உலகையே அலறவைத்த ஹமாஸ்! காசாவுக்கு கீழ் 500 கி. மீ நீளத்திற்கு சுரங்க நகரம்:

காசா நகருக்கு அடியில் 500 கி.மீ நீளத்தில் ஹமாஸ் அமைப்பினர் சுரங்க பாதை நகரம் ஒன்றை உருவாக்கி வைத்து இருப்பதாகவும் அதனை அழிக்க இஸ்ரேல் போராடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஹமாஸ் படையினருக்கு எதிரான போர் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து இருப்பதாக நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்து இருந்த நிலையில், காசா நகரம் குறித்த இதுவரை வெளிவராத தகவல் ஒன்று தற்போது தெரியவந்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில், 41 கி.மீ நீள பரப்பளவு கொண்ட காசா நகரின் தரைப்பகுதிக்கு கீழ் வலைப்பின்னல் அமைப்பில் சுமார் 500 கி.மீ நீளத்திற்கு ஹமாஸ் படையினரின் சுரங்க பாதை  அமைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹமாஸின் மொத்த நடவடிக்கையும் இங்கு தான் நடைபெறுவதாக கூறப்படும் நிலையில், இதனை முழுவதுமாக அழிக்க இஸ்ரேல் கடந்த சில ஆண்டுகளாக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் இதுவரை இஸ்ரேலால் 5% சுரங்க பாதைகளை கூட அழிக்க முடியவில்லை எனவும் ஹமாஸ் பெருமை தட்டிக் கொள்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த போர் நடவடிக்கை பயன்படுத்தி  காசா நகரில் இருந்து  பொதுமக்கள் அனைவரையும் வெளியேற்றி இந்த சுரங்க பாதையை முழுவதுமாக அழிக்க இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது.

வழக்கமான தாக்குதல் முறைகளை பயன்படுத்தி இந்த சுரங்கங்களை அழிக்க முடியாது என புரிந்து கொண்ட இஸ்ரேல், இதற்காக ரசாயன கலவைகளால் ஆன நுரைகுண்டுகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்த நுரைகுண்டுகளை சுரங்கங்களின் வாயிலில் வீசி எறிந்தால், அதிலிருந்து நுரைகள் வெளியேறி சுரங்கப்பாதை முழுவதையும் அடைத்து விடும். இதனால் எதிரிகளால் பதிலடி தாக்குதல் நடத்த முடியாமல் சுரங்கத்திற்கு உள்ளே பலியாக நேரிடும்.

இதேபோல மற்றொரு திட்டமாக, மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து ராட்சத மோட்டார்கள் மூலம் சுரங்க பாதைக்குள் தண்ணீரை செலுத்தி சுரங்க பாதையை தண்ணீரால் மூழ்கடித்து அழிப்பதாகும்.

ஆனால் ஹமாஸ் படையினரால் பிடித்து வைக்கப்பட்ட பிணைக் கைதிகள் இந்த சுரங்க நகரத்திற்குள் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் இஸ்ரேலிய ராணுவத்திற்கு இது மிகப்பெரிய சவாலாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *