பிரிட்டனிலும் ஐரோப்பாவிலும் யூதர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு அதிகரிப்பு

பிரிட்டனில் யூதர்களுக்கு எதிராக வெறுப்புணர்வுக் குற்றங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக லண்டன் மாநகரக் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 18ஆம் திகதிவரை லண்டனின் பல பகுதிகளில் யூதர்களுக்கு எதிராக 218 வெறுப்புணர்வுக் குற்றங்கள் பதிவானதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்தது.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 15ஆக இருந்தது.

அதேவேளை, முஸ்லிம்களுக்கு எதிராக 101 வெறுப்புணர்வுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 42ஆக இருந்தது.

இதன் தொடர்பில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்தது.

இந்நிலையில், ஐரோப்பாவிலேயே ஆகப்பெரிய யூதர் சமூகத்தைக் கொண்டுள்ள பிரான்சில், யூதர்களுக்கு எதிராக 320க்கும் அதிகமான குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளன.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கிய முதல் 10 நாட்களில் பிரான்சில் 180க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதாக தி கார்டியன் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் யூதர் வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், சமூக நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

தாங்கள் விழிப்புடன் இருப்பதாக பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலியில் உள்ள யூதர் சமூகங்கள் கூறியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *