அரசமைப்புப் பேரவை ஏற்றுள்ள அதிகாரப் பகிர்வுக் கோட்பாடே ஐ.தே.கவின் ஒரே நிலைப்பாடு! – யாழில் ரணில் அறிவிப்பு

“அதிகாரப் பகிர்வு தொடர்பாக அரசமைப்பு பேரவை தனது அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ள கொள்கைக் கோட்பாடே தமிழர்களின் எதிர்பார்ப்புத் தொடர்பான ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே நிலைப்பாடாகும். இந்த நாட்டின் தமிழினம் இலங்கை ஜனநாயகக் குடியரசு என்ற கட்டமைப்புக்குள் சமத்துவமாக, கெளரவமாக, சுயமரியாதையுடன், தங்களின் விடயங்களைத் தாங்களே முடிவெடுத்துக் கையாண்டு வாழவேண்டும் என்பதே எமது நம்பிக்கை.”

– இவ்வாறு அறிவித்தார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க.

“அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிகாட்டல் குழுவின் மூல அறிக்கையில் அதிகாரப் பகிர்வு தொடர்பான கொள்கைகள், கோட்பாடுகள் என்ற தலைப்பில் 16 அம்சத் திட்டம் வரையப்பட்டிருந்தது. பல்வேறு கட்சிகளுடனும் நடந்த கலந்துரையாடல்களின் பின்னர் அரசமைப்புப் பேரைவையாகக் கூடிய நாடாளுமன்றத்துக்கு, வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த இடைக்கால அறிக்கையில், எல்லாத் தரப்புகளும் ஏற்று இணங்கிக் கொண்ட – அதிகாரப் பகிர்வுக்கான அம்சங்கள் என 14 விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றையே தமிழர்களின் அபிலாஷைகளுக்கான தமது கட்சியின் நிலைப்பாடு” என்று நேற்றுப் பகிரங்கமாக உறுதிப்படுத்தினார் ரணில் விக்கிரமசிங்க.

யாழ். குருநகர் கூட்டத்தில் நேற்று அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் முக்கிய பொருளாதார மையமாக இலங்கைஅடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் மாறவேண்டும். நான் முதல் தடவையாக இங்கு வந்தபோது யாழ்ப்பாணம் பொருளாதாரத்தில் முன்னணியில் இருந்தது. இன்று அந்த நிலைமை இல்லை. நாட்டின் ஏனைய பகுதிகளுடன் சேர்ந்து யாழ்ப்பாணமும் பொருளாதாரத்தில் முன்னணிக்கு வரவேண்டும்.

அரசியல் தீர்வை நோக்கிய எமது பயணத்தில் பொருளாதார மீட்சியும் – எழுச்சியும் ஒரு முக்கிய அம்சமாகும்.

எண்பதாயிரம் ஏக்கர் நிலம் மக்களின் மீளளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் 900 ஏக்கர் உட்பட இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தை மீளளிப்பது தொடர்பான விவகாரமே சர்சையில் உள்ளது. அதையும் நாம் படிப்படியாக விடுவிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

கைதிகள் (அரசியல் கைதிகள்) விடயத்தில் பெரும்பான்மையானோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எண்பது, தொண்ணூறு பேரே – சொற்ப எண்ணிக்கையினரே உள்ளனர். அவர்களின் மேன்முறையீடுகளுடன் கணிக்கும்போது அவர்கள் 15 வருடங்களுக்கு மேல் – ஓர் ஆயுள் தண்டனைக் காலத்துக்கு மேல் சிறையில் உள்ளனர். அந்தப் பிரச்சினையையும் நிரந்தரமாகத் தீர்ப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

காணாமல்போனோர் விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதற்காக நாம் காணாமல்போனோருக்கான அலுவலகத்தைத் திறந்துள்ளோம். அவர்கள் தமது யாழ்ப்பாண அலுவலகத்தை எதிர்வரும் 24ஆம் திகதி திறக்கவுள்ளனர். இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலகத்தையும் நாம் திறந்துள்ளோம்.

புரிந்துணர்வு நடவடிக்கையில் ஓரளவு முன்னேறியிருக்கின்றோம். அதனால் ‘இலங்கையர்’ என்று நம்மை நாங்கள் அனைவரும் அடையாளப்படுத்தும் ஒரு பொதுமைப்பாடு ஓரளவு மீண்டும் மேலோங்கியிருக்கின்றது என்பேன்.

அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதுவும், அதை நாம் எப்படி முன்கொண்டு செல்லப் போகின்றோம் என்பதுவும்தான் இப்போது முக்கியமான விடயங்கள். காணப்படும் தீர்வு இறுதியில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இந்த விடயத்தில் எனது கட்சியின் நிலைப்பாடு யாது என்று கேட்கப்பட்டுள்ளது.

நாட்டின் இறைமை, ஒருமைப்பாடு ஆகியவை தொடர்பில் சுமந்திரனுக்கும் மாவை சேனாதிராஜாவுக்கும் உள்ள அதே சிரத்தை எமக்கும் உண்டு.

இந்த நாட்டில் தமிழினம் இலங்கை ஜனநாயகக் குடியரசு என்ற கட்டமைப்புக்குள் சமத்துவமாக, கௌரவமாக, சுயமரியாதையுடன் தங்களின் விடயங்களைத் தாங்களே தீர்மானித்து முன்னெடுக்கக் கூடியதாக வாழவேண்டும் என்பதே எனது நம்பிக்கையாக உள்ளது.

அதற்காகத்தான் அதிகாரப் பரவலுக்கான ஏற்பாடுகளுக்குரிய அரசமைப்புப் பேரவை நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்தோம். அதில் நாங்கள் கணிசமான தூரம் முன்னேறியுள்ளோம். அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த பெரும்பான்மையான யோசனைகளுடன் நாம் முழு அளவில் இணங்கிப்போயிருக்கின்றோம். இது தொடர்பில் நாங்கள் – ஐக்கிய தேசியக் கட்சி – எந்த யோசனைத் திட்டத்தையும் முன்வைக்கவில்லை. அப்படி முன்வைத்தால் அது உங்களின் (கூட்டமைப்பின்) திட்டத்துக்கும் யோசனைக்கும் எதிரானதாக அமைந்துவிடும் என நாம் கருதினோம்.

அதனால் கூட்டமைப்பின் யோசனைத் திட்டங்களை நாம் எதிர்பார்த்தோம். அவற்றில் சொற்ப விடயங்களைத் தவிர ஏனையவற்றில் நாம் உடன்பாடு கண்டுள்ளோம்.

அதிகாரப் பரவலாக்கலுக்கான கொள்கைகள், கோட்பாடுகள் இப்போது அரசமைப்புப் பேரவையின் அறிக்கையில் எழுத்தில் உள்ளன. நான் அந்தக் குழுவின் தலைவன். அந்தக் கொள்கைக் கோட்பாடுதான் எங்கள் நிலைப்பாடு. அதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

இப்போது எங்களுக்கு உள்ள பிரச்சினை ஒன்றுதான். அதை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மையை நாங்கள் எப்படிப் பெறுவது என்பதுதான் அது.

நாங்கள் ஓர அரசைக் கொண்டு நடத்துகின்றோம். அதை முன்னெடுப்பதற்கான பெரும்பான்மைகூட எங்களுக்குத் தேர்தல் மூலம் கிட்டவில்லை. ஏதோ ஒரு வகையில் நான்கு வருடங்களாக நாம் அந்த அரசைக் கொண்டிழுக்கின்றோம். அவ்வளவுதான். அதற்குக் கூட எம்மிடம் பெரும்பான்மை இல்லை.

தெற்கிலும், கிழக்கிலும் அண்மையில் குண்டுகள் வெடித்தன. ஆனால், தெற்கில் சில இடங்களில் அதைத் தொடர்ந்து நடந்த திட்டமிட்ட இன வன்முறைகள் போன்ற இரத்த ஆறு தமிழ்ப் பகுதிகளில் ஓடவில்லை. அது கவனிக்கத்தக்க உண்மையான நிலைமை.

முதலாவதாக, அரசமைப்புப் பேரவையில் முன்வைக்கப்பட்ட அதிகாரப் பகிர்வுக்கான கொள்கைக் கோட்பாட்டை நாம் முழுமையாக ஆதரிக்கின்றோம். அதை மேலும் மேம்படுத்துவதற்காக நாம் உழைக்கின்றோம்.

தேசிய கொள்கைகளுக்கு அமைவாக மாகாண சபைகள் தங்கள் அதிகாரங்களைத் தனித்துவமாகப் பிரயோகிக்கவேண்டும். அந்த அதிகாரங்கள் பறிக்கப்படக் கூடாதவையாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

காணி அதிகாரம் உட்பட பல விடயங்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலானவற்றில் பொதுவான இணக்கப்பாடும் காணப்பட்டுள்ளன.

அதனை நிறைவேற்றுவதற்கு குறிப்பிடத்தக்களவு கணிசமான பெரும்பான்மையை நாங்கள் பெறவேண்டும். அதை மக்கள் எமக்குத் தரவேண்டும்.

அதிகாரப் பகிர்வு தொடர்பில் நாம் அதீத அளவில் இணக்கம் கண்டுள்ளோம். ஆனால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதில் எமக்குள் இன்னும் இணக்கம் வரவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்மைப்பு, ஜே.வி.பி. ஆகியன அதை ஒழிக்க விரும்புகின்றன. மறுபுறத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதனை வரவேற்கவில்லை.

அடுத்தது தேர்தல் முறைமைச் சீர்திருத்தம். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தால் ஸ்திரமான நாடாளுமன்றம் அவசியம். அந்த நாடாளுமன்றத்துக்குப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் தேர்தல் முறைமை குறித்துக் கருத்து முரண்பாடுகள் உள்ளன.

இவை அனைத்தையும் உள்ளடக்கியதான ஓர் அரசமைப்பையே புதிதாக நாம் கொண்டுவரவேண்டும். அது அவசியமானது.

13ஆவது அரசமைப்புத் திருத்த உருவாக்கத்தில் நான் சம்பந்தப்பட்டிருக்கிறேன். அதிகாரப் பகிர்வு தொடர்பான பல கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருக்கிறேன். புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான அரசமைப்புப் பேரவைக்குத் தலைமை வகித்திருக்கின்றேன்.

இப்போதுதான் நாம் (தீர்வுக்கு) மிக நெருக்கி வந்திருக்கின்றோம். இடைவெளி கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளது.

நாம் மூன்றுமட்ட ஆட்சி நிர்வாக மட்டத்தைக் கொண்டுள்ளோம். மத்திய அரசு, மாகாண சபை, உள்ளூராட்சி சபைகள் ஆகியன அவை.

அரசியல் பிரதிநித்துவ முறைமை மூலம் கிராம மக்கள் தங்களைத் தாங்களே நிர்வகிக்கும் கிராம இராஜ்ஜியமே உள்ளூராட்சி சபைகள்.

தமிழ் மக்களை ‘ஹலோ ஸேர்’ என்று அழைக்கும் மரியாதை பற்றி நான் பேசவில்லை. அதையும் தாண்டி, இலங்கையில் அரசியல் கட்டமைப்பு முறைமை ஒன்றுக்குள் தமிழர்கள் தங்களின் விவகாரங்களைத் தாங்களே கையாளக் கூடிய வகையில் கௌரவத்துடனும் சுய மரியாதையுடனும் சமத்துவமாகவும் வாழக்கூடிய ஓர் ஒழுங்கு முறையை ஏற்படுத்துவதே ஐக்கிய தேசியக் கட்சியினதும் அதன் தலைவனான எனதும் ஒரே நிலைப்பாடாகும்.

எல்லா இனங்களும் பாதுகாப்புடன் வாழக்கூடியமையை உறுதிப்படுத்தும் அத்தகைய அதிகாரப் பகிர்வு முறைமைக்கான கோட்பாடுகள் அரசமைப்புப் பேரவையின் அறிக்கையில் கொள்கைகளாகப் பதியப்பட்டுள்ளன. அதுவே எமது நிலைப்பாடு” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *