‘ஞானசார தேரரின் பொது மன்னிப்பு’ – சவாலுக்கு உட்படுத்திய மனுக்களை விசாரணைக்கு ஏற்றது உயர் நீதிமன்றம்

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் சிறையில் அடைக்கப்பட்ட , பொது பல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அளித்த பொது மன்னிப்பை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் விசாரணைக்கு ஏற்பதாக உயர் நீதிமன்றம் இன்று (4) அறிவித்தது.

நீண்ட பரிசீலனைகளின் பின்னர் இவ்விரு மனுக்களையும் விசாரணைக்கு ஏற்பதாக நீதியரசர் எஸ். துரைராஜா தலைமையிலான, யசந்த்த கோதாகொட, அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் அறிவித்தது.

அரசியலமைப்பின் ஊடாக உறுதி செய்யப்பட்ட சட்டத்தின் முன் அனைவரும் சமன் எனும் 12 (1) ஆம் உறுப்புரையின் கீழ் இரு மனுக்களையும் விசாரணைக்கு ஏற்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்தது.

மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களையுமே இவ்வாறு விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம் எதிர்வரும் 2024 மே 6 ஆம் திகதி விசாரணைக்கு திகதியிடப்பட்டது.

மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையம் தாக்கல் செய்த மனு சார்பில் சட்டத்தரணிகளான லசந்த குருசிங்க, கயதி விக்ரமநாயக்க ஆகியோருடன் சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரயா ஆஜராகும் நிலையில் சந்தியா எக்னெலிகொடவின் மனு சார்பில் சட்டத்தரணி ஹரினி ஜயவர்தன, புலஸ்தி ஹேவமான்ன ஆகியோருடன் சிரேஷ்ட சட்டத்தரணி அஸ்திக தேவேந்ரவும் ஆஜராகிறார்.

ஞானசார தேரருக்காக சட்டத்தரணி திஸ்ய வேரகொடவுடன் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஆஜரானதுடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்காக சட்டத்தரணி புலஸ்தி ரூபசிங்கவுடன் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா ஆஜராகின்றார்.

முன்னதாக பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றை அவமதித்ததாக கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அனைத்து குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அவரை குற்றவாளியாக கண்ட மேன் முறையீட்டு நீதிமன்றம் 19 வருட சிறைத் தண்டனை விதித்து கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி தீர்ப்பளித்தது.

நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட நான்கு குற்றங்கள் தொடர்பில் விதிக்கப்பட்ட இந்த 19 வருட சிறைத் தண்டனையை 6 வருடங்களில் அனுபவிக்க இதன்போது அப்போதைய மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதியும் தற்போதைய உயர் நீதிமன்ற நீதியரசருமான ப்ரீத்தி பத்மன் சுரசேன மற்றும் ஷிரான் குணரத்ன ( தற்போதைய உயர் நீதிமன்ற நீதியரசர் ) ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு கட்டளையிட்டிருந்தது.

2016 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில் ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற தனக்கு சம்பந்தமே இல்லாத வழக்கொன்றில் ஆஜராகி நீதிமன்றின் கெளரவம், சட்டத்தின் ஆட்சிக்கு சவால் விடுத்தமை ஊடாக மன்றை அவமதித்தமை, பீ 74/7/10 எனும் வழக்கு ( எக்னெலிகொட காணாமல்ஆக்கப்பட்டமை குறித்த நீதிவான் நீதிமன்ற வழக்கு ) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அதனை வழி நடாத்திய அரச சிரேஷ்ட சட்டவாதி திலீப பீரிஸை ( தற்போதைய சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் )அசிங்கமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி திட்டி அவமானப்படுத்தியமை, நீதிமன்றின் கட்டளைக்கு செவிசாய்க்காமை, நீதிமன்ற சுயாதீன தன்மைக்கு சவால் விடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் அரசியலமைப்பின் 105 ஆவது அத்தியாயத்துக்கு அமைவாக சட்மா அதிபரால் ஞானசார தேரருக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நான்கு குற்றச்சாட்டுக்களுமே சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தே தண்டனையளித்திருந்தது.

அதன்படி முதலாவது, இரண்டாவது குற்றங்கள் தொடர்பில் ஞானசார தேரருக்கு தலா 4 வருட கடூழிய சிறைத் தண்டனையையும், 3 ஆம் குற்றத்துக்கு 6 வருட கடூழிய சிறைத் தண்டனையையும், 4 குற்றத்துக்கு 5 வருட கடூழிய சிறைத் தண்டனையுமாக மொத்தம் 19 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனை 6 வருடங்களில் அனுபவிக்கவும் இதன்போது நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தண்டனையை அவர் அனுபவித்து வந்த நிலையிலேயே, பல தரப்பில் இருந்தும் ஞானசார தேரரை பொது மண்ணிப்பின் கீழ் விடுவிக்க கோரிக்கை வலுத்தது. இந்நிலையில் கடந்த 2019 மே மாதம் நடுப் பகுதியில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற அப்போதைய ஜனாதிபதி மைதிரிபால சிரிசேன, அங்கு வெலிக்கடை சிறை வைத்தியசாலையில் வைத்து ஞானசார தேரருடன் கலந்துரையாடியிருந்தார். அதன் பின்னர் 2019 மே 21 ஆம் திகதி சிறைச்சாலையிடமிருந்து விஷேட அறிக்கை கோரி 2019 மே 22 ஆம் திகதி அவரை விடுவிப்பதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டிருந்தார்.

இந்நிலையில் 2019 மே 23 ஆம் திகதி அந்த ஆவணம் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் மாலை வேளையில் அது சிறைச்சாலைகள் ஆணையாளரின் கைகளுக்கு கிடைத்திருந்தது. இதனையடுத்தே ஜனாதிபதி கையெழுத்திட்ட பொது மன்னிப்பு உத்தரவில் உள்ளதைப் போன்று ஞானசார தேரர் 2019 மே 23 ஆம் திகதி பூரணமாக விடுவிக்கப்பட்டார்.

இதனை ஆட்சேபித்தே உயர் நீதிமன்றில் இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவையே விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *