Lead NewsLocal

விமல், எஸ்.பிக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் ரிஷாத் இன்று முறைப்பாடு!

மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோருக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் முறைப்பாடு ஒன்றைப் பொலிஸ் தலைமையகத்தில் இன்று (07) பதிவு செய்தார்.

“தீவிரவாத இயக்கத்துடனும் சஹ்ரான் ஹாசீமுடனும் என்னைத் தொடர்புபடுத்தி மீண்டும் மீண்டும் பொய்ப் பிரசாரங்களை கட்டவிழ்த்து வரும் இவ்விரு அரசியல்வாதிகளும் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் அப்பட்டமான பொய். இவை தொடர்பிலேயே முறைப்பாட்டைப் பதிவு செய்தேன்” என்று ரிஷாத் எம்.பி. தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எனது அமைச்சின் கீழ் இருந்த சதொச நிறுவனத்தின் வாகனங்கள் சஹ்ரானின் நாசகார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டன எனவும், அவரது தீவிரவாதச் செயற்பாடுகளுக்கு நான் உதவி செய்தேன் எனவும் விமல் வீரவன்ச முழுப்பொய்யைக் கூறியதுடன் கிளிப்பிள்ளை போன்று திரும்பத் திரும்ப அதே பொய்யைப் பரப்புகின்றார். விமலுக்கு முதுகெலும்பு இருந்தால் இதனைச் சாட்சியங்களுடன் நிரூபிக்குமாறு சவால் விடுக்கின்றேன்.

அதேபோன்று கடந்த ‘ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சி’யின்போது 52 நாட்கள் ஆட்சியில் இருந்த மஹிந்த அரசுக்கு எனது உதவியைக் கேட்டு, அது சாத்தியப்படாததால் விரக்தி அடைந்த எஸ்.பி.திஸாநாயக்கவும் ஊடகங்களில் வந்து தினம் தினம் எனக்கு எதிராகப் பொய்க் குற்றச்சாட்டுக்களைக் கக்குகின்றார்.

இவ்விருவரும் மீண்டும் அதிகாரத்துக்கு வரும் நப்பாசையிலலேயே இந்தப் பொய்யான கருத்துக்களைக் கூறி வருகின்றனர்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னர் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளுடன் சம்பந்தப்பட்ட கடும்போக்கு தீவிரவாதிகளை உசுப்பேற்றியவர்கள் இவர்களே.

நாட்டில் மீண்டும் ஓர் இனக்கலவரம் ஏற்படக்கூடாது என்ற உண்மையான எண்ணத்துடன் முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளைத் தூக்கியெறிந்து, போலிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் மீதான சுயாதீன விசாரணைக்கு வழிவகுத்துள்ளனர் என்பதை அனைவரும் கவனத்தில்கொள்ள வேண்டும்” – என்றார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அமீர் அலி, அப்துல்லா மஹ்ரூப், இஷாக் ரகுமான், இஸ்மாயில் மற்றும் மேல் மாாகண சபை உறுப்பினர் பாயிஸ் ஆகியோரும் ரிஷாத் பதியுதீனுடன் முறைப்பாட்டைப் பதிவு செய்ய பொலிஸ் தலைமையகத்துக்கு வந்திருந்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading