‘மே’யில் மாகாணசபைத் தேர்தல்! கூட்டணி அமைப்பதில் கட்சிகள் தீவிரம்!!

மாகாண சபைகளுக்கான தேர்தல் மே மாதம் நடைபெறலாம் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

அனைத்து மாகாணசபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் அதிகாரிகளும், சிவில் அமைப்புகளின் பிரதானிகளும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்தல் செலவீனங்களை கட்டுப்படுத்தல் உட்பட மேலும் சில காரணங்களைக்கருத்திற்கொண்டு ஒரேநாளில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் ஆளுங்கட்சியின் நிலைப்பாடாகவும் இருக்கின்றது.

எனவே, இன்னும் பதவிகாலம் முடியாதுள்ள மேல் மாகாணசபை உட்பட மூன்று சபைகளும் முன்கூட்டியே கலைக்கப்பட், அதன்பின்னர் 9 சபைகளுக்கும் மே மாதத்தில் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னரே தேர்தல் களம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும் முன்கூட்டியே தேர்தல் திருவிழா களைகட்ட ஆரமபித்துள்ளது. தொகுதி அமைப்பாளர் நியமனம், கூட்டணி அமைத்தல், வேட்பாளர் தேர்வு என தேர்தலுக்கே உரிதான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

தேசிய மட்டத்திலான தேர்தலொன்றுக்கான ஒத்திகையாக – வெள்ளோட்டமாக – மக்களின் நாடிப்பிடித்து பார்ப்பதற்கான கருவியாக மாகாணசபைத் தேர்தல் பார்க்கப்படுவதால் அனைத்து விதத்திலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மக்கள் விடுதலை முன்னணி ஆகியன தென்னிலங்கையில் களம்காணவுள்ளன. வழமையாக மும்முனைப்போட்டியே இடம்பெறும். எனினும், இம்முறை பலமுனைப்போட்டி எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோல் மலையகத்திலும் பிரதான தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் தேசிய கட்சிகள் போட்டியிட தயாராகிவருகின்றன.

எனினும், கடந்த உள்ளாட்சிசபைத் தேர்தல்போல்,  மாகாணசபைத் தேர்தலிலும் ஒரு சில மாவட்டங்களில் தனித்து  களமிறங்குவது குறித்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மந்திராலோசனை நடத்திவருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்திலேயே தமிழ் முற்போக்கு கூட்டணி களமிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும், இறுதி நேரத்தில் புது வியூகம் வகுக்கப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.

அதேவேளை, மலையகத்தில் இரு பிரதான அணிகளிலிருந்தும் புது முகங்கள் களமிறக்கப்படவுள்ளன. சில மூத்த உறுப்பினர்களுக்கு கதவடைப்பு இடம்பெறலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பள விவகாரத்தில் இரண்டு பிரதான கட்சிகளாலும் தோட்டத்தொழிலாளர்ககள் ஏமாற்றப்பட்டனர். பிரதான தொழிற்சங்கங்களும் அவர்களை கைவிட்டன. எனவே, பதிலடி கொடுப்பதற்கான ஆயுதமாக தோட்டத்தொழிலாளர்கள் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என சமூக ஆர்வளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நன்றி – மலையக குருவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *