டதில் கத்தாருக்கும் அதன் அமீருக்கும் உள்ள பங்கை பாராட்டி அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் பாராட்டு தெரிவித்திருந்தனர். சமீபத்தில் இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் கத்தாரை பாராட்டியிருந்தார்.

அதேநேரம், காஸாவில் இஸ்ரேல் நடத்தும் எந்தவொரு தரைவழித் தாக்குதல் இதை மேலும் கடினமாக்கவும் கூடும்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரில் அமெரிக்காவால் முடியாததை குட்டி நாடான கத்தார் எப்படி சாத்தியமாக்கியது?

  • ஹமாஸின் அரசியல் பிரிவுக்கு கத்தார் அடைக்கலம் கொடுப்பது ஏன்?
கத்தார் : இஸ்ரேல்- ஹமாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

குறித்த பணயக்கைதிகளில் பெரும்பாலானவர்கள் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள், இஸ்ரேலியர்கள் அல்லாதவர்கள் என்று கத்தார் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலத்தீன கைதிகளை விடுவிக்க பணயக் கைதிகளை பரிமாறிக்கொள்ளும் நம்பிக்கையில், ஹமாஸ் தான் கடத்திய இஸ்ரேலிய ராணுவ வீரர்களை மட்டுமே பணயக் கைதிகளாக வைத்திருக்கும் என்று தெரிகிறது. ஆனால் இது கத்தாருக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும்.

ஹமாஸ் தாக்குதலின் கொடூரமான சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்த பிறகு கத்தார் குறித்து சில கேள்விகள் எழுப்பப்படுகின்றன. பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் ஹமாஸை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தபோதும், அமெரிக்காவின் ராணுவ தளத்தை வைத்திருக்கும் மேற்குலகின் முக்கியக் கூட்டாளியான கத்தார், ஹமாஸின் அரசியல் பிரிவுக்கு அடைக்கலம் கொடுப்பது ஏன் என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

பணயக் கைதிகள் தொடர்பான கத்தாரின் முயற்சிகள் தோல்வியடைந்தால், மேற்கத்திய நாடுகளில் அதன் நம்பகத்தன்மை பாதிக்கப்படுவதுடன், ஹமாஸின் அலுவலகத்தை மூடுவதற்கான அழுத்தமும் அதிகரிக்கும்.

இந்த விஷயத்தில், பணயக் கைதிகள் தொடர்பாக நடந்து வரும் பேச்சுவார்த்தை மிகவும் நுட்பமான பிரச்னை என்று கூறுவது எந்த வகையிலும் உதவாது.

  • கத்தார் – ஹமாஸ் இடையிலான உறவு
கத்தார் : இஸ்ரேல்- ஹமாஸ்

பட மூலாதாரம்,EPA

ஹமாஸால் விடுவிக்கப்பட்ட யோஷேவேத் லைஃப்ஷிட்ஸ் தனது மகளுடன்.

அக்டோபர் 7ஆம் தேதி காலை, ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் எல்லையைத் தாக்கி அதனுள் நுழைந்து 1400 பேரைக் கொன்றனர். அதன் பிறகு இஸ்ரேல் இந்தக் கொடூரமான தாக்குதலில் இருந்து மீள முயன்று வருகிறது.

காஸாவில் சுமார் 23 லட்சம் பாலத்தீனர்கள் வாழ்கின்றனர், 2007 முதல் ஹமாஸ் இங்கு ஆட்சி செய்து வருகிறது.

காஸாவில் கடந்த இரண்டு வாரங்களாக 24 மணிநேரமும் இஸ்ரேலிய படைகள் குண்டுகளை வீசி வருகின்றன. காஸாவில் உள்ள ஹமாஸ் அரசின் சுகாதார அமைச்சகத்தின்படி, இதுவரை 7,000க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.

உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறது. எனினும் ஹமாஸை வேரோடு அழித்த பிறகுதான் தாக்குதலை நிறுத்துவோம் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் இரு தரப்புக்கும் இடையில் சமரசம் பேச ஒரு மத்தியஸ்தரின் தேவை ஏற்பட்டதில் ஆச்சரியமில்லை.

பணயக் கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை எப்படி நடத்தப்படுகிறது?

  • ஹமாஸ் மூத்த தலைவர்களுடன் கத்தார் அதிகாரிகளின் நெருக்கம்
கத்தார் : இஸ்ரேல்- ஹமாஸ்

பட மூலாதாரம்,EPA

ஹமாஸிடம் உள்ள பணயக் கைதிகளை விடுவிக்க லண்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த உறவினர்கள்.

ஹமாஸின் அரசியல் பிரிவு அலுவலகம் 2012 முதல் கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ளது. அதன் தலைவராக இஸ்மாயில் ஹனியா உள்ளார்.

நவீன தோஹாவின் பளபளக்கும் வானளாவிய கட்டடங்களுக்கு மத்தியில், ஹமாஸ் அதிகாரிகள் கத்தாரின் வெளியுறவு அமைச்சகத்தின் ராஜ்ஜீய அதிகாரிகளுடன் நேருக்கு நேர் அமர்ந்து பணயக் கைதிகளை விடுவிப்பது குறித்த சிக்கலான பிரச்னையை விவாதிக்கின்றனர்.

கத்தார் மத்தியஸ்தர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல என்று என்னிடம் கூறப்பட்டது.

இந்த மத்தியஸ்தர்கள் அரசாங்கத்தின் ஒரு சிறப்புத் துறையைச் சேர்ந்தவர்கள், காஸாவில் உள்ள ஹமாஸுடனான உறவுகளைக் கண்காணிப்பதே அவர்களின் பணி. காரணம் காஸாவின் உள்கட்டமைப்பு மற்றும் குடிமை சேவைகளுக்காக கத்தார் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான டாலர்களை செலவு செய்கிறது.

பல கத்தார் அதிகாரிகள் காஸாவிற்கு பயணம் செய்திருக்கிறார்கள். அவர்கள் மூத்த ஹமாஸ் தலைவர்களுக்கு நன்கு பரிட்சயமானவர்கள்.

இஸ்ரேலிய வர்த்தக அலுவலகத்தை 1990களிலேயே தங்கள் நாட்டில் கத்தார் கொண்டிருந்தாலும் பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற மற்ற வளைகுடா அண்டை நாடுகளைப் போல் அல்லாமல், கத்தார் இஸ்ரேலுடன் முறையான உறவுகளைக் கொண்டிருக்கவில்லை.

  • பணயக் கைதிகளை வைத்திருப்பதால் ஹமாஸுக்கு ஆபத்தா?
கத்தார் : இஸ்ரேல்- ஹமாஸ்
ஆனாலும் கத்தார் – இஸ்ரேல் இடையே அலைபேசி உரையாடல்கள் சமூகமாக உள்ளன. கத்தார் அதிகாரிகள் பணயக் கைதிகளை விடுவிக்கும் பிரச்னையில் இஸ்ரேலிய மத்தியஸ்தர்களுடன் தொலைபேசியில் பேசி வருகிறார்கள்.

இருப்பினும், இதற்கெல்லாம் பின்னணியில் பல காரணிகள் உள்ளன.

ஆனால், பணயக் கைதிகளை விடுவிப்பதால் ஹமாஸுக்கு மிகவும் சொற்ப பலனே கிடைக்கும் என்று தோன்றுகிறது. ஏனெனில், ஏற்கெனவே பெண்கள், குழந்தைகளைக் கடத்தியதற்காக ஹமாஸ் விமர்சனத்திற்கு இலக்காகியுள்ளது. இந்தச் செயல் இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிரானது என்று சௌதியின் மூத்த இளவரசர் துர்கி அல்-பைசல் கூறியுள்ளார்.

வெளிநாட்டு பணயக் கைதிகள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என்று ஹமாஸ் விரும்புவதாக சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

மூலோபாய சிந்தனைக் குழுவான சிபிலினை(Sibylline) சேர்ந்த ஜஸ்டின் க்ரம்ப் பேசும்போது, பணயக் கைதிகளை வைத்திருப்பது ஹமாஸுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார்.

பல பணயக் கைதிகளை இஸ்ரேலிடம் இருந்து மறைத்து வைத்திருப்பதும், அவர்களைக் கவனித்துக்கொள்வதும் போர்ச்சூழலில் ஹமாஸுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்கிறார் ஜஸ்டின் க்ரம்ப்.

  • பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசு என்ன நினைக்கிறது?
கத்தார் : இஸ்ரேல்- ஹமாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பணயக் கைதிகளை விடுவிப்பது ஹமாஸுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்று கத்தார் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஒருபுறம், இஸ்ரேல் உள்ளிட்ட பிற நாடுகளில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் அமைதியான விடுதலையை விரும்புகின்றன. இதுதான் காஸா மீது தரைவழித் தாக்குதலை நடத்துவதை தாமதப்படுத்தும் அழுத்தத்தை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தியது.

உரையாடல் ஒருபுறம் இருந்தாலும் பணயக் கைதிகளை ஒப்படைக்கும் விஷயமும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

ஹமாஸ் பணயக் கைதிகளை பூமிக்கு அடியில் சுரங்கங்களில் மறைத்து வைத்துள்ளது. இதுவரை விடுதலை செய்யப்பட்ட நான்கு பேரும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஆனால், 50க்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றால் தற்போது தொடரும் குண்டுவெடிப்புகள் நிறுத்தப்பட வேண்டும். இந்தத் தடையை போர் நிறுத்தமாக மாற்ற ஹமாஸ் விரும்புகிறது.

ஆனால் பெஞ்சமின் நெதன்யாகுவின் இஸ்ரேலிய அரசாங்கம், ஹமாஸை அழிக்கும் வரை இந்தப் போரை நடத்துவோம் என்று கூறியுள்ளது. எனவே ஹமாஸ் சிறிய அளவில் ஓய்வெடுக்க நேரம் கொடுக்கக்கூட இஸ்ரேல் விரும்பவில்லை என்று தெரிகிறது.

  • மத்தியஸ்தம் செய்வதில் கத்தாரின் முக்கியத்துவம் என்ன?
கத்தார் : இஸ்ரேல்- ஹமாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மத்தியஸ்த விவகாரத்தில் கத்தார் முக்கியப் பங்கு வகித்து வருவது இது முதல் முறை அல்ல.

தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தில் இல்லாதபோதும், அவர்களின் தூதரகத்தை பல ஆண்டுகள் தங்கள் நாட்டில் செயல்பட கத்தார் அனுமதித்தது.

கடந்த 2013ஆம் ஆண்டில், தாலிபன்கள் தோஹாவில் உள்ள தங்கள் வளாகத்தில் வெள்ளைக் கொடியை ஏற்றி காபூலில் உள்ள ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தைக் கோபப்படுத்தியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் தாலிபன்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, தாலிபன்களுடன் பேசும் யாருடைய தொடர்பையாவது வைத்திருப்பது அவர்களுக்கு அவசியமாகப்பட்டது.

இதன் விளைவாக, 2020இல் ஒரு சர்ச்சைக்குரிய சமாதான ஒப்பந்தம் எட்டப்பட்டது. அதன் பிறகு ஓராண்டு கழித்து, மேற்கத்திய நாடுகள் அவசரமாக காபூலில் இருந்து தங்கள் படைகளைத் திரும்பப் பெற்றன.

தோஹாவின் குளிரூட்டப்பட்ட மால்களுக்குள் இருக்கும் மேற்கத்திய பேஷன் பொடிக் கடைகளுக்கு தங்கள் மனைவிகளை பொருட்களை வாங்க அழைத்துச் சென்ற தாடி வைத்த, சல்வார் கமீஸ் அணிந்த தாலிபன் தளபதிகள் பற்றி தோஹா பகுதிகளில் வசிப்பவர்கள் அடிக்கடி பேசிக் கொண்டனர்.

கத்தார் அதிகாரிகள் இராக் மற்றும் சிரியாவில் உள்ள தங்கள் புலனாய்வு அணுகலைப் பயன்படுத்தி ஐ.எஸ். அமைப்பினரால் பிடிக்கப்பட்ட சில பணயக் கைதிகளை விடுவித்தனர்.

கத்தார் : இஸ்ரேல்- ஹமாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2020இல் தோஹாவில் தாலிபன்களுடன் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை

கத்தாரின் மத்தியஸ்தத்திற்கு சமீபத்திய உதாரணம் இந்த ஆண்டு நடந்தது. ரஷ்யா யுக்ரேனை சேர்ந்த நான்கு குழந்தைகளை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றது. யுக்ரேன் கேட்டுக்கொண்டதையடுத்து கத்தார் தலையிட்டு அவர்களை விடுவிக்கச் செய்தது.

கத்தாரின் இந்த அணுகுமுறை அந்த நாட்டை பல நாடுகளின் மிக முக்கியக் கூட்டாளியாக மாற்றியுள்ளது. காஸாவில் சிக்கியுள்ள தங்கள் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற பல நாடுகளும் கத்தாரின் கதவுகளைத் தட்டுகின்றன.

ஆனால் இந்த நெருக்கடிக்கு முன்பே, கத்தார் இதுபோன்ற ராஜ்ஜீய விவகாரங்களில் பயணித்துள்ளது.

இந்த நெருக்கடியில் இருந்து கத்தார் வெளிவருகிறதா என்பது, காஸாவின் மோசமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதில் அது எந்தளவுக்கு வெற்றியடைகிறது, பணயக்கைதிகள் விடுதலையை எந்தளவுக்கு உறுதி செய்கிறது என்பதைப் பொறுத்தது.

 பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *