மேகி நூடுல்ஸ் விவகாரம்: நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் அனுமதி!

மேகி நூடுல்ஸ் விவகாரத்தில் நெஸ்லே இந்தியா நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி கூடத்தின் சோதனை முடிவுகளின் அடிப்படையில் இதற்கு அனுமதியளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக வணிக நெறிகளை பின்பற்ற தவறியது, லேபிளில் தவறான தகவல் அளித்தது, தவறான தகவல்களுடன் விள்ம்பரம் ஆகியவற்றிற்காக

நெஸ்லே இந்தியா நிறுவனத்திடம் மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் 640 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடுத்திருந்தது.

இவ்வழக்கு தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் நடைபெற்று வந்தது.

2015ம் ஆண்டு இதை எதிர்த்து நெஸ்லே இந்தியா செய்த முறையீட்டின் பேரில், வழக்கை தொடர மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது.

முன்னதாக நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் மேகி நூடுல்ஸில் காரியத்தின் அளவு அதிகமாக இருப்பதாக கூறி அதன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு பின்னர், விளக்கிக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நெஸ்லே நிறுவனத்தின் சார்பில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதாடினார்.

மேகி நூடுல்ஸ் குறித்து, உச்சநீதிமன்ற உத்தரவின்படி மைசூரில் உள்ள மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட ஆய்வின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேகி நூடுல்ஸில் ஈயத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவில்தான் உள்ளது என்றார் அவர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஈயத்துடன் கூடிய மேகி நூடுல்ஸை நாம் ஏன் சாப்பிட வேண்டும்? என கேள்வி எழுப்பினர். அதற்கு, பிற உணவுப் பொருள்களிலும் ஈயம் உள்ளது. அதேபோன்றுதான் மேகி நூடுல்ஸிலும் அளவோடு இருக்கிறது.
குறிப்பாக, மோனோசோடியம் குளுட்டாமேட் ரசாயனம் மேகியில் இல்லை என்பது ஆய்வக முடிவில் தெரியவந்திருக்கிறது என்று சிங்வி பதிலளித்தார்.
பின்னர், மைசூர் ஆய்வக அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு நெஸ்லே இந்தியா நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், தேசிய நுகர்வோர் ஆணையத்தின் விசாரணை வரம்பில் உச்சநீதிமன்றம் இப்போது தலையிடுவது சரியாக இருக்காது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *