போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ள அரசிடம் திராணியே கிடையாது! – சரவணபவன் எம்.பி. காட்டம்

“போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்வதற்கு இலங்கை அரசியல் தலைவர்களிடம் திராணி கிடையாது. 2015ஆம் ஆண்டில் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத் தொடுநர்களை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றப் பொறிமுறை ஒன்றை உருவாக்க இணங்கிவிட்டு 2018ஆம் ஆண்டு அதனைச் செய்யமாட்டோம் என்று பின்வாங்கியதுடன் அதன் மூலம் நாட்டின் சுயாதீனம் பாதுகாக்கப்பட்டது என்று சொன்னவர்கள்தானே இவர்கள்! இத்தகையவர்களிடம் இருந்து நீதி எதிர்பார்ப்பது ஒருவேளை இந்த நாட்டு மக்களின் முட்டாள்தனமான செயலாகத்தான் இருக்கும்.”

– இவ்வாறு சபையில் காட்டமாகக் கருத்து வெளியிட்டார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.

நாடாளுமன்றத்தில் நேற்றுச் சனிக்கிழமை நடைபெற்ற வரவு – செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சரவணபவன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் சபையில் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“இந்தச் சபையின் வருடாந்த நிதி அறிக்கையின் மீது நடக்கும் விவாதங்களின் போது ஊடகத்துறை விவாதங்களில் கடந்த 9 ஆண்டுகளாகத் தவறாமல் உரையாற்றி வருகின்றேன்.

அதிலும் குறிப்பாகக் கடந்த நான்கு வருடங்களாக , அதாவது இந்த ஆட்சியில் நிதி அறிக்கையின் ஊடக அமைச்சு தொடர்பான விவாதத்தில் தவறாமல் கலந்துகொள்கின்றேன். ஒரு ஊடக நிறுவனத்தை தலைமை தாங்குபவன் என்ற அடிப்படையிலும் ஊடகவியலாளர்களுடன் நெருங்கிப் பழகுபவன் என்ற அடிப்படையிலும் இந்த வாய்ப்பைத் தவறவிடக்கூடாது என்று நினைப்பவன் நான்.

ஆனால், இப்பொழுது உங்கள் முன் பேசுகின்ற இந்த நேரத்தில், இவ்வாறு இந்த உயரிய சபையில் உரையாற்றுவதால் பயன் ஏதாவது உண்டா என்கிற அங்கலாய்ப்பு எழுகிறது. இதுபோன்ற பெரும்பான்மைப் பிடிவாத அரசுகளின் சபைகளில் ஏனைய இனங்களுக்கும் மதங்களுக்கும் மக்களுக்கும் நீதி கிடைக்கப்போவதில்லை என்கிற ஆணித்தரமான உண்மை பெரும் பாரமாக என் ஆன்மாவை அழுத்துகின்றது; கவலைகொள்ள வைக்கின்றது. அதேநேரத்தில் எமது உணர்வுகளையும் ஆதங்கங்களையும் பதிவு செய்து வைப்பதற்கு இதைவிட வேறு வழியுமில்லை என்பதனால் இந்த உரையை இங்கே ஆற்றவேண்டியவனாக இருக்கின்றேன்.

ஊடகங்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்து என்னைப் பொறுத்தவரையில், மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்கும் தற்போதைய ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கும் இடையில் எந்தவேறுபாடும் இல்லை என்பதே கடந்த 4 ஆண்டுளில் கண்ட முடிவு. மஹிந்தவின் ஆட்சியில் நடந்த ஊடக அடக்குமுறையும் ஊடகவியலாளர்கள் படுகொலையும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதலும் இந்த ஆட்சியில் இல்லையே என்று நீங்கள் வரிந்துகட்டிக் கொண்டு வரலாம்.

ஆனால், அன்றைய ஆட்சியாளர்கள் தமது செயல்கள் மூலம் ஏற்படுத்திவிட்டுப் போன அச்சம், பயம், சுயதணிக்கை என்பவற்றை முற்றாக நீக்கிவிடக்கூடிய சூழலை ஏற்படுத்ததத் தவறியதன் மூலம் அல்லது அத்தகைய சூழலை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு இருந்தும் அதனை முற்றாகப் புறக்கணித்ததன் மூலம் குற்றவாளிகளைத் தப்பவிட்டு அச்சத்தையும் சுயதணிக்கையையும் தொடரச் செய்ததன் மூலம் மஹிந்த அரசுக்கும் ரணில் அரசுக்கும் பெரிய வேறுபாடுகள் ஏதும் இருப்பதாக எனக்குப்படவில்லை.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் குற்றவாளிகளைத் தப்பவிடும் போக்கு (999) குறித்தும் சர்வதேச அளவில் பெருமெடுப்பில் பேசப்பட்டது. இத்தகைய போக்கை மனித உரிமை அமைப்புக்கள் கடுமையாகக் கண்டித்தன. ஆட்சி மாற்றத்தின் போதும் இன்றைய ஆட்சியாளர்களால் அதிகளவில் பேசப்பட்டவிடயமாகவும் இது இருந்தது.

ஆனால், ஆட்சியைப் பிடித்த கடந்த 4 ஆண்டுகளில் நீங்கள் என்ன செய்தீர்கள்? ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்த, ஊடக நிறுவனங்களைத் தாக்கிச் சேதப்படுத்திய ஒரேயொரு குற்றவாளியையாவது கண்டுபிடித்தீர்களா? அதற்கான உண்மையான முயற்சிகளாகவது எடுக்கப்பட்டதா?

கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று நான் கடந்த 4 ஆண்டுகளாக இந்தச் சபையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன். கண்துடைப்பாக லசந்த விக்கிரமதுங்க மற்றும் பிரகீத் எக்னெலிகொட ஆகியோரின் வழக்குகளை மட்டும் விசாரிக்காதீர்கள் தமிழ் ஊடகவியலாளர்களான நிமலராஜன், சிவராம், நடேசன், ‘உதயன்’ பத்திரிகையின் ஊடகப் பணியாளர்கள் ஆகியோரின் கொலைகள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கதறியிருக்கிறோம்.

ஆனால், ஆட்சியாளர்களாகிய நீங்கள் அதற்கு க் கொஞ்சமாவது செவிசாய்திருக்கிறீர்களா? கண்துடைப்புக்காகக்கூட உங்களால் ஒரு தமிழ் ஊடகவியலாளரின் கொலை குறித்த விசாரணையை நடத்த முடியவில்லை என்றால் நீங்கள் கொலையாளிகளுக் உடந்தையானவர்கள், கொலைகாரக் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் என்றுதானே அர்த்தம்.

பெரும் சர்வதேசத் தொடர்புடைய போதைவஸ்து வர்த்தகர்களை, அரசியல்வாதிகளின் செல்லப்பிள்ளைகளாக விளங்கிய பாதாள உலகக் குழுவினரை நாட்டின் அரசுத் தலைவரைக் கொலைசெய்யச் சதி செய்தவர்கள் எனக் கருதப்படுபவர்களையெல்லாம் இந்த நாட்டின் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்து வைத்துள்ளனர்.

இப்படியான ஆற்றல் கொண்டவர்களால் ஏன் ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் எதிரான வன்முறைகளில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்ய முடியவில்லை? அது முடியாமலில்லை. அதற்கான அரசியல் விருப்பு இல்லை எ ன்பதாலேயே இந்த நிலமை.

2015ஆம் ஆட்சி மாற்றத்துடன் இந்த நிலைமைகள் அனைத்தும் மாறும் என்று எதிர்பார்த்தோம். அது சாதாரண எதிர்பார்ப்பல்ல. மிகப் பெரும் எதிர்பார்ப்பு. ஏனெனில் ‘ஊடக சுதந்திரம்’ என்பதும் ஊடக அடக்குமுறைகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எதிரான தாக்குதல்களுக்கும் நீதி வழங்கப்படும் என்பதும் ஆட்சி மாற்றத்துக்கான முக்கிய தேவைகளில் ஒன்றாக முன்வைக்கப்பட்டது.

எனவே, பெரு மாற்றம் ஒன்று நிகழும் என்கிற எதிர்பார்ப்பு இந்த உலகத்திற்கு இருந்தது போன்றே தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் குறைந்தபட்சம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்களுக்கும் இருந்தது.

துரதிர்ஸ்டவசமாக அந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் பொய்யாகிப்போய், சிங்களத் தலைவர்கள் ஏமாற்றிவிடுவார்கள் என்று உறுதியாக நம்பிய ஊடகவியலாளர்கள் சிலரின் கூற்றே இன்று மெய்ப்பட்டு நிற்கின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணைந்த புதிய ஆட்சி பதவிக்கு வரும்போது ‘சுதந்திரமான ஊடகத்துறை’ என்பதை முன்மொழிந்திருந்தார்கள். சுதந்திரமான ஊடகத்துறை என்பது வெறுமனே ஊடகங்கள் மீதான பௌதிக வன்முறைகளை நிகழ்த்தாமல் விடுவதை மட்டும் குறிப்பதல்ல. அதையும் தாண்டி சமூகத்திற்கும், மக்களுக்கும் தேவையான தகவல்களைக் கட்டுப்பாடற்ற விதத்தில் கொடுப்பதையே குறிக்கும்.

ஊடகவியலாளர்களைக் கொன்றவர்களும் ஊடக நிறுவனங்களைத் தாக்கியவர்களும் சமூகத்தில் இன்றும் சுதந்திரமாக நடமாடிவரும் நிலையில், அச்சமின்றி, சுயதணிக்கை இன்றி, தகவல்களை வெளியிடும் சுதந்திரம் ஊடகவியலாளர்களுக்கு இருக்கின்றது என்று இந்த ஆட்சி எதிர்பார்க்கிறதா?

நான் தமிழ் ஊடகவியலாளர்களின் நிலைமை பற்றி மட்டும் இங்கு பேசவில்லை. சிங்கள ஊடகவியலாளர்களையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களின் நிலமை பற்றியும்தான் பேசிக்கொண்டிருக்கின்றேன். ஊடகவியலாளர்களைக் கொன்றவர்களையும் ஊடக நிறுவனங்களைத் தாக்கியவர்களையும் நீதியின் முன் நிறுத்துவோம் என்று கூறித்தான் அதிகாரத்தைக் கைப்பற்றியது இந்த ஆட்சி. ஆனால், லசந்தவின் கொலை விசாரணைக்கும் எக்னொலிகொடவின் மறைவு தொடர்பான விசாரணைக்கும் நடந்திருப்பது என்ன? குறைந்தபட்சம் சிங்கள ஊடகவியலாளர்களுக்காவது நீதி வழங்கப்பட்டிருக்கிறதா என்றால், இல்லை. அதனால்தான் மஹிந்த ஆட்சிக்கும் ரணில் ஆட்சிக்கும் இடையில் எந்தவெ◌ாரு வித்தியாசமும் இல்லை என்கிறேன்.

புதிய அரசமைப்பு உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயங்களிலும்கூட இதேதான் நடந்தது; நடந்துகொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் பாதிக்கப்பட்ட ஊடக நிறுவனங்களுக்கும் நீதி வழங்க முடியாத ஆட்சியாளர்கள் ஊடகங்களாலும் அவற்றின் செய்தி அறிக்கையிடலாலும் தாம் பாதிக்கப்பட்டிருக்கின்றோம் என்று கூச்சலிட்டு அவற்றைக் கறுப்பு ஊடகங்கள் என்று வெறுப்பைக் காறி உமிழ்வதில் என்ன நியாயம் இருக்கின்றது? எமது தரப்பிலிருந்தும் சிலர் ஊடகங்களுக்கு எதிரான இத்தகைய மென் தாக்குதலுக்கு ஆதரவு தருகின்றார்கள் என்பதும் கவலைக்குரியது.

உயிர் அச்சுறுத்தல் ஊடகப் பணியாளர்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் இல்லாமல் போய்விட்டதென்பது ஓர் ஆரோக்கியமான விடயம்தான். ஆ◌னால் அரசியல் ரீதியான, அதிகாரபூர்வமான கண்ணுக்குத் தெரியாத ஒரு ஒடுக்குமுறை வலை ஊடகங்கள் மீது விரிக்கப்படுகின்றன என்பதை நான் இங்கு சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளேன். ஊடகத் சுதந்திரத்தைப் பிழையான வழிகளில் பிரயோகிக்கக்கூடாது என்ற கோஷத்துடன் ஊடகஙகள் மீதான ஒரு வித அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. எல்லா ஊடகவியலாளர்களும் நடுநிலை நின்று நேர்மையாகச் செயற்படுகி்ன்றனர் என நான் கூறவரவில்லை. சில உள்நோக்கங்களுடன் சில தரப்பினரை இலக்குவைத்து செயற்படும் ஊடகவியலாளர்கள் உள்ளனர் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

அப்படியானவர்களின் வார்த்தைகளை வார்த்தைகளால் மோதுங்கள், கருத்துக்களை கருத்துக்களால் மோதுங்கள். பொய்களை உண்மைகளால் மோதுங்கள். அதைவிடுத்து தங்கள் வார்த்தைகளை விளங்கிக் கொள்ளமாட்டாதவர்கள் என்றோ திரிபுபடுத்துகிறார்கள் என்றோ வசைபாடுவதும் ஒரு விதமான ஒடுக்குமுறைதான். அதிலும் அதிகார அரசியல்வாதிகளின் இத்தகைய மிரட்டல்களும் ஒருவித வன்முறைதான்.

தெற்கைச் சேர்ந்த சிங்கள ஊடகவியலாளர்களுக்கு நேர்ந்த கொடுமைகளுக்கே நீதி கிடைக்கவில்லை என்றால் இந்த நாட்டில் தமிழர் உள்ளிட்ட சிறுபான்மை இன ஊடகவியலாளர்களின் நிலைமையைச் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் சிங்கள ஊடகவியலாளர்களையும்விட ஒப்பீட்டளவில் தமிழ் ஊடகவியலாளர்களே அதிகம் கொல்லப்பட்டும் பாதிக்கப்பட்டும் இருக்கிறார்கள்.

அதிலும் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் ஊடகவியலாளர்களே அதிகம் பாதிக்கப்பட்டார்கள். நிமலராஜன், தராக்கி சிவராம், நடேசன், சுகி்ர்தராஜன், உதயன் பத்திரிகை ஊழியர்கள் இருவர் என்று கொல்லப்பட்ட தமிழர்களின் பட்டியல் நீளமானது. மேலும் பலர் கடத்தப்பட்டிருக்கிறார்கள், தாக்கப்பட்டிருக்கிறார்கள், அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்கள், உயிரைக் காத்துக்கொள்வதற்காக வெளிநாடுகளுக்குத் தப்பியோட நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் பலர் தமது தொழிலில் இருந்து ஒதுங்கி தமக்குப் பிடிக்காத வாழ்க்கை ஒன்றை வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் ஒருவருக்குக்கூட இந்த ஆட்சியிலும் நீதி கிடைக்கவில்லை.

2001ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டு வரையில் வடக்கில் இருந்து வெளியாகும் ‘உதயன்’ பத்திரிகை நிறுவனமும் அதன் ஆசிரியர்கள், பணியாளர்களும் 30 தாக்குதல்கள், மிரட்டல்கள், அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். இவற்றில் 5 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் இருவர் மீது கொலை முயற்சி நடந்திருக்கிறது. உதயனின் ஆசிரியர் ஒருவர் பட்டப்பகலில் கடத்தப்பட்டிருக்கிறார்.

பின்னர் அவரது கடத்தல் கைது என்று மாற்றப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவங்கள் பலவற்றிலும் அரச படைகளுக்கும் ஒட்டுப் படைகளுக்கும் நேரடியான தொடர்பு இருக்கின்றது என்று தொடர்ந்து குற்றஞ்சாட்டிவருகின்றோம். இரண்டு ஆசிரியர்கள் அரச படையினரால் நேரடியாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஒருவேளை, தமது படையினரைக் காப்பாற்றுவதற்காகத்தான் இந்தச் சம்பவங்களில் ஒன்றைக்கூட இந்த ஆட்சியும் விசாரணைக்கு எடுக்காமல் இருக்கிறதோ தெரியாது.

லசந்த, எக்னொலிகொட போன்றோரின் வழக்குகளை மீள் விசாரணைக்கு எடுத்துக்கொண்டதுகூட சர்வதேச சமூகத்தைச் சமாளிக்கத்தானே தவிர உண்மையான நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்காக அல்ல என்பது இப்போது வெளிச்சமாகிவிட்டது. 2017 டிசெம்பர் மாதம் கொழும்பு தாஜ்சமுத்திரா நட்சத்திர விடுதியில் ஒரு சர்வதேச மாநாடு நடத்தினார்கள்.

அரசின் ஆதரவு, அனுசரணையுடன் இந்த மாநாடு நடத்தப்பட்டது. பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களைப் புரிந்தோரைத் தண்டிக்காது தப்பவிடும் போக்கை முடிவுறுத்தி சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதன் மூலம் வெளிபாட்டுச் சுதந்திரத்துக்கான பிராந்திய கூட்டுறவை வலுப்படுத்துவது என்கிற தலைப்பில் இந்தச் சர்வதேச மாநாடு நடந்தது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் இந்த மாநட்டில் கலந்துகொண்டிருந்தனர். அதற்குப் பின்னர்கூட ஊடகவியலாளர் கொலைகள் தொடர்பில் ஒரு குற்றவாளிகூடக் கைது செய்யப்படவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

உண்மையில் இந்த ஆட்சியாளர்கள் நாட்டு மக்களை ஏமாற்றிவிட்டார்கள். அவர்களுக்கு உண்மையை எதிர்கொள்வதற்கான திராணி கிடையாது. முதுகெலும்பற்றவர்கள். 2015ஆம் ஆண்டில் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத்தொடுநர்களை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றப் பொறிமுறை ஒன்றை உருவாக்க இணங்கிவிட்டு 2018ஆம் ஆண்டு அதனைச் செய்யமாட்டோம் என்று பின்வாங்கியதுடன் அதன் மூலம் நாட்டின் சுயாதீனம் பாதுகாக்கப்பட்டது என்று சொன்னவர்கள்தானே இவர்கள்! இத்தகையவர்களிடம் இருந்து நீதி எதிர்பார்ப்பது ஒருவேளை இந்த நாட்டு மக்களின் முட்டாள்தனமான செயலாகத்தான் இருக்கும்.

மஹிந்த ஆட்சிக் காலத்தில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பில் ஒரு திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டது. அதற்கு வடக்கு, கிழக்கில் இருந்து ஒரு தமிழ் ஊடகவியலாளர்கூட விண்ணப்பிக்கவில்லை என்பதில் இருந்தே இந்த ஆட்சியின் மீது அவர்கள் கொண்டிருக்கக்கூடிய நம்பிக்கை புலப்படவில்லையா?

வடக்கு, கிழக்கில் உள்ள ஊடகவியலாளர்கள்தான் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்கள். ஆனாலும், அவர்கள் இழப்பீட்டுக்காக விண்ணப்பிக்க விரும்பவில்லை. இ ந்த இழப்பீட்டுக்கான மதிப்பீடுகள்கூட கேலிக்குரியவையாகவே இருக்கின்றன. வடக்கு, கிழக்கில் ஊடகவியலாளர்கள் அதிகளவில் பாதிக்ப்பட்டதற்கு பொலிஸார், படையினர் மற்றும் அவர்களோடு சேர்ந்தியங்கிய தமிழ் ஒட்டுக்குழுக்கள் மீதே குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.

இத்தகைய நிலையில் தமிழ் ஊடகவியலாளர்கள் தாம் அச்சுறுத்தப்பட்டது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறையிட்டிருந்தால்தான் இழப்பீடு பெறமுடியும் என்கிறார் ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர். உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை அதுதானாம். அச்சுறுத்தல், அடக்குமுறைகள் குறித்தெல்லாம் ஆதாரங்கள் இருந்தால்தான் இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ளலாமாம். இதைவிடச் சுத்த கோமாளித்தனம் வேறு ஏதும் இருக்கமுடியாது.

ஊடக அமைச்சர் இதன் மீது கவனம் செலுத்த வேண்டும். மஹிந்த ஆட்சிக் காலத்தில் வடக்கு, கிழக்கு ஊடகவியலாளர்களுக்கு ஒரு கொலைக் களமாகவே இருந்தது, இதனால் ஊடகவியலாளர்கள் பலரும் உயிரைக் காத்துக்கொள்ள தமது பணியை விட்டு ஒதுங்கவேண்டியவர்களாக இருந்தார்கள். மேலும் பலர் தற்காலிகமாகவேனும் ஒதுங்கியிருந்தார்கள். அவர்களையெல்லாம் உனக்கு அச்சுறுத்தல் இருந்ததற்கு ஆதாரம் கொண்டு வா என்று கேட்பது நியாயமானது அல்ல.

எனவே, தமிழ் ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரையில் கொழும்பிலிருந்துகொண்டு ஆட்சி நடத்தும் அதிகாரிகளின் அணுகுமுறை சரியானதாக இருக்கமுடியாது. வடக்கு, கிழக்கின் புவியியல் மற்றும் அரசியல் நிலவரங்களைத் தெரிந்த புரிந்த அதிகாரிகளை உள்ளடக்கியதாக இந்த மதிப்பீட்டுக் குழுக்கள் இருந்தால்மட்டுமே இழப்பீட்டு விடயம் வெற்றிகரமானதாக அமையமுடியும் என்பதையும் ஊடக அமைச்சருக்கு இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *