World

காஸா சிறுவர்களின் உயிரிழப்பு 3,257ஆக அதிகரிப்பு

மூன்றே வாரங்களில், காஸா பகுதியில் நடந்த போரில் உயிரிழந்த சிறுவர்களின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் மோதல் வலையங்களில் வருடாந்தம் உயிரிழந்த சிறுவர்களின் மொத்த சிறுவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என, சிறுவர்களின் பாதுகாப்பிற்காக செயற்படும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

காஸா மற்றும் இஸ்ரேலிய சுகாதார அமைச்சுகளின் தகவல்களுக்கு அமைய, ஒக்டோபர் 7 முதல் 3,257 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதில் காஸாவில் குறைந்தது 3,195 சிறுவர்களும், மேற்குக் கரையில் 33 சிறுவர்களும், இஸ்ரேலில் 29 சிறுவர்களும் கொல்லப்பட்டுள்ளதாக சேவ் தி சில்ரன் (Save the Children) அண்மையில் கணக்கெடுப்பொன்றை வெளியிட்டிருந்தது.

கடந்த மூன்று வருடங்களில் உலகளவில் 20ற்கும் மேற்பட்ட நாடுகளில் நடந்த ஆயுத மோதல்களில் கொல்லப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கையை விட காஸா பகுதியில் மூன்று வாரங்களில் கொல்லப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதை இந்த அதிர்ச்சிகரமான புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.

காஸாவில் கொல்லப்பட்ட 7,703 பேரில் 40%ற்கும் அதிகமானோர் சிறுவர்கள் என்பதோடு, ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனிய பிரதேசம் மற்றும் இஸ்ரேலில் இறந்தவர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவர்கள் சிறுவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 1,000 சிறுவர்கள் காஸா பகுதியின் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்து காணாமல் போயுள்ளதாகவும், உயிரழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய இராணுவம் காஸா பகுதியில் “விரிவாக்கப்பட்ட தரை நடவடிக்கைகளை” அறிவித்ததோடு, இது சிறுவர்கள் இறப்புகள், காயங்கள் மற்றும் பாதிப்பு எண்ணிக்கையை அதிகரிக்குமென எச்சரிக்கப்பட்டதோடு உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதுவரை, காஸாவில் குறைந்தது 6,360 சிறுவர்களும், மேற்குக் கரையில் குறைந்தது 180 சிறுவர்களும், இஸ்ரேலில் குறைந்தது 74 சிறுவர்களும் காயமடைந்துள்ளனர். மேலும், காஸா பகுதியில் தற்போது சிறுவர்கள், உட்பட 200ற்கும் மேற்பட்டோர் பணயக்கைதிகளாக சிக்கியுள்ளனர்.

இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை 174 ஆகும்.

அகதிகள் முகாமில் தாக்குதல்

காஸா எல்லையில் அமைக்கப்பட்டு இருந்த அகதிகள் முகாமில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் அமைப்பின் சுகாதார அமைச்சு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இது குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில்,

“காஸா எல்லை பகுதியின் வடக்கு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த முகாம் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 150-க்கும் அதிகமானோர் காயமுற்றனர். இஸ்ரேல் இந்த தாக்குதல் மூலம் அதிக குடியிருப்புகள் உள்ள பகுதியை குறிவைத்து இருக்கிறது,” என்று தெரிவித்து உள்ளது.

இந்த தாக்குதல் குறித்து வெளியான வீடியோவில் இடிந்து விழுந்த குடியிருப்பு பகுதிகளின் இடிபாடுகளில் இருந்து உயிரிழந்தோர் சடலங்கள் மீட்கப்படும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன.

மீட்பு பணிகள் நடைபெறும் பகுதியில் பலர் ஒன்றுகூடி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஹமாஸ் தெரிவித்து இருக்கும் இந்த குற்றச்சாட்டு குறித்து இஸ்ரேல் தரப்பில் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading