ஐ.தே.க. தொடர்ந்து இழுத்தடித்தால் மாற்று நடவடிக்கையில் குதிப்போம்! – ஹெல உறுமய எச்சரிக்கை

“ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் இழுத்தடிப்புப் போக்கைக் கடைப்பிடிக்குமானால் மாற்று நடவடிக்கையில் இறங்குவோம்.”

– இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளரான அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் கடந்த சனிக்கிழமை கூடி ஆராய்ந்தோம். சர்ச்சையை ஏற்படுத்திய விடயங்களுக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது.

எனவே, கூட்டணியையும், ஜனாதிபதி வேட்பாளரையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பதற்கான சரியான தருணம் இதுவே. ஆனாலும், இழுத்தடிப்பு இடம்பெற்று வருகின்றது.

எமது பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு என்பதால் இனியும் இழுத்தடிக்காமல் அறிவிப்பை விடுக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியிடம் கேட்டுக்கொள்கின்றோம். அவ்வாறு இல்லாவிட்டால் மாற்று நடவடிக்கையில் இறங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றோம்.

மாற்று வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க களமிறங்கியுள்ளார். அவருக்கு எமது வாழ்த்துக்கள். ஆனாலும், ராஜபக்சக்களை தோற்கடிப்பதற்கான சக்தி அவர்களுக்கு இல்லை. அதனைச் செய்வதற்கு பலமானதொரு ஜனநாயகக் கூட்டணி அவசியம். அதற்காகவே நாமும் காத்திருக்கின்றோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *