FeaturesUp Country

மலையக மக்களுக்காக குரல்கொடுத்த பீரங்கிப் பேச்சாளர் டி.எம்.பீர் முஹம்மது

மலையகத் தோட்டத்தொழிலாளர்களின் உரிமைக்களுக்காக பலபேர் அன்று குரல் எழுப்பியிருந்தாலும் – போராட்டங்களை நடத்தியிருந்தாலும் ஒருசிலர் மாத்திரமே இன்றளவிலும் பேசப்படுகின்றனர். சிலர் காணாமல்போனோர் பட்டியலில் இணைந்துவிட்டனர். இலக்கியத்துறையிலும் இதேகதிதான்.

இவர்களும் எமக்காக ஏதோவொரு வகையில் போராடியவர்கள்தான். எனவே, வரலாறுகளிலிருந்து திட்டமிட்ட அடிப்படையில் மறைக்கப்பட்டவர்களையும் நாம் நினைவுகூரி, அவர்களின் புகழை உலகறியச்செய்யவேண்டும்.

அந்தவகையில் மலையக மக்களுக்காக எழுத்தாயுதம் ஏந்தி போராடிய அதுவும் முஸ்லிம் நாவலாசிரியர் ஒருவர் தொடர்பான பதிவே இது.

‘கங்காணி மகள்’, ‘சதியில் சிக்கிய சலீமா’ ஆகிய நாவல்களை வாசித்துள்ளீர்களா? மலையக மக்களுக்காகவே வெளிவந்த ‘நவஜீவன்’ பத்திரிகை பற்றி தெரியுமா? இவையெல்லாம் அவரின் அயராத உழைப்பின் வெளிப்பாடுகள். மலையகம் தொடர்பில் பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

ஆம். தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினை உச்சகட்டத்திலிருந்த காலப்பகுதியில்தான் – 1949 ஆம் ஆண்டு மே தினத்தன்று தமிழக திருநெல்வேலிச்சீமை கல்லிடைக் குறிச்சியின் மண்ணின் மைந்தன் டி.எம்.பீர் முஹம்மது என்கிற டியெம்பி கொழும்பில் கால்வைக்கிறார்.

அவர் ஈ.வெ,ரா, பெரியாரின் சுயமரியாதைக்காரராக, தி.மு.க தீவிரராக, அறிஞர் அண்ணா பக்தராக மிளிர்பவர்.

இலங்கையில் 13 ஆண்டுகள் (1962 ஆம் ஆண்டுவரை) வாழ்ந்தபோதும் ஊடகவியலாளர், எழுத்தாளர், கவிஞர், நாவலாசிரியர், எனப் பரிணமித்துடன் மலையகப் பீரங்கிப் பேச்சாளர் என ஒரு புரட்சிகர பெயரையும் பெற்றார்.

அவர் இங்குவர 7 மாதங்கள் இருக்கையில் மலையக மக்களுக்கென ஒரு தனித்துவ செய்தி இதழ் இல்லாப் பெருங்குறையைப் போக்க-  தொழிலாளர் முன்னேற்றத்திற்குத் தொண்டுபுரிய –  சிறந்த வாரப் பத்திரிகை என முன்பக்கத்தில் கட்டியம் கூறிக்கொண்டு ‘நவஜீவன்’ என்ற பெயர் தாங்கி நாலே பக்கங்களில் பத்தே சதம் விலையில் ஓரிதழ் வெளிவந்தது.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியாகி அன்றே தோட்டங்களுக்கு சென்றது. “பத்திரிகையின் சொந்தகாரர் நிர்வாக ஆசிரியர் எஸ்.கே. காளிமுத்து” என அறிவிக்கப்பட்டது. (இவரும் இந்திய வம்சாவளியே)

இதழ் வெளியாகி ஏழெட்டு மாதகாலம் ஆன சமயத்தில்தான் டியெம்பி வருகை  நிகழ்ந்தது. அவரை எவ்வாறு “நவஜீவன்” நடப்பாக்கிக் கொண்டான் என்பதை அப்துல் அஸீஸ{க்கு எழுதிய நுலில் (1992) 8ஆம் பக்கத்தில் ஓரிரு வரிகளில் இப்படி குறிப்பிட்டுள்ளார்.

“ நவஜீவன் வார இதழின் நிர்வாக ஆசிரியரான காளிமுத்து ஏற்கனவே ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதனால் என்னை பத்திரிகை ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக் கொண்டார்.

அதன்படி நவஜீவன் வார இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்று திறமையாகப் பணியாற்றினேன். இதன்படி ஒரேநேரத்தில் பீரங்கிப் பேச்சாளராகவும் பேனாச் சக்கரவர்த்தியாகவும் ஒரு பீர்மஹம்மது தோற்றம் பெற்றார்.

“நவஜீவன்” முதலாம் ஆண்டுபூர்த்தியை நெருங்கிக் கொண்டிருந்த சமயத்திலிருந்து ஐந்தாம் ஆண்டு பிற்பகுதி (1953.08.16) வரை ஊடக சேவை புரிந்து பிரமிப்பூட்டியுள்ளார்.

நாலே பக்க “நவஜீவன்” அவரது தலையங்கங்களாலும், பரப்பரப்பு செய்திகளாலும் தோட்டங்கள் எங்கும் எதிரொலித்தன. அத்தோடு தோட்டச் செய்திகளை மட்டும் பிரசுரித்த ஏடாக அது இல்லை. வார இதழ் என்ற இலக்கணத்திற்கு அமைய முன் பக்கத்திலேயே முக்கிய கவிதை!

“காந்தி நாமாவளி” ஆ.முத்தையா (07.10.1951) இரண்டாம் பக்கத்தில் தலையங்கமும் கட்டுரையும்! (‘கல்லிடைத் தம்பி’- ‘பீரங்கி’) புனைப்பெயர்களில் கைவண்ணம்! மூன்றாம் பக்கத்தில் கேள்வி- பதில். நான்காம் கடைசிப்பக்கத்தில் ‘நமது தீர்ப்பு’- புத்தகத் திறனாய்வுகள் (இவையெல்லாம் அவர் தான்)

இவ்வாறு அவர் 16.08.1953 வரையில் ஆசிரியராகத் திகழ்ந்த பின் அடுத்த 3 மாதங்கள் இதழியல் பணியிலிருந்து ஓய்வு.

இருப்பினும் இலக்கியத்துறை ஈடுபாடும் கலை விழாக்கள், தொழிற்சங்கக் கூட்டங்கள் என்றும் பம்பரமாகச்சுழன்று கொண்டே இருந்தார். அப்போதும் உதயகுரியனாகப் புறப்பட்டிருந்ததிமுக வார்ச்சிக்கான பிரசாரக் கூட்டங்களில் இவர் முக்கிய பேச்சாளர்,

1985 ஆம் ஆண்டு மே மாதம் மீண்டும் பற்றிக்கொண்டது பத்திரிகைப் பணி. இப்பொழுது “நண்பன்”. இலங்கைக்கு வந்தபுதிதில் யார் முதலில் நண்பமாக அவருக்கு வாய்த்தாரோ அவரே யட்டியாந்தோட்டை கே.ஜி.எஸ். நாயர். அந்தப் பெயரில் டியெம்பியை வார இதழ் ஆசிரியராக்கி நடத்தும் முடிவுக்கு வந்தார்.

அடுக்குமொழியில் தலைப்பிடுவார். “சம்பளத்தைக் குறைத்து சமருக்கழைக்காதீர்” என அவர் இட்ட தலைப்பை என்றும் மறந்திடமுடியாது.

இவ்வாறு ‘நவஜீவன்’, ‘நண்பன்’ இதழ்களில் ஆசிரியராக இருந்த அந்த ஆளுமையாளர் தன் சேவைகளை 60 களில் முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பிவிட்டார்.

மலையகத் தமிழர் சுபீட்சத்திற்காகவும், முஸ்லிம்களின் தாய் மொழி தமிழே என எழுதியும் பேசியும்வந்த ஒரு மனித்துவமிக்க பீர்முகம்மது என்ற பீரங்கிப் பேச்சாளரை, இலக்கிய வித்தகரை நம் மலையக சமூகம் நிச்சயம் போற்றவேண்டும். எழுத்துமூலம் சமூகவிடுதலைக்குரிய விதையை மக்கள் மனங்களில் விதைத்தவர்.

1955 ஆம் ஆண்டுதான் அவர் எழுதிய ‘கங்காணி மகள்’ நாவல் வெளிவந்தது. விலை வெறும் ஒரு ரூபாதான். மேற்படி நாவலைப்பற்றி ஒரு நல்ல திறனாய்வையும் ‘ நண்பன்’ பத்திரிகை 1955 இல் வெளியிட்டிருந்தது.

தேயிலைக்காட்டில் பெண்கள் கொழுந்து பறித்துக் கொண்டிருக்கும் காட்சியை நல்ல மூவர்ணக் கலரில் முகப்பில் பொறித்திருக்கின்ற இந்தப் புத்தகத்தில், ஆசிரியர் கங்காணி மகளை ஓர் ‘லட்சியப் பெண்மணியாகவும், தமிழ் மரபு குன்றா மங்கையாகவும் சிருஷ்டித்திருக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழ் மணி மானா மக்கீன்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading