பெலாரஸ் நாட்டு எல்லையில் இலங்கையர் சடலமாக மீட்பு!

கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த  ஒருவர் பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்விடயத்தை அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூர் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் யுகதீபன் என்ற நாற்பது வயது மதிக்கதக்க ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக அந்நாட்டு இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிரான்ஸ் நாட்டுக்கு செல்வதற்காக சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி விமானம் மூலம் ரஸ்யா சென்றுள்ளார். அங்கிருந்து பெலராஸ், போலந்து, ஜேர்மன் ஊடாக பிரான்ஸ் செல்வதற்காக பெலராஸிலிருந்து போலந்துக்கு சுமார் 700 கிலோ மீற்றர் தூரத்தை நடந்து கடப்பதற்காக  ஏழு பேர் கொண்ட குழுவுடன் சென்றுள்ளார்.

இதன்போது உடல் நிலை பாதிக்கப்பட்டு பெலராஸ் எல்லையில் உறவினர்களுடன் பேசியுள்ளார். தொடர்ந்து இவரது தொடர்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏனையவர்கள் இவரை விட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 7 ஆம் திகதி சனிக் கிழமை பெலராஸ்  எல்லையில் இருந்து சில கிலோ மீற்றர்கள் தொலைவில்  உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில்  வட்டக்கச்சியில் உள்ள மனைவியை தொடர்பு கொண்டு தன்னால் நடக்க முடியாதுள்ளது என்றும் தன்னை யாரேனும் காப்பாற்றினால் அன்றி  உயிர் தப்ப வேறு வழியில்லை என்றும் தெரிவித்தாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

அதுவே  அவர் இறுதியாக தொடர்பு கொண்டு பேசியது என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்படுபவர்கள், இவ்வாறான துன்பங்களையும், உயிரிழப்புக்களையும் எதிர்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *