Local

மின் கட்டணத்தை 10 வீதம் அதிகரிக்க அனுமதி வழங்குமாறு கோரிக்கை

எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு மின்சார கட்டணத்தை 10 வீதத்தால் அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதாக இலங்கை மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் எதிர்பார்க்கப்படும் வருமானம் மற்றும் செலவினங்களுக்கு இடையிலான இடைவெளியை நிர்வகிப்பதற்கு இந்தக் கட்டணங்களை அதிகரிக்க வேண்டியது அவசியமானது என மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

மின்சாரக் கட்டணத்தை 22 வீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை சமர்ப்பித்த தரவுகளில் முரண்பாடுகள் காணப்படுவதன் காரணமாக, மின் கட்டணத்தை மீளக் கணக்கிடுமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அண்மையில் இலங்கை மின்சார சபைக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தது.

இதன்படி, இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் பதில் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

இதற்கமைய, கடந்த செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் உள்நாட்டு தனியார் மின் உற்பத்தியாளர்கள் அரச வங்கியொன்றில் இருந்து 32 வீத வட்டி அடிப்படையில் பெறப்பட்ட மேலதிக கடனாக 156,051 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி வரை, வெளி தரப்பினருக்கு செலுத்த வேண்டிய கடன் மற்றும் அசல் கொடுப்பனவுகளின் தொகை 421,818 மில்லியன் ரூபாவாகும் என மின்சார சபையினால் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2023 ஒக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் இலங்கை மின்சார சபையின் எதிர்பார்க்கப்படும் மொத்த வருமானம் 603,736 மில்லியன் ரூபாவாக இருக்கின்றபோதும், குறித்த காலப்பகுதியில் எதிர்பார்க்கப்படும் செலவினம் 622,478 மில்லியன் ரூபாவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மதிப்பிடப்பட்ட மேலதிக பற்றாக்குறை 18,742 மில்லியன் ரூபாவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading