மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி போராட்டத்துக்கு அழைப்பு

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும், புனித ஸ்தலங்களிலும் கறுப்புக்கொடி ஏற்றுமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.

இன்று முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை இதனை நடைமுறைப்படுத்துமாறும் பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொழும்பில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் இங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

“நாளை போயா தினத்தன்று (28) இரவு 7.00 மணி முதல் 7.30 மணி வரை அரை மணி நேரம் மின் விளக்குகளை அனைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அந்த அரை மணி நேரம் அனைத்து மின் விளக்குகளையும் அனைத்து அரசாங்கத்துக்கு தமது எதிர்ப்பை தெரிவிக்குமாறும் மக்களிடம் கோரிக்கை விடுக்கிறோம்.

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக எதிர்வரும் நவம்பர் முதல் வாரத்தில் கொழும்பு – குருநாகல் பஹ வீதியில் திவுலப்பிட்டி பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக காலை 8.00 மணிக்கு மின் பாவனையாளர் சங்கம் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இணைந்து எதிர்ப்பு பேரணியை ஆரம்பிக்கவுள்ளன.

குறித்த பேரணி திவுலப்பிட்டியில் இருந்து கொழும்பில் அமைந்திருக்கும் பிளவர் வீதியில் உள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு வரை வருகைத்தர நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது.” எனவும் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கப்பட்ட மின் கட்டண உயர்வுக்கு எதிராக நேற்று (26 ) நாட்டின் பல இடங்களில் எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றன.

இந்நிலையில், வவுனியா மற்றும் மாத்தறை, கம்புருகமுவ பிரதேசத்திலும் மின் கட்டண உயர்வுக்கு எதிராக மக்கள் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த போராட்டங்களை தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்தது.

மின் கட்டண உயர்வு தொடர்பில் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் கருத்து வெளியிடுகையில்,

“தற்போதைய அரசாங்கம் இவ்வாண்டில் மாத்திரம் மூன்று முறை மின் கட்டணத்தை அதிகரித்துள்ளது.

பொதுமக்கள் நிம்மதியாக வாழ இதற்கு பின்னர் வழியேதும் இல்லை.” என தெரிவித்தார்.

இந்நிலையில், ஹட்டன் நகரிலும் தீப்பந்தங்களை ஏந்தியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் குறித்த எதிர்ப்பு போராட்டம் தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும், தேசிய மக்கள் சக்தி மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு போராட்டமொன்று மிரிஸ்வத்த பிரதேசத்திலும் இடம்பெற்றது.

இவ்வாறு, நாடளாவிய ரீதியில் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக பல எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. மின் கட்டணம் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டு வருவதால் பொது மக்கள் பாரிய அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *