ரமபோஷாவுடன் ரணில் கட்டுநாயக்கவில் பேச்சு!

வெளிநாட்டு விஜயம் ஒன்றின்போது இடைநடுவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடைத்தங்கலை மேற்கொண்டிருந்த தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷாவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இந்திய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் அமைதியை உறுதி செய்தல் மற்றும் இலங்கையில் புதிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தினமன்று இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் குறித்தும் தென்னாபிரிக்கா ஜனாதிபதி இதன்போது தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.

ஜி 20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜப்பான் சென்ற வழியில் அவர் இன்று இலங்கை வந்திருந்தார். அவருடன் 20 பேரைக் கொண்ட குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையம் வந்திருந்தனர். இந்தக் குழுவினரை வரவேற்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்குச் சென்றிருந்தனர்.

தென்னாபிரிக்க ஜனாதிபதி அந்த நாட்டின் இராணுவத்துக்குச் சொந்தமான விசேட விமானத்தில் வந்திருந்தார். இந்த விமானத்துக்குத் தேவையான எரிபொருள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிரப்பப்பட்டது.

முற்பகல் 10.20 மணிக்கு வருகை தந்த தென்னாபிரிக்க ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் பிற்பகல் 12.30 மணியளவில் கட்டுநாயக்கவிலிருந்து பயணமானார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *