தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்!

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 120 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற பாகிஸ்தான், 2-0 என முன்னிலை பெற்றதுடன்  தொடரையும் கைப்பற்றியது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் 3 ஆட்டங்களை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முல்தானில் நடைபெறும் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணி 1-0 என முன்னிலை வகிக்க, நேற்று முன்தினம் நடந்த 2வது ஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 275ரன் குவித்தது. கேப்டன் பாபர் ஆஸம் 77,  இமாம்  உல் ஹக் 72 ரன் விளாசினர்.  வெ.இண்டீஸ் அணியின்  அகேல் உசைன் 3, அல்ஜாரி ஜோசப்,  ஆண்டர்சன் பிலிப்  தலா  2 விக்கெட் எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய  வெ.இண்டீஸ் 32.2 ஓவரிலேயே எல்லா விக்கெட்டையும் இழந்து 155 ரன்னுக்கு சுருண்டது. அதிபட்சமாக ஷாம்ரா புரூக்ஸ் 42, கைல் மேயர்ஸ் 33 ரன் எடுத்தனர். பாக். தரப்பில் முகமது நவாஸ் 4, முகமது வாசிம் 3, ஷதாப் கான் 2 விக்கெட் எடுத்தனர். 120 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற பாகிஸ்தான் 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் கடைசி ஒருநாள் ஆட்டம் இன்று நடக்கிறது. ஹாட்ரிக் வெற்றியுடன் வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்யும்  முனைப்பில் பாக். களம் காண உள்ளது.

ஏற்கனவே டிசம்பரில் நடந்த 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் வென்று ‘ஒயிட்வாஷ்’ செய்தது. அந்த தொடர் முடிந்ததும் பாகிஸ்தானில் கொரோனா பரவல் அதிகரித்ததால், ஒருநாள் போட்டித் தொடர் தள்ளி வைக்கப்பட்டது. அப்படி தள்ளி வைக்கப்பட்ட ஒருநாள் தொடர்தான் இப்போது நடக்கிறது. அதனால் ஒரு ஆட்டத்திலாவது வென்று கவுரவமாக ஊர் திரும்பும் ஆசையில் வெ.இண்டீசும் இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *