உலகின் மிகப்பெரிய கடல் உயிரினம்!

உலகம் முழுவதும் அனைத்து வெப்பக் கடல்களிலும் காணப்படும் மிக பிரம்மாண்டமான கடல் உயிரினம் யானைத் திருக்கை (Manta Ray) மீன். திருக்கை இன மீன்களில் மிகப்பெரியது இந்த யானைத் திருக்கை மீன் தான்.

சுறா, திருக்கை, வேளா, இழுப்பா, உழுக்கு போன்ற மீனினங்கள் அனைத்தும் குருத்தெலும்பு கொண்டவை. ஆனைத்திருக்கையும் எலும்பற்ற, குருத்தெலும்பு கொண்ட ஒரு கடல்மீன்.

அதுபோல, சுறா இனத்தைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய மீனான அம்மணி உழுவைக்கு, யானைத் திருக்கை ஒருவகையில் உறவுக்கார மீன்.

ஆனைத்திருக்கைகளில் 7 வகைகள் உள்ளன. இதில் மிகப்பெரிய திருக்கை பெருங்கடல்களில் சுற்றித்திரியும் பழக்கம் கொண்டது. இது 23 அடி அகலமும், 2 ஆயிரம் கிலோ எடையும் இருக்கலாம்.

யானைத் திருக்கைகளில் மிகவும் சிறியது பார்க்கடல்களையே சுற்றிச்சுற்றி வந்தபடி இருக்கும். நெடுந்தொலைவுக்கு இது வலசை போகாது. இந்த சிறியவகை ஆனைத்திருக்கை 11 அடி அகலமும், ஆயிரத்து 400 கிலோ எடையும் இருக்கலாம்.

யானைத் திருக்கை இனத்தின் மேல்பகுதி கறுப்பாகவும், அடிப்பகுதி வெண்மையாகவும் விளங்கும்.

உடலின் அடிப்பகுதியில் யானைத்திருக்கைக்கு செவுள்கள் இருக்கும். கடல்நீரில் மூழ்கி நீந்தும்போது கடல்நீரை செவுள்கள் வழியாக உள்ளே இழுத்து அதில் உள்ள உயிர்க்காற்றைப் பயன்படுத்தி யானைத்திருக்கை மூச்சுவிடுகிறது.

யானைத்திருக்கை தொடர்ந்து இப்படி கடல்நீரை காற்றாக்கி மூச்செடுக்க வேண்டுமானால் அது ஓரிடத்தில்கூட நிற்காமல் போய்க்கொண்டே இருந்தாக வேண்டும்.

ஆகவே ஆனைத்திருக்கை நிற்பதோ, தூங்குவதோ, கடலடியில் ஓய்வெடுப்பதோ இல்லை. யானையைப் போலவே எப்போதும் அசைந்து கொண்டே இருக்கும் உயிர் இது.

யானைத்திருக்கையால் பின்னோக்கி நீந்த முடியாது. ஆகவே பெரிய வலைகளில் சிக்கினால் மூச்செடுக்க முடியாமல் யானைத்திருக்கை இறக்க நேரிடலாம்.

யானைத்திருக்கை மீன், பறவை பறப்பதுபோல மிகவும் திறமையாக நீந்தக்கூடியது. சிறகுபோன்ற அமைப்பால் இது நீரைப் பின்னுக்குத் தள்ளி நீந்தும். யானைத் திருக்கையின் கீழ்த்தாடையில் மட்டுமே உள்ள பற்கள் இரையை சவைக்க பயன்படுகிறது.

மற்றபடி, திருக்கை மீன்களுக்கு இருப்பதுபோன்ற நஞ்சுள்ள முள் எதுவும் யானைத் திருக்கையிடம் கிடையாது. வாலால் இது அடிக்கவும் செய்யாது.

யானைத் திருக்கையின் முக்கிய உணவு கடலில் உள்ள பிளாங்டன் எனப்படும் கவுர்கள்தான்.

கண்ணுக்குத் தென்படா விதத்தில் கடல்நீரில் கலந்திருக்கும் சின்னஞ்சிறு நண்டு, கணவாய், இறால் போன்ற ஒளியுமிழக்கூடிய கவுர் என்ற நுண்ணுயிர்களே இதன் இரை.

பார்வையாலும், மோப்பத்தாலும் கவுர்களை தேடிப்பிடித்து யானைத்திருக்கை அவற்றை உணவாக்கும்.

இதன் பிரம்மாண்டமான வாய் ஒரு பெரிய கடல்நீர் வடிகட்டி போன்றது. கவுர்களைச் சுற்றிச்சுற்றி வந்து அவற்றை ஒன்றுதிரட்டி இறுக்கமான பந்தாக்கி தனது வாயைத் திறந்து அந்த பந்தை யானைத்திருக்கை உள்ளே வரவைக்கும்.

அப்போது தனது கொம்புகளால் இரையை வாய்க்குள் இது வழிநடத்தும். பின்னர் அந்த கடல்சூப்பை யானைத்திருக்கை சுவை பார்க்கும்.

தனது உடல் எடையில் 13 விழுக்காடு அளவு உணவை ஒரே வாரத்தில் யானைத் திருக்கை உண்ணக்கூடியது. கவுர்களைத் தவிர, சிறுமீன்களையும் இது உணவாக்கும்.

மீன் இனங்களில் மிகப்பெரிய மூளை கொண்ட மீன் யானைத் திருக்கைதான். மூளையின் உதவியால், தன் உடலை இது வெதுவெதுப்பாக, கதகதப்பாக வைத்துக் கொள்ளும்.

50 முதல் நூறாண்டு காலம் வரை யானைத் திருக்கையால் உயிர் வாழமுடியும். 20 வயதில் இது பருவமடையும். பெண்மீன் தனது சாயலில் குட்டியைக் கருவாக சுமந்து ஒன்று அல்லது 2 குட்டிகளை ஈனும்.

மனிதர்களுக்கு எந்தவகையிலும் ஆபத்தற்ற மீன் யானைத் திருக்கை. ஆனால் சீண்டிவிட்டால் ஒருவேளை இது மனிதர்களைத் தாக்கக்கூடும்.

கடல்மேல் பாய்ந்து தொப்பென விழுவது யானைத்திருக்கையின் பழக்கம். தன் உடலில் உள்ள ஒட்டுண்ணிகளையும், தன்னுடன் ஒட்டிக் கொண்டு உடன்வரும் உருவு மீன்களையும் கழற்றிவிட யானைத் திருக்கை இப்படி கடல்மேல் இறைந்து விழலாம்.

அல்லது வேடிக்கைக்காகவோ, மற்ற மீன்களுடன் தகவல் தொடர்புக்காகவோ, பெண் மீனைக் கவரவோ யானைத் திருக்கை இப்படிச் செய்யலாம்.

கடலில் யானைத் திருக்கையின் எதிரி சிலவகை சுறாக்கள்தான். யானைத் திருக்கையின் உடல்களில் அங்கங்கே சுறாக்கள் கடித்த காயங்களை அடிக்கடி காணமுடியும்.

ஆனால், அந்த காயங்கள் விரைவில் ஆறி, மீண்டும் தன் அன்றாட வாழ்க்கையைப் புத்தம் புதிதாகத் தொடங்கிவிடும் யானைத் திருக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *