இஸ்ரேல் பிரதமர் பதவி விலக வேண்டும்; போராட்டத்தில் குதித்த இஸ்ரேலிய மக்கள்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு உடன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் ஆயிரத்துக்கு மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியானதற்கும், 200 இற்கு மேற்பட்டோர் பணயக் கைதிகளால் பிடித்துச்செல்லப்பட்டதற்கும் பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மத்திய ஜெருசலம் பகுதியில் உள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்துக்கு முன்பாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 3 ஆயிரத்து 900 குழந்தைகள் உட்பட 9 ஆயிரத்து 488 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை காஸா முனையில், 2,500-க்கும் மேற்பட்ட பயங்கரவாத இலக்குகள் தாக்கி அழிக்கப்பட்டு உள்ளன என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.

காஸாவில் அல்-ஃபகூரா (al-Fakhoora School) என்ற பள்ளி மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் 15 பேர் உயிரிழந்ததாகவும், 54 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

காஸா மீதான தரைவழி தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், போர் தீவிரமடையும் அபாயம் அதிகரித்துள்ளது. வடக்கு காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் பலமுறை எச்சரிக்கைவிடுத்த போதிலும், ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறவில்லை.

“போர் நிறுத்தம் என்பது ஹமாஸிடம் இஸ்ரேல் சரணடைவதற்கு சமமானது. ஹமாஸுக்கு எதிரான போரில் வெற்றிபெறும் வரை இஸ்ரேல் போரிடும்“ என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *