தீபாவளிக்கு திரைக்கு வரும் திரைப்படங்கள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தாண்டு கார்த்தியின் ஜப்பான், லாரன்ஸின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், விக்ரம் பிரபுவின் ரெய்டு, காளி வெங்கட்டின் கிடா ஆகிய படங்கள் விருந்து படைக்க காத்திருக்கின்றன.

பண்டிகை நாட்களில் புத்தாடை அணிவது, பலகாரங்கள் செய்து சாப்பிடுவது என மக்கள் விமர்சையாக கொண்டாடுவார்கள். அதுவும் தீபாவளி பண்டிகை என்றால் ஒரு படி மேலே சென்று, பட்டாசுகள் வாங்கி வந்து வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருவார்கள்.

மேலும் வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் சொந்த ஊருக்கு திரும்பி, குடும்பம் குடும்பமாக திரையரங்குக்கு சென்று தீபாவளிக்கு வெளியான படங்களை கண்டு ரசித்து வருவார்கள்.

அப்படி பண்டிகை காலங்களில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தும். அதோடு இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகி மோதிக்கொள்ளும்.

எந்த நடிகரின் படம் வெற்றியடைந்தது. எவ்வளவு வசூல் என்று ரசிகர்கள் வலைதளங்களில் முட்டிக் கொள்வார்கள்.

ஆனால், கடந்த ஆண்டு தீபாவளிக்கு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகாமால், கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் ஆகிய படங்கள் வெளியாகின.

அதுபோல இந்த ஆண்டும் தீபாவளிக்கு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகாமால், கார்த்தியின் ஜப்பான், லாரன்ஸின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், விக்ரம் பிரபுவின் ரெய்டு, காளி வெங்கட்டின் கிடா ஆகிய படங்கள் தீபாவளி விருந்தாக திரைக்கு வருகின்றன.

நடிகர் கார்த்தி, இயக்குனர் ராஜு முருகன் கூட்டணியில் ‘ஜப்பான்’ திரைப்படம் உருவாகி உள்ளது.

தேசிய விருது பெற்ற ‘ஜோக்கர்’ படத்திற்குப் பிறகு மீண்டும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் ராஜு முருகன் கைகோர்த்துள்ளார்.

ஜப்பான் திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் நவம்பர் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது.

‘ஜப்பான்’ திரைப்படம் நடிகர் கார்த்தியின் 25-வது படம் என்பதால் மிக அதிக பொருட்செலவில் தயாராகி உள்ளது.

அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்க தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

2014 ஆம் ஆண்டு சித்தார்த், லக்ஷ்மி மேனன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிப்பில் ஜிகர்தண்டா திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது.

தேசிய விருதுகள் உட்பட பல விருதுகள் இப்படத்திற்கு கிடைத்த நிலையில், 8 வருடத்திற்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி உள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இந்தப் படமும் நவம்பர் 10-ம் தேதி களம் காண வருகிறது.

அறிமுக இயக்குநர் கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் ரெய்டு திரைப்படம் உருவாகி உள்ளது‌. இந்த ‘ரெய்டு’ படத்திற்கு பிரபல இயக்குனர் முத்தையா வசனம் எழுதியுள்ளார்.

வெங்கட் பிரபு, ஸ்ரீ திவ்யா மற்றும் புதுமுகம் அனந்திகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 6 வருடங்களுக்கு பிறகு நடிகை ஸ்ரீ திவ்யா படத்தில் நடித்துள்ளார்.

சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படமும் நவம்பர் 10-ம் தேதி திரைக்கு வருகிறது.

ரா.வெங்கட் இயக்கத்தில் மறைந்த நடிகர் பூ ராமு மற்றும் காளி வெங்கட் நடிப்பில் கிடா என்ற திரைப்படம் உருவாகி உள்ளது‌. தாத்தா, பேரன் பாசப்பிணைப்பை வைத்தும், கிடாயை மையக்கருவாக வைத்தும் இந்த கிடா திரைப்படம் உருவாகி இருக்கிறது.

சிறிய பட்ஜெட்டில் உருவான கிடா திரைப்படம் மற்ற படங்களோடு வெளியாகாமால் அதற்கு அடுத்த நாளான நவம்பர் 11-ம் தேதி வெளியாக உள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு 2 படங்கள் வெளியாகி, அதில் கார்த்தி சரவெடி வெடித்தார். ஆனால் இம்முறை 4 படங்கள் வெளியாவதால், எந்த நடிகரின் படம் பட்டாசாக வெடிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *