FeaturesLocal

‘மதுஷ் குரூப்’புடன் தொடர்பில் இருந்த முக்கிய முஸ்லிம் அரசியல்வாதி யார்?

மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்கள் கைது தொடர்பான தகவல்களைத் தொடர்ந்து நான் எழுதுவது குறித்து பலர் பல கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.

பெரும்பாலான நண்பர்கள் எனது பாதுகாப்பு குறித்து கரிசனை தெரிவித்தனர். பலர் தொடர்ந்து எழுத ஆர்வமூட்டினர்.

நான் எதனையும் இட்டுக்கட்டி எழுதவில்லை. கிடைக்கும் தகவல்களை உறுதிப்படுத்தி எழுதுகிறேன். இது மதுஷ் தரப்புக்கோ அல்லது பாதுகாப்பு தரப்புக்கோ சாதகமாக எழுதப்படும் பதிவல்ல..

எஸ்.பி.திஸாநாயக்க நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்த காலத்தில் சிறைக்குள்ளே சென்று அவரைப் பேட்டி எடுத்து வந்த அந்த நேரத்திலும் எனக்கு அழுத்தங்கள் வந்தன.

ஆனால், எழுதவேண்டும் எனத் தீர்மானித்தால் எப்படியாவது எழுதியே தீருவேன்…

ஜேர்னலிசம் என்பது திரில்லாக இருக்கவேண்டும்…!

இந்த இயந்திரமயமான வாழ்வில் பலருக்கு மறுநாள் பேப்பர் எடுத்து வாசிக்கும் அளவுக்கு நேரமும் இல்லை; பொறுமையும் இல்லை. அந்தப் பலருக்காக எனது வேலைகளுக்கு மத்தியிலும் இதை எழுதுகிறேன். எனக்கு கிடைக்கும் செய்திகளை உடனே எல்லோருக்கும் பகிர அவா..

ஒரு தமிழ் அரசியல் கட்சியின் தொண்டர்கள் அவரது தலைவரை இந்தத் தொடர் மூலம் நான் இகழ்ந்ததாக உள்பெட்டியில் என்னிடம் கூறினர்… குறைபட்டனர்.

“தலைவர் போதைப்பொருள் பரிசோதனை செய்து சுத்தவாளி என்று காட்டினால் மீடியாவை விட்டே போய்விடுவீர்களா…?” என்று இடையில் ஒருவர் ஒரு கேள்வியைக் கேட்டார்..

“அப்போ தொடர்ந்து நான் மீடியாவில் எழுதப் போகின்றேன்… நன்றி…” என்றேன் நான்…

சரி விடயத்துக்கு வருவோம்…

மதுஷின் சகாக்கள் பலர் கைதுசெய்யப்பட்டனர் அல்லவா? அவர்களிடம் இருந்து பல தகவல்கள் கிடைக்கப்பெற்றதையடுத்து அவை குறித்தும் விசாரணைகள் நடக்கின்றன.

மதுஷ் குரூப்புடன் கொழும்பில் உள்ள முக்கிய முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் தொடர்பில் இருந்தமை தெரியவந்துள்ளது. அவர் பற்றி ஆராயப்படுவதால் மேலும் விபரங்களை வெளியிட முடியாத சூழ்நிலை உள்ளது. ஆனால், விரைவில் ஒரு க்ளூ தருவேன்…

இதற்கிடையில் டுபாயில் கைதுசெய்யப்பட்ட மதுஷின் சகாக்கள் பலர் சிறையில் இருந்து உறவினர்களிடம் பேச வேண்டும் எனக் கூறி அவர்களின் சகாக்களுடன் தொலைபேசியில் பேசியுள்ளமையும் இப்போது அறியக்கிடைத்துள்ளது.

அப்படி பல முக்கியஸ்தர்கள் தமது சகாக்கள் பலருடன் பேசினாலும் மாக்கந்துர மதுஷ் அப்படி தொடர்பு கொண்டதாகத் தெரியவில்லை. அதற்கு என்ன காரணம் என்று தேடிய பொலிஸாருக்கு இன்னுமொரு தகவல் கிடைத்தது.

அதாவது , மாக்கந்துர மதுஷ் எப்போதும் யாரின் தொலைபேசி இலக்கங்களையும் நினைவில் வைத்துக்கொள்ளாமல் புத்தகம் ஒன்றின் உதவியுடன் தான் தொலைபேசி எண்களை அதில் குறிப்பிட்டு தனது செயற்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

கைத்தொலைபேசியில் விபரங்களை சேமித்து வைத்து அது பாதுகாப்புத் தரப்பிடம் சிக்கினால் ஆபத்து – அடிக்கடி புதிய புதிய தொலைபேசி இலக்கங்களை தனது சகாக்கள் பயன்படுத்துவதால் புத்தகம் ஒன்றில் குறிப்பிடுவது நல்லது – புத்தகத்தில் தொலைபேசி இலக்கங்களை எழுதும்போது தனக்கு மட்டுமே விளங்கும் பல குறியீடுகளை வைத்து எழுதிக் கொள்வது – பாதுகாப்பு தரப்பிடம் சிக்கினால் கூட அவர்கள் இதனை பெரிதாக எடுக்க மாட்டார்கள் போன்ற பல காரணங்களினால் மதுஷ் அப்படி எழுதிவைப்பதாக தெரியவந்துள்ளது.

அதனால் முக்கியமான பல நபர்களின் தொலைபேசி இலக்கங்களை மதுஷினால் நினைவுகொள்ள முடியாமல் இருக்கலாம் எனப் பாதுகாப்புத் தரப்பு கருதுகின்றது.

ஆனால், அவர் சிலரின் இலக்கங்களை நினைவு வைத்திருந்தாலும் தனது நெட்வெர்க்கை பாதுகாக்க இப்படிப் பேசாமல் இருக்கலாம் என இன்னொரு பாதுகாப்புத் தரப்பு கருதுகின்றது. உண்மை, பொய் பின்னரே தெரியவரலாம்.

ஹெரோயின் மீட்பு

கொழும்பில் நேற்றுமுன்தினம் 294 கிலோ ஹெரோயின் மீட்கப்பட்டதல்லவா? அது டுபாயில் இருந்து அனுப்பப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அது மதுஷ் தரப்பினால் அனுப்பப்பட்டதா என்பது பற்றி ஆராயப்படுகின்றது. இது தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஒருவர் அளித்த வாக்குமூலத்தில் டுபாயில் இருந்து தனது உறவினர் ஒருவரே இதனை அனுப்பியுள்ளார் எனக் கூறியுள்ளார்.

சொகுசு வர்த்தக கட்டடங்களின் வாகனத் தரிப்பிடத்தில் டுபாய் உறவினர் சொல்லும் வாகனங்களைக் கொண்டு போய் தரித்துவிட்டு வருவது மட்டுமே தனது வேலை என்றும், அதற்காகப் பணம் கிடைக்கின்றதேயொழிய அதற்கப்பால் என்ன நடக்கின்றது என்பது தனக்குத் தெரியாதென அந்தக் கைதுசெய்யப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் மதுஸுக்கு எதிரான கோஷ்டி இதனைத் திட்டமிட்டு அனுப்பி இதனை மதுஷ் விவகாரத்துடன் தொடர்புபடுத்தி அவரை மேலும் இறுக்கும் பொறியாகவும் இருக்கலாம் என்று இன்னுமொரு தகவல் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் தாவூத் இப்ராகீம் தரப்புடன் கொடுக்கல் – வாங்கல் காரணமாக மதுஷ் கொண்ட பகைமையே அவருக்கு இப்போது பெரும் தலையிடியாக மாறியுள்ளது எனச் சொல்லப்படுகின்றது.

இப்போதைய நிலைமை

மதுஷ் மற்றும் சகாக்கள் 27ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று சொல்லப்படுகின்றது. அதுவும் டுபாய் பொலிஸில் உள்ள நீதிமன்றத் தொடர்பாடல் அதிகாரி தீர்மானித்தால் மட்டும். ஏனெனில் விசாரணைகள் – மருத்துவ ஆய்வு அறிக்கைகள் எல்லாம் சரியாக வந்துள்ளதா என்பதை அவர் பூரணமாக ஆராய்ந்த பின்னரே அதனைத் தீர்மானிப்பார்.

மறுபுறம் அன்று நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் தங்களது நிலைப்பாட்டை எழுத்துமூலம் முன்வைக்க வேண்டும். அங்கு சட்டத்தரணிகள் ஆஜராக வேண்டுமாயின் குடும்ப உறுப்பினர்களின் அனுமதிக் கடிதம் மற்றும் இலங்கையில் உள்ள டுபாய் தூதரகத்தில் அதனை உறுதிப்படுத்தும் கடிதம் என்பன தேவை. இப்போதைக்கு அமல் மற்றும் அவரது மகன் நதிமாலுக்கு மட்டுமே அந்த அனுமதிக் கடிதம் கிடைத்துள்ளது.

ஆனால், அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போவதில்லை. ஏனெனில் ஏற்கனவே டுபாய் சிறைகளில் நீதிமன்ற விசாரணைகளை எதிர்பார்த்து கிட்டத்தட்ட 600 பேர் நீண்டகாலம் காத்திருக்கின்றனர் எனச் சொல்லப்படுகின்றது. யாரின் அவசரத்துக்கும் ஏன் இலங்கை அரசின் அவசரத்துக்குக் கூட தனது விசாரணைகளை டுபாய் துரிதப்படுத்தாது .

போதைப்பொருள் தட்டுப்பாடு

இவ்வருடம் இதுவரை 520 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதால் இலங்கை போதைப்பொருள் சந்தையில் பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனச் சொல்லப்படுகின்றது.

கொழும்பில் மட்டும் சுமார் இரண்டரை இலட்சம் பேர் போதைப்பொருளுக்கு அடிமையாக இருக்கின்றனர் என்று பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் சொல்கின்றன. இவர்களில் வி.வி.ஐ.பிக்கள் பலர் அடக்கம்.

டுபாயில் கைதுசெய்யப்பட்ட ஒருவரின் கொழும்பு வீட்டுக்குச் சென்ற விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர் – சம்பந்தப்பட்ட நபரின் வீட்டு உறுப்பினர்கள் சிலர் போதைப்பொருள் பாவனையில் உள்ளதைக் கண்டறிந்து கவலைப்பட்டார் எனத் தகவல்… இதுதான் இன்றைய நிலைமை…!

– சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading