பாலஸ்தீன பெண் எழுதிய கடைசிக் கவிதை!

காசாவில் இஸ்ரேலிய குண்டுத்தாக்குதலில் வெள்ளிக்கிழமை கொல்லப்பட்ட 32 வயதான பலஸ்தீனியப் பெண் கவி ஹெபா அபு நாடா எழுதிய கடைசிக் கவிதை

என் நண்பர்களின் பட்டியல்
சுருங்கி வருகிறது
நண்பர்கள்
சின்னச் சின்ன
சவப்பெட்டிகளாகிக் கொண்டிருக்கிறார்கள்
ஏவுகணைகளைவிட
வேகமாகப் பறந்திறக்கிற அவர்களை
என்னால்
மீட்க முடியவில்லை
காக்க முடியவில்லை
எனக்கு அழ முடியவில்லை
எனக்கு
என்ன செய்வதென்றும் தெரியவில்லை

ஒவ்வொரு நாளும்
என் நண்பர்களின் பட்டியல்
சுருங்கி வருகிறது
இது வெறும் பெயர்கள் அல்ல
வேறு பெயர்களிலும் முகங்களிலும் இருந்த
அவர்களும் நானே
நானும் அவர்களே

அல்லாவே
மாபெரும் இச் “சா” விருந்தில்
நான் என்ன செய்யமுடியும்

எந்தக் கொம்பனாலும்
கனவிலுங் கூட
என் நண்பர்களை மீட்டுத் தரமுடியாது
– ஹெபா அபு நாடா

ஹெபா புனித மெக்கா நகரில் 1991ல் பிறந்தவர். காசா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் Biochemistry படித்தவர். பின் Masters in clinical nutrition காசாவிலுள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் படித்தவர். ஒக்சிசன் இறந்தவர்களுக்கானதல்ல என்ற அரபு நாவலின் ஆசிரியர்.

ஹெபாவின் முகநூல் இணைப்பு ( https://www.facebook.com/profile.php?id=100002457890081&mibextid=ZbWKwL ). அவர் இறக்கும்போது அவரது முகநால் பதிவின் படி அவர் Single. அவர் கொல்லப்படுவதற்கு முதல் நாள் தன் முகநூலில் அறபியில் போட்ட பதிவுக்கு முகநூல் தந்த ஆங்கிலத்தைதே நான் மேலே தமிழில் தட்டுத்தடுமாறி தமிழில் மொழிபெயர்த்தேன். போர்க்களத்திலிருந்து அவா அவலத்தில் போட்ட ஒரு பதிவே கவித்துவமாகியிருக்கிறது. அறபி மொழியே இயல்பிலேயே கவித்துவமான மொழிதான். சுவர்க்கத்தில் ஹெபா நிச்சயமாக நம் ஈழப்பெண் கவிகளான செல்வியையும் சிவரமணியையும் சந்திப்பார். சுவர்க்கத்தில் வயதில்லை. இறக்கும்போதிருந்த வயதே எப்போதும். Eternal.

நன்றி- நட்சத்திரன் செவ்விந்தியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *