ஒட்சிசன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரிப்பு!

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் கொவிட்-19 நோயாளர்களில் பலருக்கு ஆபத்தான அறிகுறிகள் தென்படுகின்றன.
இவர்களில், சுமார் 20 சதவீதமானோர் ஒட்சிசன் தேவையுடையவர்களாக உள்ளனர் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினரான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை, கொவிட்-19 வைரஸின் நான்காம் அலை உருவாவதற்கான ஆரம்பக் கட்டத்தை நெருங்கியுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்டா திரிபு மிக வேகமாக பரவுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவரான விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பொதுமக்களும், அரசாங்கமும் மிக அவதானத்துடன் செயற்பட்டு, பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த காலத்தை விட தற்போது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்திருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.