சீனாவில் மருத்துவமனையின் பணிப்பாளர் கொரோனா வைரஸால் பலி

சீனாவில் கொரோனா வைரஸால் அதிக பாதிப்புகளுக்கு முகங்கொடுத்து வரும் வுஹானில் உள்ள மருத்துவமனையின் பணிப்பாளர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதித்து இதுவரை 1,900 பேர் பலியாகியுள்ளனர். 72,000 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வுஹானில் உள்ள வுசாங் மருத்துவமனையின் பணிப்பாளர் லியு ஸிமிங் (Liu Zhiming) கொரோனா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை மரணமடைந்தார். அவரைக் காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட அனைத்து விதமான மருத்துவ சிகிச்சைகளும் பலனளிக்காமல் போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தொற்றுக்கு கடந்த வாரத்தில் மட்டும் மருத்துவத்துறையில் பணியாற்றும் 6 பேர் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் இதுபோன்ற தொற்றுப் பரவக்கூடும் என்று எச்சரித்த வுஹானை சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் லி வென்லியாங், தவறான தகவல்களைப் பரப்புவதாகக் கூறி சுகாதாரத்துறை அதிகாரிகளால் தண்டிக்கப்பட்டிருந்தார். பின்னர் மருத்துவர் லி வென்லியாங்கும் கொரோனா பாதித்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இவ்விரு மருத்துவர்களின் மரணமும் முதலில் ஊடகங்களில் வெளியிடப்பட்டு, பிறகு நீக்கப்பட்டு, மீண்டும் உறுதி செய்யப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *