ரணில் – மைத்திரி பசு மாடு மற்றும் எருமை மாடு போல் இரண்டு பக்கம் ஆட்சியை இழுத்தனர்!

மொட்டுச் சின்னத்தின் போர்வையில் நாடாளுமன்றத்திற்குள் வர துடிக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அடுத்த பாய்ச்சல் என்ன என்பது குறித்து கூடிய கவனத்துடன் இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இருள் சூழ்ந்த மற்றும் தோல்வியான ஆட்சியாக ரணில் – மைத்திரி அரசாங்கம் வரலாற்றில் இடம்பெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இம்முறை பொதுத் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வேலை செய்யக் கூடிய அரசாங்கத்தை தெரிவு செய்ய வேண்டியது மக்களின் பொறுப்பு.

நல்லாட்சி என்ற பெயரில் நாட்டை அழித்தவர்கள் தற்போது புனிதர்கள் போல் நடந்து கொள்கின்றனர். 2015ஆம் ஆண்டு பொய்களை கூறி ஆட்சி வந்தவர்கள் நாட்டை அழித்தனர்.

ரணில் – மைத்திரி ஆகியோர் பசு மாடு மற்றும் எருமை மாடு போல் இரண்டு பக்கம் இழுத்தனர். மத்திய வங்கியை கொள்ளையிட்டனர். பழிவாங்கினர்.

மகிந்த ராஜபக்சவின் பிள்ளைகள் மற்றும் சகோதர்களை சிறையில் அடைத்தனர். பௌத்த பிக்குகள், இராணுவத்தினர் மற்றும் அரச ஊழியர்களை பழிவாங்கினர்.

2015ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை நாட்டின் பொருளாதாரத்தை பூஜ்ஜியத்திற்கு கொண்டு சென்று நாட்டில் மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு உயிரூட்ட முயற்சித்தனர்.

நல்லாட்சி அரசாங்கம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகளை போஷித்த காரணத்தினால், அண்மையில் நாட்டின் பிரதான நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்களை நடத்தினர்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பிராந்தியத்தை அமைக்கும் அரசியல் அமைப்புத் திருத்தங்களை கொண்டு வந்தது யார்?

அப்படி செய்த நல்லாட்சி அரசாங்கத்தின் நபர்கள் தற்போது புனிதர்கள் போல் நடந்து கொள்கின்றனர். ஈஸ்டர் தாக்குதல் நடக்கும் முன்னர் இந்திய புலனாய்வுப் பிரிவினர் அது குறித்து அறிவித்திருந்தனர்.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியும் பிரதமரும் இதனை அறிந்திருந்தனர். பொலிஸ் மா அதிபர் அறிந்திருந்தார்.

இந்த தாக்குதலை தடுக்க கடந்த அரசாங்கத்தின் ஜனாதிபதியும் அரசாங்கம் என்ன செய்தனர். எமது நாட்டு மக்களை பழி கொடுத்தனர்.

நல்லாட்சி அரசாங்கத்தை போன்று நாட்டுக்கு கெடுதல் செய்த அரசாங்கம் வரலாற்றில் இருந்ததில்லை.

அன்று நாங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆரம்பித்த போது எங்கள் வீதி வீதியாக அலைய விட போவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.

கட்சியை ஆரம்பித்தால் பார்த்துக்கொள்ளலாம் எனக் கூறினார். அப்படி கூறிய மைத்திரி தற்போது மொட்டுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுகின்றார் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *