ரிஸ்வானுக்கு எதிரான ‘ஜெய்ஸ்ரீராம்’ முழக்கம்: வலுக்கும் எதிர்ப்பு!

 

நேற்றைய இந்தியா – பாகிஸ்தான் போட்டியின்போது இந்திய ரசிகர்கள் சிலர் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானுக்கு எதிராக ‘ஜெயஸ்ரீராம்’ முழக்கம் எழுப்பியது சர்ச்சையாகியுள்ள நிலையில் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.

நடப்பு உலக கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. போட்டியில் முன்னதாக விளைஐயாடிய பாகிஸதான் 191 ரன்களில் சுருண்டது.

அந்த அணியின் வீரர் ரிஸ்வான் 49 ரன்களில் அவுட்டானார். அவர் மைதானத்திலிருந்து வெளியேறி பெவிலியனுக்கு நடந்து செல்லும்போது இந்திய ரசிகர்கள் சிலர் அவருக்கு எதிரான ‘ஜெய்ஸ்ரீராம்’ முழக்கத்தை எழுப்பிய காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, “முகமது ரிஸ்வானுக்கு எதிராக பார்வையாளர்கள் எழுப்பிய முழக்கங்கள் கீழ்த்தரமானது’’ என தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலே தனது ட்விட்டர் பக்கத்தில், “2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா நடந்த வேண்டும் என பிரதமர் மோடி விரும்புகிறார். ஆனால், பாகிஸ்தான் வீரருக்கு எதிராக ‘ஜெய்ஸ்ரீராம்’ என முழக்கமிடும் பார்வையாளர்களை பாஜக உருவாக்கியுள்ள நிலையில், சர்வதேச போட்டிகளை நடத்தும் அளவுக்கு நாம் தகுதி பெற்றுள்ளோமா என்ற கேள்வி எழுகிறது. நரேந்திர மோடி மைதானத்தில் இப்படியான நிகழ்வு நடைபெறுவதில் ஆச்சரியமில்லை” எனப் பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “ஒரு விளையாட்டு வீரராக தனது கடமையைச் செய்துவிட்டு, தலை நிமிர்ந்து மீண்டும் டிரஸ்ஸிங் அறைக்குச் சென்ற ஒழுக்கமான பாகிஸ்தான் வீரருக்கு மாபெரும் மரியாதை” எனப் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *