அல் கொய்தா தலைவரை கண்டுபிடித்தது எப்படி? காட்டிக் கொடுத்த நாளிதழ் படிக்கும் பழக்கம்!
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவா் அய்மான் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்ட சம்பவத்தில், அவரது நாளிதழ் படிக்கும் பழக்கமே அவர் இருக்குமிடத்தைக் காட்டிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
ஆப்கான் தலைநகா் காபூலில் அல்-கொய்தா தலைவா் அல்-ஜவாஹிரி (74), ஓா் இல்லத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டிருந்தாா். அந்த வீட்டைக் கண்டுபிடிக்க அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டது. அதில், அவரது அன்றாட பழக்கவழக்கங்கள் குறித்த விபரங்கள் பெரிதும் உதவியதாக ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஜவாஹிரி நாள்தோறும் அதிகாலையில், வீட்டு பெல்கனியில் யாரும் இல்லாமல் தனியாக அமர்ந்து நாளிதழ்களைப் படிக்கும் வழக்கம் கொண்டிருந்ததாகக் கிடைத்தத் தகவலையடுத்து, காபூலில் பெல்கனி கொண்ட வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.
பெல்கனி இருக்கும் வீடுகளைக் கண்டறிந்து, பிறகு அதில் அதிகாலையில் நாளிதழ் படிக்கும் நபர்கள் எனப் பிரித்து, பிறகு, நாளிதழ் படிக்கும் நபர், வீட்டை விட்டு வெளியேறாதவர் என்ற கோணத்தில் சிஐஏ மிகத் துல்லியமாக ஜவாஹிரி தங்கியிருந்த அந்த வீட்டைக் குறி வைத்தது.
அதன்படி, காபூலில் அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. சிஐஏ பறக்கவிட்ட ட்ரோன் அல்-ஜவாஹிரி இருந்த பெல்கனிக்கு அருகே சென்றது, அவர் இருப்பதை உறுதி செய்தது. பிறகு இரண்டு ஆண்டுகள் தேடுதல் பணி முடிந்தது.
வழக்கமாக, மிக முக்கிய பயங்கரவாதிகளைத் தேடும்போது, அவர்களது அன்றாட பழக்க வழக்கங்களை அடிப்படையாக வைத்தே, அவர்களைக் கொல்லும் திட்டமே தீட்டப்படும். அந்த வகையில்தான், ஜவாஹிரியின், பெல்கனியில் நாளிதழ் படிக்கும் பழக்கம் அவர் இருக்கும் வீட்டைக் கண்டறியவும் அவரைக் கொல்வதற்கான திட்டத்தைத் தீட்டவும் மிகக் கச்சிதமாக அமைந்துள்ளது.
ஏற்கெனவே, அல்-கொய்தா அமைப்பை நிறுவிய பின்லேடன் அமெரிக்க சிறப்புப் படையினரால் பாகிஸ்தானில் கடந்த 2011-ஆம் ஆண்டு கொல்லப்பட்ட நிலையில், தற்போது அல்-ஜவாஹிரியும் கொல்லப்பட்டுள்ளது அந்த அமைப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.