சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததால் ஐயப்பன் கோவில் நடை திடீர் அடைப்பு!
சபரிமலை கோவிலுக்குள் கேரள பெண்கள் 2 பேர் சென்றதால் ஐயப்பன் கோவில் நடை திடீர் என அடைக்கப்பட்டது.
கேரளாவில் உள்ள உலக பிரசித்திப்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயதிற்கும் குறைவான சிறுமிகளும், 50 வயதிற்கும் அதிகமான பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இதில் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு கோவிலுக்குள் செல்ல அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த தீர்ப்புக்கு எதிராக இந்து மத அமைப்புகளும் மற்றும் பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல மனிதி அமைப்பினை சேர்ந்த 11 பெண்கள் முற்பட்டனர்.
ஆனால் பக்தர்களின் எதிர்ப்பினால் அவர்கள் பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். சாமி தரிசனம் செய்யாமல் திரும்பி சென்றனர்.
இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் 50 வயதுக்கு கீழ் உள்ள இரு பெண்கள் 18 படி ஏறாமல் மற்றொரு வாசல் வழியாக சென்று ஐயப்பனை தரிசனம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பெண்கள் இருவரும் கோவிலுக்குள் செல்லும்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது.
அவர்களில் ஒருவர் இந்திய கம்யூனிஸ்டு (எம்.எல்.) அமைப்பின் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து (வயது 42) என்றும், மற்றொருவர் மலப்புரத்தை சேர்ந்த கனகதுர்கா (வயது 44) என்றும் தெரிய வந்துள்ளது.
ஐயப்பனை பெண்கள் தரிசனம் செய்தது பற்றி உறுதியான தகவல் கிடைக்கவில்லை. ஐயப்பனை பெண்கள் தரிசனம் செய்தது உறுதி என்றால்,
புனிதப்படுத்தும் பூஜை நடத்தப்படும் என பந்தளமகாராஜா அறக்கட்டளை நிர்வாகி தீபா வர்மா தகவல் தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் 2 பெண்கள் சாமி தரிசனம் செய்ததால் சபரிமலை சன்னிதானம் நடை திடீர் என அடைக்கபட்டது.
சுத்திகலச பூஜைக்காக நடை அடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.