Local

மஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை ஏற்கவும்! – மைத்திரிக்கு அமெரிக்க செனட்டர் அவசர கடிதம்

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகள், அமெரிக்கா – இலங்கை இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை, வலுப்படுத்துவதற்குத் தடையாக அமையலாம் என்று அமெரிக்க செனட் சபையின் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் கிறிஸ் வான் ஹோலன் எச்சரித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ள அவசர கடிதம் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்தத் கடிதத்தில்,

“இரு ஜனநாயக நாடுகளுக்கும் இடையில் நட்புறவை வலுப்படுத்துவதற்கு கடினமாக பாடுபட்ட நண்பருக்கு இந்தக் கடிதத்தை எழுதுகின்றேன்.

இந்த உணர்வின் அடிப்படையில் பிரதமரை பதவியிலிருந்து நீக்கியமை மற்றும் புதிய பிரதமருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை நிராகரித்தமை குறித்த எனது ஆழ்ந்த கரிசனையை வெளியிடுகின்றேன்.

இலங்கை அரசமைப்பின் அடிப்படையிலும், சட்டத்தின் ஆட்சியை மதித்தும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் நல்லிணக்கம், ஜனநாயக சீர்திருத்தம் குறித்து வாக்குறுதி வழங்கிய 2015 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், அமெரிக்க – இலங்கை உறவுகள் வளர்ச்சியடைந்துள்ளன.

2015 இற்குப் பின்னர் அமெரிக்கா பொருளாதார மற்றும் பாதுகாப்பு உதவிகள் மூலம் இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்தியுள்ளது.

எனினும், கடந்த சில வாரங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன.

பிரதமரை பதவி நீக்குவது, நாடாளுமன்றத்தை இடைநிறுத்துவது, தேர்தலை நடத்த முயல்வது மற்றும் மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் வாக்களிப்பை நிராகரிப்பது போன்ற உங்கள் நடவடிக்கைகள், இரு நாடுகள் மத்தியிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வலுப்படுத்துவதற்குத் தடையாக அமையலாம்.

இலங்கையின் அரசமைப்பு, ஜனநாயக வழிமுறைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நெருக்கடி நிலைக்குத் தீர்வை காணுங்கள்” – என்றுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading