புதிய அரசமைப்பு நிறைவேறினாலும் – தோல்வியடைந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே ‘வெற்றி’!

புதிய அரசியலமைப்புக்கான யோசனைகள் உள்ளடங்கிய நிபுணர்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் அலசி ஆராய்வதற்கு முன்னரே தென்னிலங்கையில் அபாய சங்கு ஊதப்பட்டுள்ளது.

வடக்கில் அடை மழை பெய்தால்கூட அது தனி ஈழத்தை பெறுவதற்கான பூகோள ரீதியிலான வியூகம் என கொக்கரிக்கும் கடும்போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகள், நிபுணர்குழுவின் அறிக்கைக்கும் எடுத்த எடுப்பிலேயே ‘தமீழீழ’ முத்திரையை குத்திவிட்டன.
 
அத்துடன் நின்றுவிடாமல் சிங்கள் மக்களின் மனங்களில் இனவாதத்தை ஆழமாக வேரூன்ற வைக்கும் ‘சிற்றின்ப’ அரசியலிலும் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றன.
 
மறுபுறத்தில் மகாநாயக்க தேரர்களும் ‘ புதிய அரசியலமைப்பொன்று நாட்டுக்கு தேவையில்லை’ என அறிவிப்பு விடுத்துள்ளனர். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் போர்க்கொடி தூக்கியுள்ளது.
 
இதனால் புதிய அரசியலமைப்பை இயற்கும் பணிகள் இறுதிபெறுமா – வெற்றியளிக்குமா என்ற அச்சம் மேலோங்கியுள்ளது.
 
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு தென்னிலங்கை இனவாதிகள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள் என்பது வெளிப்படை.
 
‘புதிய அரசியலமைப்பு நிறைவேறாது’ என தெரிந்தும் அதை உருவாக்குவதற்கான முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் இறங்கியது, இதுவும் அரசியல் இராஜதந்திரமா ? என பலகோணங்களில் வினாக்கள் தொடுக்கப்படுகின்றன.
 
ஆம். இதுவும் ஒரு வகையில் அரசியல் இராஜதந்திரம் அல்லது அரசியல் பொறி என்பதுதான் எனது கருத்தாகும்.
 
‘’ உள்நாட்டிலேயே பிரச்சினைகளுக்கு தீர்வுகாணக்கூடிய சக்தியை இலங்கை கொண்டுள்ளது.அதற்குகான வாய்ப்பு எமக்கு வழங்கப்படவேண்டும்.
 
எனவே, வெளிநாடுகள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடக்கூடாது. இலங்கையானது இறையாண்மைமிக்க சுயாதீன நாடாகும்.’’ என்பதே தேசப்பற்றாளர்களின் ஏகோபித்த கோரிக்கையாக இருந்தது – இருந்துவருகின்றது.
 
2009 மே மாதத்துக்கு பின்னர் சர்வதேச நெருக்கடி ஏற்படும்வேளைகளிளெல்லாம் அழுத்தங்களை சமாளிப்பதற்காக ‘கந்தசஷ்டி கவசம்’போல் மேற்படி மந்திரத்தையே ஆட்சியாளர்கள் உச்சரித்தனர்.
 
ஆனால், பல ஆண்டுகள் கடந்தும் உள்நாட்டுப்பொறிமுறையில் முன்னேற்றம் காணப்படவில்லை. இதனால், அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்குவதற்கு அனைத்துலக சமூகம் தயாரானது.
 
அவ்வேளையில்தான் இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. புதிய அரசியலமைப்பின் ஊடாக அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும், பொறுப்புகூறும் கடப்பாடு உரிய வகையில் நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதத்தை நல்லாட்சி அரசு, அனைத்துலக சமூகத்துக்கு வழங்கியது.
 
ஒருபடிமேல்சென்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு தாமே இணை பங்களிப்பையும் வழங்கியது. இதனால், சர்வதேசமும் விட்டுக்கொடுப்புக்கு தயாரானது.
 
எனினும், உள்நாட்டுப்பொறிமுறை தோல்வியை நோக்கியே பயணிப்பதை வெளிப்படையாக காணமுடிகின்றது.
 
நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைக்காவிட்டால், புதிய அரசியலமைப்புக்கான பணி அடுத்தக்கட்டத்தை நோக்கி நகராது. அவ்விடத்திலேயே அனைத்தும் ‘சுபம்’ பெற்றுவிடும்.
 
இப்படிதான் நடக்கவேண்டும். நாடு பிளவுபடாமல் தடுத்துவிட்டோம் என அதை வைத்து சிங்கள மக்கள் மத்தியில் நாயகனாக வேண்டும் என்பதுதான் மஹிந்த அணியின் கனவாக இருக்கின்றது.
 
ஒற்றையாட்சிமுறை நீடிக்கும், பௌத்தத்துக்கு முன்னுரிமை, வடக்கு, கிழக்கு இணையாது போன்ற அம்சங்கள் அடங்கிய அரசியலமைப்பு வரைவு யோசனைக்கே ஆதரவு வழங்க மறுக்கும் மஹிந்த அணி, தமிழர் எதிர்பார்க்கும் தீர்வை வழங்க விடுவார்களா என்ன?
அதுமட்டுமல்ல புதிய அரசியலமைப்பு யோசனைக்கு அரசாங்கத்துக்குள்ளும் எதிர்ப்புகள் வலுக்கதொடங்கிவிட்டன.
 
ஆகமொத்தத்தில் உள்நாட்டுப் பிரச்சினையை, உள்நாட்டிலேயே தீர்த்துக்கொள்வதற்கு வழங்கப்பட்ட வாய்ப்பை இலங்கை தவறவிடும் பட்சத்தில் , அனைத்துலக சமூகம் களத்தில் இறங்குவதற்கு அது வழிசமைத்துக்கொடுத்துவிடும்.
 
அதற்கான அறிகுறிகள் தற்போது பிரகாசமாக தென்படுகின்றன.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசியலமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தால், அதை காரணம்காட்டி சர்வதேச பிடிக்குள்ளிலிருந்து தப்பிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கும்.
ஆனால், அதற்கான கதவையும் கூட்டமைப்பு அடைத்துள்ளது.
 
எனவே, அனைத்துலக சமூகம் இனி இலங்கை விவகாரத்தில் நேரில் களமிறக்கும். மார்ச் மாத ஜெனிவாக் கூட்டத்தொடர் இதற்கான வெள்ளோட்டமாக இருக்கும்.
 
புதிய அரசியலமைப்பு நிறைவேறினாலும், நிறைவேறாவிட்டாலும் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வெற்றியை தேடிகொடுக்கும். அடுத்து என்னவென்பது பொறுத்திருந்து பார்ப்போம்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *