MGR ரிடம் மட்டுமே உள்ள தனித்துவமான குணம் ஜெயலலிதாவின் பதிவு!

“திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் மற்றவர்களுக்குக் கொடுக்கும் மரியாதை எப்போதும் குறையவே குறையாது. யாரிடமும் சமமாகப் பழகுவார். படப்பிடிப்புத் தளத்தில் தன்னைப் பற்றியும் தன் பாத்திரத்தைப் பற்றியும் மட்டுமே சிந்திக்துக் கொண்டிருக்க மாட்டார். செட்டில் தன்னோடு நடிக்கும் அத்தனை பேரையும் கவனித்துச் சொல்லிக் கொடுப்பார்.

அவர் குணத்துக்கு ஒரு சிறு உதாரணம்!

‘கண்ணன் என் காதலன்’ படப்பிடிப்பின் போது ஒரு நாள் காலை, அவருக்கு படப்பிடிப்பு முடிந்தது. காரில் ஏறப்போனவர் ‘மத்தியானம் என்ன எடுக்கப் போகிறீர்கள்?’ என்று கேட்டார்.

‘ஜெயலலிதா மாடிப்படியில் சக்கர நாற்காலியில் உருண்டு விழும் காட்சி’ என்றார் டைரக்டர்.

உடனே எம்.ஜி.ஆர் காரை விட்டு இறங்கிவிட்டார், ‘அதை எடுக்கும்போது நானும் இருக்கிறேன். அந்தக் காட்சி கொஞ்சம் ‘ரிஸ்க்’கானது! அந்தப் பெண் விழுந்து விட்டால்?…’ என்று சொல்லிக் கொண்டு எங்களுக்கு உதவி செய்ய வந்து விட்டார்.

படத்தில் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொணடு, தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில், மாடிப்படி ஓரம் – விளிம்பு வரை வரவேண்டும்.

ஓர் அங்குலம் தவறினால் உருண்டு விடுவேன்.

எம்.ஜி.ஆர். அவர்கள் தானே சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு பின்னால் கயிற்றைச் சரியாகக் கட்டச் சொல்லி, ஒன்றுக்குப் பத்து முறை தானே ஒத்திகை பார்த்து விட்டு அதில் அபாயம் இல்லை என்று நிரூபணமான பிறகுதான் என்னைச் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து நடிக்கச் சொன்னார்.

அரசியல், கட்சி, சமூக சேவை, சொந்தப் படம்… இப்படி பல வேலைகள் இருந்த போதிலும் அன்று எனக்காக சக நடிகையின் பாதுகாப்புக்காக எங்களோடு இருந்து, அந்தப் படப்பிடிப்பை நடத்திக் கொடுத்ததை எப்படி நான் மறப்பேன்?”

“ ‘வெண்ணிற ஆடை’யில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருந்த என்னையே ‘ஆயிரத்தில் ஒருவனி’லும் நடிக்க வைக்க வேண்டும் என்பது பந்துலுவின் விருப்பம்.

மெதுவாக என்னைப் பற்றி எம்.ஜி.ஆர். அவர்களிடம் சொல்லி விட்டார் பந்துலு. நான் நடித்த கன்னடப் படத்தை, தான் பார்க்க விரும்புவதாக அவர் சொன்னாராம்.

அவர் பார்த்துச் சம்மதம் தெரிவித்த பிறகுதான் என்னை நடிக்க வைப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று பேசிக்கொண்டார்கள். தியேட்டரில் அவர்களோடு உட்கார்ந்து நானும் கன்னடப் படம் பார்த்தேன்.

படம் முடிந்தது. எம்.ஜி.ஆர். அவர்கள் எழுந்து பந்துலு பக்கம் திரும்பி ‘சரி’ என்பது போலத் தலையை ஆட்டி விட்டுப் போனார். என வாழ்நாளிலேயே அன்றுதான் பெரும் சந்தோஷம் அடைந்தேன்!

“ ‘அடிமைப் பெண்’ படத்தில் என்னை நடிக்க அழைத்த போது எப்போதும் போல, கதாநாயகி வேடம்தான் இதிலும் என எண்ணி இருந்தேன். படத்தின் பூர்வாங்க வேலைகள் வெகு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.

கதைக்கேற்ப வில்லியாக வேறு ஒருவரை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார்கள். சொல்லப்போனால், எனக்கு அப்போது இரட்டை வேடம் கிடையாது.

பின்னர் –

“உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி நீயே இரட்டை வேடம் ஏற்று இதில் நடிக்கிறாயா?” என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.

இம்மாதிரியான சந்தர்ப்பம் வாய்க்காதா என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நான் இதை நழுவ விடுவேனா? முழுமனதுடன் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டேன்.

கதாநாயகி ஜீவா பாத்திரத்துடன் பட்டத்து ராணி பவளவல்லி (வில்லி)யாகவும் நடிக்கும் பெரும் வாய்ப்பை திரு.எம்.ஜி.ஆர். எனக்கு அளித்து விட்டார்.

வில்லிக்காக ஒரு ‘மானரிசம்’ அதாவது ஒரு தனிப்பட்ட சேஷ்டையைக் கைக்கொள்ளும்படியும் திரு.எம்.ஜி.ஆர். அப்போது கூறிவிட்டார்.

அதற்காக வீட்டில் கண்ணாடி முன்னால் நின்றுகொண்டு வில்லியாக நடிக்க ஒரு விசேஷ சேஷ்டையைப் பயிற்சி செய்தேன். நாலைந்து பாவனைகளைப் பழக்கத்துக்குக் கொண்டுவந்தேன்.

அந்த பாவனைப் பயிற்சிகளை திரு.எம்.ஜி.ஆர். முன் நடித்தும் காட்டியபோது, அதில் ஒன்றை இப்போது படத்தில் வரும், உதட்டை விரலால் வழித்து விடும் பாவனையைத் தேர்ந்தெடுத்தார்.

‘அடிமைப் பெண்’ படம் வளரத்தொடங்கியது முதல், அதில் தனிச்சிறப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. படக் காட்சியின் எல்லா அம்சங்களும் கலந்தாலோசனை செய்யப்பட்ட பிறகே காமிராவுக்குச் சென்றன.

தயாரிப்பிலே பங்கு பெற்ற அனைவரிடமும் ஒரு தனி உற்சாகம் நிறைந்திருந்ததையும் என்னால் உணர முடிந்தது.

என்னைப் பொறுத்தமட்டில், நான் இதுவரை சுமார் அறுபது படங்களில் நடித்து விட்டேன்.

ஆனாலும் ‘அடிமைப் பெண்’ணில், ஒவ்வொரு காட்சியிலும், நானே அனுபவித்து, ரசித்து நடித்தேன். என்னை அறியாமலேயே ஒரு தனி உற்சாகம் இதில் நடிக்கும்போது ஒட்டிக்கொண்டு விட்டது!”

– நன்றி: விகடன் பிரசுரம் வெளியிட்ட ‘புரட்சித் தலைவி ஜெயலலிதா’ புகைப்பட ஆல்பம் என்ற நூலிலிருந்து ஒரு பகுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *