ஆண் குறைந்தபட்சம் 2 பெண்களையாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும்!

ஒரு குறிப்பிட்ட நாட்டில் இருக்கும் ஆண்கள், குறைந்தபட்சமாக இரு பெண்களையாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என புதிய விதிமுறையைக் கொண்டு வந்துள்ளதாகக் கடந்த காலத்தில் செய்தி வெளியாகி, இணையத்தில் பயங்கரமாக வைரலானது. இப்படி ஒரு நாட்டில் மட்டுமல்ல கிட்டத்தட்ட நான்கு நாடுகளில் இந்த செய்தி வைரலானது.

கடந்த 2016ஆம் ஆண்டு, இப்படி ஒரு வதந்தி எரித்ரியா நாட்டில் கிளம்பியது. இந்த புரளி ஈராக் நாட்டில் தான் முதன்முதலாகப் பரவியது.

‘நாட்டின் நலனைக் கருதி ஆண்கள் இரு பெண்களையாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும். அப்படிச் செய்து கொள்ளவில்லை எனில் கடுமையான தண்டனைக்கு ஆளாவர். கடும் சிறை வாசம் முதல் மரணம் தண்டனை வரை கூட வழங்கப்படலாம்’ என்கிற தொனியில், அரசு அறிக்கை போன்ற கடிதத்தில் தட்டச்சு செய்யப்பட்டு அந்தந்த நாட்டின் உயர் அதிகாரிகள் அல்லது அமைச்சர்கள் கையெழுத்திட்டது போன்ற கடிதங்கள் முதலில் சமூக வலைத்தளங்களில் உலவத் தொடங்கும்.

இது இணைய பிரபலங்கள் தொடங்கி செய்தி நிறுவனங்கள் வரை விவாதிக்கத் தொடங்குவர். அப்பாவி பொதுமக்கள் அல்லது அதிக படிப்பறிவு இல்லாத மக்கள், அந்த அறிக்கை உண்மை என நம்பி அச்செய்தியைப் பகிரத் தொடங்குவர். அதன் மூலம் மெல்லப் பொதுமக்கள் மத்தியில் பரவலாகும். அப்படித் தான் எரித்ரியா நாட்டிலும் ஒரு போலி அறிக்கை பரவத் தொடங்கியது.

ஒரு ஆண் இரு பெண்களையாவது மணந்து கொள்ள வேண்டும் என்கிற அறிக்கை தவறானது என எரித்ரியா நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக மறுக்கப் பெரிதும் சிரமப்பட்டது. மேலும் கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில், பலதாரமணம் சட்டப்படி தவறு என்பதையும் மக்களுக்கு எடுத்துரைக்கப் போராட வேண்டி இருந்தது.

மறுபக்கம் இந்த அறிக்கை உண்மையா பொய்யா என்பதைத் தாண்டி, அவ்வறிக்கையை மையமாக வைத்து இணையத்தில் பல ட்ரோல்கள் மற்றும் நகைச்சுவை காணொளிகள் பரவத் தொடங்கின.

இப்படி, ஒரு அதிகாரப்பூர்வ அரசு இரண்டாவது திருமணம் செய்து கொள்ள அல்லது இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வது தொடர்பாக வித்தியாசமான விதிமுறைகளைக் கொண்டு வரும் யோசனையை முன்வைத்திருக்கிறார்களா?

ஆம். அப்படி ஒரு கருத்தாக்கம் ஈராக் நாட்டில் பரிசீலிக்கப்பட்டது.

ஈராக் நாட்டில் கடந்த 2011ஆம் ஆண்டு, சில அரசியல்வாதிகள் இப்படி ஒரு யோசனையை முன்வைத்தனர். பல்லாண்டு கால போர் காரணமாக அந்நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டதாகவும், குறிப்பாகத் திருமணம் செய்து கொள்ளாத ஆண்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகக் கூறப்பட்டது. மேலும், கணவனை இழந்த பெண்களின் எண்ணிக்கை 10 லட்சத்துக்கு அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டது. எனவே இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் ஆண்களுக்கு அரசு ஊக்கத் தொகை கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அது நடைமுறைக்குக் கொண்டு வரப்படவில்லை.

மீண்டும் எரித்ரியா கதைக்கு வருவோம்.

இப்படி ஒரு புரளி கிளம்பியதால், எரித்ரியா சட்டம் ஒழுங்கு போன்ற விஷயங்கள் ஏதும் இல்லாத நாடு போல ஒரு பிம்பம் உருவானது. அதைக் களைய அப்போதைய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் யெமனெ கெப்ரமெஸ்கல் (Yemane Gebremeskel) தன் சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ந்து எரித்ரிய சட்ட திட்டங்கள் குறித்த விவரங்களைப் பதிவிட்டு, பலதாரமணம் ஒரு பொய் செய்தி என விளக்கி வந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *