இலங்கைக்கு இனியும் அவகாசம் வழங்காதீர்! விக்கி வலியுறுத்து

“ஐ.நா. தீர்மானத்தினை நிறைவேற்றுவதிலோ, போர்க்குற்ற விசாரணையை நடத்துவதிலோ இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது” என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சியில் இன்று ( 25) நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு உரிய மாற்று நடவடிக்கைகளை காலம் தாமதிக்காமல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மேற்கொள்ள வேண்டும்.

மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு மீண்டும் கால அவகாசம் வழங்குவதானது மனித உரிமைகள் சபை தன்னைத்தானே ஏமாற்றுவது மாத்திரமல்லாது பாதிக்கப்பட்ட மக்களையும் ஏமாற்றுவதாகவே அமையும்.

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலயம் வடக்கு, கிழக்கில் அலுவலகங்களைத் திறக்க வேண்டும்.

2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் சர்வதேச சமூகமும் தேவைக்கு அதிகமாகவே சகல விதமான ஒத்துழைப்புக்களையும் வழங்கி நெகிழ் தன்மையைக் காட்டியுள்ளன.

எனினும், இவற்றைத் துஷ்பிரயோகம் செய்யும் விதமாகவே இலங்கை அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

இழைக்கப்பட்ட குற்றங்களை மறந்துவிடுவதுடன், விசாரணை எதுவும் தேவை இல்லை எனப் பிரதமர் கூறியுள்ளமை மக்களின் மனங்களைப் புண்படுத்தியுள்ளதுடன், நம்பிக்கையீனத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *