ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உடல் கருகிப் பலி பெட்ரோல் வாங்கியவர் கைது!

நுவரெலியா – இராகலை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த தங்கையா என்பவரின் மகனான இரவீந்திரன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 7ம் திகதி இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராகலை தோட்டம் முதலாம் பிரிவில் தற்காலிக தனி வீடு ஒன்றில் இரவு 10.15 மணியளவில் தீ விபத்து இடம்பெற்றது. இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலியாகினர்.

இராமையா தங்கையா (வயது 61), அவரின் மனைவி செவனமுத்து லெட்சுமி (வயது 57), மகளான தங்கையா நதியா (வயது 34) இவரின் பிள்ளைகளான, துவாரகன் (வயது13), மோகன்தாஸ் ஹெரோசன் (வயது 01) ஆகியோரே தீயில் கருகி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நான்கு நாட்களாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. விசாரணையில் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர்.

சம்பவம் இடம்பெற்ற தினத்தில் இராகலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவீந்திரன் பெட்ரோல் வாங்கியுள்ளமை பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், வீடு தீப்பற்றி எரிந்த போது அணைக்க வந்த மக்களிடம் வீட்டில் யாரும் இல்லையென பொய் கூறியதாகவும் பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *