காசாவில் இடைவெளி இன்றி தாக்குதல் 1,20,000 பேர் வெளியேற்றம்

ஒரு நிமிட இடைவெளி கூட இல்லாமல் காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடந்துவருவதாகவும் அங்கிருந்து இதுவரை 1,20,000 இற்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்றுமுன்தினம் சனிக்கிழமை முதல் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திவரும் தாக்குதல்களால் இஸ்ரேல் தரப்பில் 700 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதில் 260 பேர் ஓர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள். இந்தத் தாக்குதல்களின்போது 100 இஸ்ரேலியர்கள் கடத்தப்பட்டு, காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

அதேபோல், ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் வான்வெளித் தாக்குதல்களால் காசா பகுதியில் வாழ்ந்து வந்த பாலஸ்தீனர்கள் 500 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேல் ராணுவம் தகவல்: இஸ்ரேலின் தெற்குப் பகுதியின் பல இடங்களில் ஹமாஸ் பயங்கரவாதிகளுடன் மோதல் தொடர்ந்து வரும் நிலையில், காசாவில் ஹமாஸின் 500 இலக்குகளில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

மக்கள் வெளியேற்றம்: இந்தப் போர் காரணமாக, பாலஸ்தீன பகுதிகளில் இருந்து இதுவரை 1,20,000 மக்கள் வெளியேறியுள்ளனர். காசா பகுதியில் 1,00,000 ரிசர்வ் துருப்புகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அங்கு 130 பேரை பிணைக் கைதிகளாக பாலஸ்தீனம் பிடித்துவைத்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

சமீப நாட்களில் இஸ்ரேலிய குடியேறிகள் அல் – அக்ஸா மசூதி வளாகத்தில் நடத்திய தாக்குதல் மற்றும் சமீப மாதங்களில் இஸ்ரேலால் குறிப்பிடத்தகுந்த அளவில் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டத்தை அடுத்து, ஹமாஸ் பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதல் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. பல தசாப்தங்களாக நடந்து வரும் இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஹமாஸ் பங்கரவாதிகள் நடத்திய ராக்கெட் வெடிகுண்டு தாக்குதல் சூழலை ரத்தக் களமாக்கியுள்ளது. இதற்கு, இஸ்ரேல் பதிலடியாக காசா பகுதிகளில் வான்வெளித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

‘ஹமாஸ் பயங்கரவாதிகளால் ஊடுருவப்பட்ட காசாவுக்கு அருகில் இருக்கும் தெற்கு பகுதியின் முழுக் கட்டுப்பாட்டையும் ராணுவம் மீண்டும் கைப்பற்றிவிட்டது. என்றாலும் சில இடங்களில் சண்டை தொடர்கிறது’ என்று இஸ்ரேலிய ராணுவ படையின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹக்கரி தெரிவித்துள்ளார்.

பயங்கர அனுபவம்: தாக்குதல் குறித்து காசா பகுதியில் வசிக்கும் ஒருவர் கூறுகையில், “மசூதிகள், வணிக வளாகங்கள், குடியிருப்புகளில் பதுங்கியுள்ள பாலஸ்தீனக் குடும்பங்களை நோக்கி இஸ்ரேல் வீசிய குண்டுகள் குறித்து விவரிப்பதற்கு வார்த்தைகள் தெரியவில்லை. முன்னெப்போதும் பார்த்திராத இரவு அது. நாங்கள் அரிதாகவே தூங்கினோம். அந்தச் சூழல் மிகவும் பயங்கரமானது. இது ஒரு தொடக்கம் என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில் ஒரு நிமிடம் கூட இடைவிடாமல் சுமார் 10 மணி நேரத்துக்கு குண்டுவீச்சுத் தொடர்ந்தது” என்றார்.

சனிக்கிழமையன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலை அமெரிக்கா மீது நடத்தப்பட்ட 9/11 தாக்குதல் போல உணருகிறோம் என்று இஸ்ரேலின் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், இந்தத் தாக்குதலை 1941-ஆம் ஆண்டு நடந்த போரில் ஹார்பர் நிகழ்வுடன் அவர் ஒப்பிட்டுள்ளார்.

‘ஹமாஸ்களின் தாக்குதல் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தை விட பயங்கரமானது, காட்டுமிராண்டித்தனமானது. ஹமாஸ் பயங்கரவாதிகளால் நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகளைக் கொல்லப்பட்டனர். பலரை காசாவுக்கு பணைக் கைதிகளாக கொண்டு சென்றுள்ளனர். இந்தல் கொடூரமான பயங்கரவாத செயலுக்கு தக்க பதிலடி கொடுத்தாக வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்’ என்று இஸ்ரேலிய பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மறுப்பு: ஹமாஸ் குழுக்களின் செயல்பாடுகளுக்கு ஈரான் நிதியுதவி அளித்து வருவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், தெஹ்ரான் தற்போதைய தாக்குதலில் ஈடுபடவில்லை என்று மறுத்துள்ளது.

இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட திடீர் தரை, வான்வழித் தாக்குதல்களில் அமெரிக்கர்கள் சிலரும் கொல்லப்பட்டதாக அந்நாடு தெரிவித்துள்ளது. மேலும், இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் விதமாக, பல போர்க் கப்பல்கள், விமானங்களை இஸ்ரேலுக்கு வழங்க அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. அதேபோல் தன் நாட்டு குடிமக்கள் 12 பேர் கொல்லப்பட்டதாகவும், 11 பேர் கடத்தப்பட்டதாகவும் தாய்லாந்து தெரிவித்துள்ளது. இதனிடையே பிரேசில், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, மெக்சிகோ, நேபாள் மற்றும் உக்ரைன் மக்களும் கொல்லப்பட்டிருக்கலாம், கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஹிஸ்புல்லா தாக்குதல்: இஸ்ரேலின் தென்பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகளுடன் ராணுவம் போரிடும் நேரத்தில், வடக்கு பகுதியில் லெபனான் எல்லையில் இருந்து மற்றொரு எதிரியான ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும் இஸ்ரேல் ராணுவம் மீது ராக்கெட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினர். அவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது. இருபுறமும் தீவிரவாதிகள் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியதால், எல்லைப் பகுதிகளில் போர் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.

முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நாடு போரில் ஈடுபட்டுள்ளதாகவும், காசாவில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு தெரிவித்துள்ளார். “நாங்கள் போரைத் தொடங்குகிறோம். ஹமாஸ் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலால் இந்தப் போர் மூண்டுள்ளது. இஸ்ரேல் எல்லைக்குள் ஊடுருவிய எதிரிப் படைகளை அழிக்கத் தொடங்கி உள்ளோம். இது இடைவிடாமல் தொடரும். இஸ்ரேல் குடிமக்களுக்கான பாதுகாப்பை மீட்டெடுப்போம். நாங்கள் வெற்றி பெறுவோம். காசாவில் வசிக்கும் பாலஸ்தீனியர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். இப்போதே அங்கிருந்து வெளியேறுங்கள். ஏனெனில், எங்கள் படையினர் தடையின்றி செயல்பட உள்ளனர்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஜோ பைடன் ஒப்புதல்: இஸ்ரேல் போர் பதற்றம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியபோது, “தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கும் கடமை, உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது. தீவிரவாத தாக்குதலை நியாயப்படுத்த முடியாது. இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிசெய்ய, அமெரிக்காவின் ஆதரவு கட்டாயம் உண்டு. இஸ்ரேலின் தேவை குறித்து கேட்டறியுமாறு அமெரிக்க பாதுகாப்பு குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

எகிப்து, துருக்கி, கத்தார், சவுதிஅரேபியா, ஜோர்டான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி, நிலைமையை தொடர்ந்து கண்காணிக்க பாலஸ்தீன அதிகாரிகளுடனும் தொடர்பில் இருக்குமாறு எனது குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்றார். இஸ்ரேலுக்கு 8 பில்லியன் டாலர் மதிப்பில் ராணுவ உதவி அளிக்கவும் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். “இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும்” என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஹமாஸுக்கு ஆதரவு: ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஈரான், சிரியா மற்றும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு ஆதரவாக உள்ளது. இவர்கள் அனைவருமே இப்பகுதியில் அமெரிக்காவின் கொள்கையை எதிர்க்கின்றனர். ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்தியில், “ஹமாஸ் தாக்குதல், ஆக்கிரமிப்பாளர்களின் முன்னிலையில் பாலஸ்தீன மக்களின் நம்பிக்கைக்கு சான்றாக உள்ளது. ஹமாஸ் அமைப்பினருக்கு பாலஸ்தீன பகுதி மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள இதர நாடுகளிலும் ஆதரவாளர்கள் உள்ளனர்” என தெரிவித்துள்ளது. ஹமாஸ் தாக்குதலால் பெருமிதம் அடைகிறோம் என ஈரான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் கூறியுள்ளன. இந்தச் சூழலுக்கு இஸ்ரேல்தான் பொறுப்பேற்க வேண்டும் என கத்தார் கூறியுள்ளது.

பின்னணி என்ன? – இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா பகுதி கடந்த 2007-ம் ஆண்டு ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் வந்தது. அப்போதிருந்து இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே பல மோதல்கள் நடந்துள்ளன. காசா எல்லையில் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் ராணுவம் மோதிக் கொள்ளும் சம்பவம் அடிக்கடி நடைபெறும். இந்த ஆண்டு நடந்த மோதலில் பாலஸ்தீனர்கள் 247 பேரும், இஸ்ரேலியர்கள் 32 பேரும், வெளிநாட்டினர் இருவரும் உயிரிழந்தனர்.

காசா பகுதியானது ஹமாஸின் கீழ் உள்ளது. இந்த அமைப்பை பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேல் கருதுகிறது. இவ்வமைப்புத்தான் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது என்பது இஸ்ரேலின் நீண்ட கால குற்றச்சாட்டு. ஹமாஸுக்கு தேவையான நிதி உதவிகளை ஈரான் செய்து வருவதாகவும் இஸ்ரேல் கூறி வருகிறது. ஆனால், ஈரான் மீண்டும் இப்போது மறுத்துள்ளது.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து காசாவைக் கைப்பற்ற முயற்சிக்கிறது என்பது பாலஸ்தீனத்தின் குற்றச்சாட்டு. இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொள்வதும் தாக்குதல் நடத்திக் கொள்வதும் தொடர்கதையாக இருக்கிறது. இஸ்ரேல் பதில் தாக்குதல்களை காசாவை நோக்கி நடத்துவதால் காசா மக்கள் எப்போதும் உயிர் பயத்துடன்தான் இருக்கிறார்கள் என்பது நடுநிலை நாடுகளின் கருத்து. பாலஸ்தீனர்களின் ஊடுருவலை தடுக்க காசா எல்லையை மூடும் நடவடிக்கையை இஸ்ரேல் அரசு தொடங்கியது. இது எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்தப் பின்னணியில்தான் இஸ்ரேலின் தென் பகுதியில் காசா எல்லையில் இருந்து பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் சனிக்கிழமை ராக்கெட் குண்டுவீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். பின்னர், காசா எல்லையின் தடுப்பு வேலிகளை குண்டு வைத்து தகர்த்து 22 பகுதிகளின் வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். எல்லை பகுதியில் இருந்து சுமார் 24 கி.மீ தூரம் ஊடுருவிய அவர்கள், இஸ்ரேலில் அப்பாவி மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதன் தொடர்ச்சியாக இஸ்ரேல் ராணுவம் தீவிர பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் உச்சத்தை எட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *