World

காஸாவில் வைத்தியசாலை வாகனம் மீது தாக்குதல்; 15 பேர் உயிரிழப்பு

காஸாவில் வைத்தியசாலை வாகனத்தின்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பேர் பலியாகியுள்ளதுடன், 60 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காஸா சுகாதார அமைச்சின் பேச்சாளர் அஷ்ரவ் அல்கிட்ரா இதனை தெரிவித்தார்.

இத்தாக்குதல் காஸாவின் மிகப்பெரிய அல் ஷஹிஃபா வைத்தியசாலைக்கு அருகே சென்றுகொண்டிருந்த பல வைத்தியசாலை வாகனங்களில் ஒன்றின்மீது நடந்தது.

போர் நடக்கும் பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் மருத்துவ வாகனத்தைப் பயன்படுத்தியதைத் தனது படையினர் அடையாளம் கண்டு தாக்கியதில் போராளிகள் மாண்டுவிட்டதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்தது.

ஹமாஸ் அதிகாரி இசாட் எல் ரெஷிக், தம் போராளிகள் மருத்துவ வாகனத்தில் இருந்தனர் என்பதை ஆதாரமற்றது என்று நிராகரித்தார்.

நேற்றைய தினம் காஸா நகரில் உள்ள ஒரு பள்ளியில் தஞ்சம் புகுந்த நூற்றுக்கணக்கானோர்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலஸ்தீனர் பலர் கொல்லப்பட்டனர் என்று காஸா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை அவர்கள் அறிவிக்கவில்லை. இஸ்ரேலிய இராணுவமும் சம்பவத்தை உறுதிசெய்யவில்லை.

அமெரிக்க மூத்த அரச இராஜதந்திரியின் உடனடி போர் நிறுத்த அறைகூவலை நிராகரித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, பிணைக் கைதிகள் விடுவிக்கப்படாதவரை அதற்குச் சாத்தியம் இல்லை என்றும் தெரிவித்தார்.

பலஸ்தீனத்தை ஆட்சி செய்யும் ஹமாஸ் அமைப்பை துடைத்தொழிக்க இஸ்ரேல் உறுதிபூண்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7 அன்று, தெற்கு இஸ்ரேலுக்குள் புகுந்து 1,400 பேரைக் கொன்றதுடன், 240 பேரைப் பிணைக்கைதிகளாகக் கடத்திச் சென்றனர்.

வான்வழியாகவும், தரைப்படைகளுடன் காஸாவை முற்றுகையிட்டும் இஸ்ரேல் தாக்கிவருகிறது. இத்தாக்குதல்கள் உலகளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

மனிதாபிமான உதவிகள் அங்கு அனுப்பப்பட்டு வருகின்றன. உணவுத் தட்டுப்பாடு, மருத்துவ வசதிகள் யாவும் தடைபட்டுள்ளன. ஏறத்தாழ 9,250 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக காஸாவின் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி, அக்டோபர் 7ஆம் திகதி நடந்த தாக்குதலுக்குத் திட்டமிட்ட 10 ஹமாஸ் போராளிகள் கொல்லப்பட்டு விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு வாரத்துக்குமுன் தொடங்கப்பட்ட தரைப்படைத் தாக்குதலில் 25 இஸ்ரேலிய வீரர்கள் இறந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading