விளையாட்டாக தொடங்கிய முகநூல் கள்ளக் காதல் கொலையில் முடிந்தது!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பாந்தனூர் பகுதியில் வசித்து வரும் மோகனன் என்பவரின் மனைவி ரேஷ்மாவுக்கு கடந்த மாதம் பெண் குழந்தை வீட்டிலேயே பிறந்தது.

ஆனால் கணவர் மற்றும் வீட்டில் யாருக்கும் தெரியாமல், ரேஷ்மா அன்று இரவே கழுத்தை நெரித்து பச்சிளம் குழந்தையைக் கொலை செய்து குழிதோண்டி புதைத்து விட்டார்.

குழந்தை குறித்து மோகனன் கேட்டபோது, பிறந்தவுடன் அது இறந்து விட்டதாக கூறினார்.
ஆனால் ரேஷ்மா மீது சந்தேகம் அடைந்த மோகனன் விசாரித்தபோது, குழந்தையைக் கொலை செய்து புதைக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து பாந்தனூர் காவல் நிலையத்தில் ரேஷ்மா மீது மோகனன் புகார் செய்தார்.

இந்தப் புகாரின்பேரில் பாந்தனூர் காவல்துறையினர் ரேஷ்மாவிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரேஷ்மாவுக்கு முகநூல் மூலம் அனந்து என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் நேரில் சந்திக்காமலேயே காதலித்து வந்துள்ளனர்.

அனந்துவைத் திருமணம் செய்ய ரேஷ்மா ஆசைப்பட்டபோது அதற்கு குழந்தை இடையூறாக இருக்கும் எனக் கருதி, ரேஷ்மா தான் பெற்றெடுத்த குழந்தையைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

இந்நிலையில் குழந்தையைக் கொலை செய்ய ரேஷ்மாவை தூண்டியதாக, அனந்துவைக் கைது செய்ய காவல்துறையினர் தீர்மானித்தனர்.

எனவே அனந்துவின் செல்போன் செயல்பாட்டை காவல்துறையினர் ஆய்வு செய்து அவரைத் தேடி வந்தனர். ஆனால் அவர் சிக்கவில்லை.

இதற்கிடையே காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ரேஷ்மாவுடன் முகநூல் மூலம் அனந்து என்ற பெயரில் பேசி பழகியது 2 பெண்கள் (ஆர்யா, சுருதி) என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

அந்தப் பெண்கள் குறித்த விசாரணையில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இருவரும் களுவாதிகள் என்ற ஊரை சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் ரேஷ்மாவிடம் ஆண் குரலில் பேசி நடித்துள்ளதும் தெரியவந்தது.

ஒரே குரலில், 2 பெண்களும் ஆண் போல பேசியது கூட தெரியாத ரேஷ்மா அனந்து தன்னை உண்மையாகவே காதலிப்பதாகக் கருதி ரேஷ்மாவும் காதலிக்க தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், கள்ளக் காதலனை மணப்பதற்காக ரேஷ்மா, பெற்ற குழந்தையைக் கொலை செய்த விவரம் பத்திரிகைகளில் வெளியானது.

இந்தச் செய்தியைக் கண்ட அந்த இரு பெண்களும் இந்த வழக்கில் காவல் துறையினர் தங்களை கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதனால், அவர்கள் இருவரும் அங்குள்ள ஆற்றில் குதித்து தங்களது உயிர்களை மாய்த்து கொண்டது காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

விளையாட்டாக தொடங்கிய முகநூல் பழக்கம், விபரீதத்தில் முடிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *