Lead NewsLocal

மீண்டும் எம்முடன் முட்டி மோதுகின்றார் மைத்திரி! – நாட்டின் நற்பெயரை அவர் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறார் ராஜித

“2018 ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சியூடாக ஆட்சியைக் கவிழ்த்து எம்முடன் பகிரங்கமாக முரண்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 52 நாட்களின் பின்னர் ஓர் இணக்கத்துக்கு வந்து நாம் மீளவும் ஆட்சியமைக்க உதவினார். ஆனால், அவர் மீண்டும் எம்முடன் முட்டி மோதுகின்றார்.”

– இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

“எதிரணியின் வீண்வம்புக் கருத்துக்களை செவிசாய்க்காமல் நாட்டு மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு ஜனாதிபதி செயற்பட வேண்டும். நாட்டின் நற்பெயரை அவர் பாதுகாக்க வேண்டும்” எனவும் ராஜித வலியுறுத்தினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசு முழு ஒத்துழைப்புகளையும் அன்றும் வழங்கி வந்தது. இன்றும் வழங்கி வருகின்றது. ஆனால், அவர் எம்மை தவறாக எடைபோடுகின்றார்.

பிரதமர், சபாநாயகர் மற்றும் அமைச்சர்களுடன் ஜனாதிபதி மீண்டும் முட்டி மோதுகின்றார். இது நாட்டின் அரசியலுக்கு அழகு அல்ல. இதை உணர்ந்து ஜனாதிபதி செயற்பட வேண்டும்.

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் தேசிய அரசு அமைக்கும் யோசனையை ஐக்கிய தேசிய முன்னணி முன்வைக்கவில்லை.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானவுடன் தேசிய அரசு அமைக்கும் யோசனைக்கு ரணில் விக்கிரமசிங்க முழு ஆதரவு வழங்கினார். இதை மைத்திரிபால சிறிசேன மறக்காமல் இருந்தால் சரி.

நாட்டின் அபிவிருத்தியை – முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டே தேசிய அரசு அமைக்கும் யோசனையை ஐக்கிய தேசிய முன்னணி முன்வைத்துள்ளது” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading