Uncategorized

தொன்மையான தமிழ்: சில எதிர்ப்புகளும், எதிர்பார்ப்புகளும்!

 

“தமிழுக்கும் அமுதென்று பேர்”

– என்கிற பாரதிதாசனின் கவிதை வரிகளை வாசிக்கும்போது மொழி மீது ஒருவர் கொண்டிருக்கிற மோகம் வெளிப்படும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தின் பழைமையுடன் அப்போதே தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்கள் உருவாகும் அளவுக்கு வளம் தமிழில் இருந்திருக்கிறது என்றால், அதன் செம்மொழித் தகுதியைக் காலத்தின் இன்னொரு கரையில் இருக்கிற நம்மால் புரிந்துகொள்ளமுடியும்.

அந்த அளவுக்குப் பழைமையும், வளமும் கொண்ட மொழியாக மட்டுமல்ல, தமிழை அன்னையாகப் பார்க்கிற அளவுக்கு, தங்கள் உயிருக்கு நிகராகப் பார்க்கிற அளவுக்கு தமிழ்மொழி நம் மரபில் பிணைந்திருக்கிறது.

இந்தியாவில் மொத்தம் 1652 மொழிகள் பேசப்படுகின்றன. இதில் இந்திய அரசியல் சாசனம் அங்கீகரித்துள்ள மொழிகள் 18 மட்டுமே. இதில் தமிழும் ஒன்று. கூடுதலாகச் செம்மொழித் தகுதியும் அதற்குக் கிடைத்திருக்கிறது.

இதில் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளைப் பேசுகிறவர்கள் 25 சதவிகிதம் பேர். கால்டுவெல் போன்றவர்கள் வந்து திராவிட மொழிகளை ஆய்வு செய்த பிறகே தமிழின் தொன்மையை, பல திராவிட மொழிகளுக்குத் தாய்மையான மொழியாக தமிழ் இருப்பதை உணர்ந்தது வெளியுலகம், (1901 ஆம் ஆண்டில் நடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி அப்போது தமிழ்மொழி பேசிய மக்களின் எண்ணிக்கை 16,525,500).

இந்தியா, ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்தபோது இந்திய மொழிகளைக் கற்பிக்க நிதி உதவி வழங்கப்படவில்லை. சமஸ்கிருதத்தையும், அரபி மொழியையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வெளிப்பட்டபோது அதற்காக நிதி ஒதுக்குவது வீண் செலவு என்று மறுத்தார் அப்போது கல்வி கற்பிக்கும் குழுவிற்குத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தவரான மெக்காலே.

“தமிழ் மண்ணைப் பொறுத்தவரை வந்தாரை எல்லாம் தாராளமாகவே வரவேற்றிருக்கிறார்கள். பண்பாட்டிலும், மொழியிலும் ஒன்று கலந்திருக்கிறார்கள். கால்டுவெல் காலத்திலேயே தமிழில் பிறமொழிக் கலப்பு என்பது இயல்பாக நடந்திருக்கிறது.

முகமதியர் ஆட்சி இங்கு நிலவியபோது குஷி, கைதி, வாய்தா, ஜப்தி, ஜாமீன், தாசில்தார், வக்கீல் உள்ளிட்ட உருதுச் சொற்கள் தமிழில் கலந்தன.

சால்வை, லுங்கி, திவான், ரசீது போன்ற பாரசீகச் சொற்கள் வந்து கலந்தன.

போர்த்துக்கீசியரின் வருகையால் மேஜை, சாவி, அலமாரி, ஜன்னல், மேஸ்திரி, கடுதாசி போன்ற சொற்கள் ஊடுருவின.

டச்சுக்காரர்களின் வருகையால் துட்டு, பப்ளிமாஸ் போன்ற சொற்கள் வந்து கலந்தன.

பிரஞ்சுக்காரர்களால் லாந்தர், பட்டாளம், ஆஸ்பத்திரி போன்ற பிரஞ்சுச் சொற்கள் தமிழுடன் கலந்தன.

மராட்டியரின் ஆட்சியால் சேமியா, கிச்சடி, ஜாடி, கில்லாடி, ஜாஸ்தி, சலவை போன்ற மராத்தியச் சொற்கள் பேச்சுவழக்கில் வந்து கலந்தன.

ஆங்கிலேயரின் ஆட்சியால் சோப்பு, பேப்பர், பேனா, பென்சில் என்று பல ஆங்கிலச் சொற்கள் ஊடுருவின.

இப்படி அந்தந்தக் காலகட்ட அரசியலை ஒட்டி மொழியின் கட்டமைப்புக்குள் பல சொற்கள் கலந்து தமிழைப் போன்ற மயக்கம் தரும் சொற்களாகி அதன் அங்கமாகி விட்டன. தனித்தமிழ் இயக்கம் உருவாகி இம்மாதிரியான சொற்களின் கலப்பைச் சுட்டிக்காட்டி ஒதுக்கச் சொன்னாலும், அது பெருமளவுக்கு நடைமுறைக்கு வரவில்லை என்பதையும் இங்கே சுட்டிக்காட்டியாக வேண்டும்.

இருந்தும் தமிழகத்தில் ஆரம்பக் கல்வித் திட்டத்தில் இந்தியைப் புகுத்தி 1938-ல் ராஜாஜி தலைமையிலான அரசு உத்தரவு பிறப்பித்தபோது அதை எதிர்த்துக் குரல்கள் எழுந்தன.

பெரியாரில் துவங்கி அண்ணா, கி.ஆ.பெ. விஸ்வநாதம் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்துகொண்டு கைதானார்கள். பட்டுக்கோட்டை அழகிரி மற்றும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் தலைமையில் நடைப் பயணம் சென்றார்கள்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடராசன், தாளமுத்து இருவரும் சிறையிலேயே நஞ்சு அருந்தி உயிர் துறக்கிறார்கள்.

போராட்டம் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து 1940-ல் இந்தியைக் கட்டாயப்படுத்தித் திணிப்பது கைவிடப்பட்டது. இந்தவிதமான நிலையில் இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு 1948 ஆம் ஆண்டில் இந்திய ஆட்சி மொழி குறித்த விவாதம் நடந்தபோது பெரும் விவாதங்கள் நடந்தன.

இந்தியை ஆட்சிமொழியாக ஆக்குவது குறித்த வாக்கெடுப்பு நடந்தது. இந்தியை ஆதரித்து 72 வாக்குகளும், எதிர்த்து 72 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் தன்னுடைய வாக்கை இந்திக்கு ஆதரவாக அளிக்க, இந்தியை ஆட்சி மொழியாக்குவது குறித்த அறிவிப்புகள் வெளியாயின.

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைத் திணிக்கும் முயற்சிகள் நடந்தபோது இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் தீவிரமடைந்தது.

1952 ஆம் ஆண்டில் தனி மாநிலத்தைக் கோரி 58 நாட்கள் உண்ணாவிரதமிருந்த பொட்டி ஸ்ரீராமுலு மறைந்தபிறகு ஆந்திர மாநிலம் அமைந்து, தற்போதும் ஆந்திராவில் அவர் பல விதங்களில் நினைவு கூறப்படுகிறார்.

1957-ல் சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விருதுநகரில் 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தார் சங்கரலிங்கனார்.

ஆனால் அன்றைக்கு இருந்த காங்கிரஸ் அரசு அவருடைய குறைந்தபட்சக் கோரிக்கையைக் கூட பரிசீலிக்கவில்லை. அவர் மறைந்ததை நினைவுகூறும் விதத்தில் எந்தச் செயல்பாடுகளும் அமையவில்லை.

1965 ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி முதல் இந்தி ஆட்சி மொழி ஆகும் என்கிற அறிவிப்பு வந்ததும் அனலடித்ததைப் போல வீரியத்துடன் மாணவர்கள் மத்தியில் பரவியது போராட்டம். கருப்புக் கொடிகள் ஏற்றப்பட்டன. மாணவர்கள் மீது பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடந்தது.

சின்னசாமியைத் தொடர்ந்து சிவலிங்கம், அரங்கநாதன், கீரனூர் முத்து, விராலிமலை சண்முகம், சாரங்கபாணி, வீரப்பன் என்று அடுத்தடுத்துச் சிலர் உயிர் நீத்தார்கள்.

சிதம்பரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவர் ராசேந்திரன் பலியானார். மதுரை, சென்னை, தஞ்சை, திருச்சி, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், புதுவை என்று பல பகுதிகளில் தீவிரமடைந்த போராட்டம், ஏறத்தாழ 150 உயிர்களைப் பலி வாங்கியது. கடைசியில் ராணுவம் வரவழைக்கப்பட்டது. இந்தப் பிரச்சினை ஐ.நா.சபை வரை எதிரொலித்தது. பல கோடிக்கணக்கில் பொருட்சேதம் ஏற்பட்டது.

“இந்தி தெரியாத மாநிலத்து மக்கள் தாமாக கற்கும்வரை ஆங்கிலம் துணை மொழியாக நீடிக்கும்” என்ற நேருவின் வாக்குறுதி குடியரசுத் தலைவரால் மீண்டும் நினைவூட்டப்பட்டுப் போராட்டம் தணிந்தது.

அப்போது நாடாளுமன்றத்தில் ஆட்சி மொழி குறித்த விவாதத்தின்போது மத்திய அமைச்சர் “இந்தியை இங்கு ஆட்சி மொழியாக்க வேண்டும். இந்தியாவில் அதிக மக்கள் பேசும் மொழி இந்தி தான்” என்று இந்தி பேசுகிறவர்கள் எண்ணிக்கையை மையப்படுத்தி வாதிட்டபோது, அண்ணா அதற்கு அவருடைய பாணியில் சாதுரியமாகச் சொன்னார்.

“இந்தியாவில் காக்கைகளின் எண்ணிக்கைதான் அதிகம். அப்புறம் ஏன் மயிலைத் தேசியப் பறவையாக வைத்திருக்கிறீர்கள்?”

1967-ல் தமிழகத்தில் நடந்த ஆட்சி மாற்றத்துக்கான அடிப்படைக் காரணிகளில் ஒன்றாக இந்தி எதிர்ப்புணர்வும் இருந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக 1968 ஜனவரி மாதத்தில் தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பை ஒழிப்பதற்கான தீர்மானம் தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

தமிழும், ஆங்கிலமும் தமிழகத்தில் கற்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இவ்வளவு எல்லாம் நடந்தாலும் – தமிழ்நாட்டில் உரிய விதத்தில் ஆட்சி மொழியாகத் தமிழ் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதா? கல்வி மொழியாக, நீதிமன்ற வழக்காடு மொழியாக முன்னிறுத்தப்பட்டு இருக்கிறதா என்றால் பல கேள்விகளைத்தான் பதிலுக்கு எழுப்ப வேண்டியிருக்கிறது.

தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் அதிகரித்து ஆங்கில மயமாகி தமிழகத்தில் கல்வித் திட்டத்தில் தமிழ் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஆங்கிலம் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.

ஆங்கிலம் படிப்பதுதான் வாழ்க்கை மேம்பாட்டிற்கான வழி என்கிற மனநிலை சகல மட்டங்களிலும் எழுந்திருக்கிறது. தமிழகத்தில் தமிழை எழுதப் படிக்கத் தெரியாத இளைய தலைமுறை இன்றைக்கு உருவாகியிருக்கிறது.

தமிழ்நாட்டில் தமிழைப் படித்தால் என்ன பலன் என்கிற மனப்போக்கை இளைஞர்களிடம் உருவாக்கியதில் யார் யாருக்கெல்லாம் உண்மையில் பங்கிருக்கிறது? இந்த விளைவுக்காகவா மொழிப்போரில் அத்தனை உயிர்கள் பறிபோயின? அவர்களுடைய உணர்வுகளுக்குக் காலத்தின் சுழற்சியில் நாம் கொடுத்திருக்கிற அர்த்தம் என்ன?

இந்தி மீதான எதிர்ப்பு ஆங்கிலத்திற்கு தீவிர ஆதரவு தருவதில் போய் முடிந்திருக்கிறதா என்கிற கேள்வியை எழுப்பினால் மௌனத்தைத் தான் பதிலாகத் தரவேண்டியிருக்கிறது.

இந்தச் சமயத்தில் ஆங்கிலேய ஆட்சியில் கல்வித் திட்டத்துக்கான கற்பித்தல் குழுவின் தலைவரான மெக்காலே, 1835 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசுக்கு எழுதிக் கொடுத்த கல்விக் குறிப்பின் ஒரு பகுதியை இங்கு நினைவு கூர்ந்தாக வேண்டும்.

“நம்மால் நிச்சயமாக இந்நாட்டைச் சேர்ந்தவரை ஆங்கில அறிஞராக மாற்ற முடியும். அதனை நோக்கியே நம்முடைய முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இவர்கள் ரத்தத்தாலும், நிறத்தாலும் இந்தியர்களாகவும், அறிவு, ஒழுக்கம், ரசனை, கருத்து போன்றவற்றில் ஆங்கிலேயர்களாகவும் இருக்க வேண்டுமென்று நினைக்கிறோம்.”

மெக்காலேயின் கூற்றை எவ்வளவு தூரம் மொழிப் போர் நடந்த தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி இருக்கிறோம். ரத்தத்தாலும், நிறத்தாலும் தமிழர்களாகவும், கல்வியிலும், ரசனையிலும் ஆங்கிலேயர்களாகவும் எப்படியெல்லாம் இங்குள்ள மக்களை மாற்றி அமைத்திருக்கிறோம்.

மெக்காலேவுக்குத்தான் எத்தனை தீர்க்க தரிசனமான பார்வை!

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading