FeaturesLocal

‘குள்ளநரி’ அரசியல் தந்திரமா ரணிலுக்கு ஆப்பாக மாறியது?

ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும் முக்கிய வாக்குறுதியாக முன்வைக்கப்படுவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை ஒழிப்புதான்.2015 ஜனாதிபதி தேர்தலிலும் அவ்வாறே.இந்த அதிகாரம் ஒழிக்கப்படும் என்ற வாக்குறுதியை வழங்கி மைத்திரி-ரணில் தரப்பு வெற்றி பெற்றபோதிலும் இதை இல்லாதொழிக்கும் திட்டம் ரணிலிடம் இருந்ததில்லை.

2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகும் திட்டம் ரணிலிடம் இருந்தது.

அந்தத் தேர்தலில் தனக்கு சவாலாக இருக்கப்போகின்ற இரண்டு முக்கிய புள்ளிகளான மஹிந்தவையும் மைத்திரியையும் ஓரங்கட்டும் வியூகத்தை ரணில் வகுத்தார்.

19 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக முதலாவது ஆப்பை மஹிந்தவுக்கு வைத்தார்.ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதியாக முடியாது என்ற திருத்தமே அந்த ஆப்பு.அதில் வெற்றியும் கண்டார்.அடுத்த ஆப்பை மைத்திரியை நோக்கிக் கொண்டு சென்றார்.

சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்தி-மைத்திரி-மஹிந்த அணிகள் என இரண்டு அணிகளை உருவாக்குதல்,ஓர் அணி மைத்திரியையும் மஹிந்த அணி வேறு ஒருவரையும் ஜனாதிபதி வேட்பாளர்களாக களமிறக்கச் செய்தல்.அப்போது சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கி இரண்டாக பிளவுபடும்.அது ரணிலின் வெற்றிக்கு வாய்ப்பாக அமையும்.

இதுதான் ரணிலின் அடுத்த வியூகமாக இருந்தது.ஆனால்,அந்த வியூகம் வெளிப்படையாகத் தெரிந்ததால் உசாரானார் மைத்திரி.அந்த வியூகத்தை உடைப்பதற்குத் திட்டம் தீட்டினார்.

தான் அடுத்து என்ன செய்யப் போகின்றேன் என்று இறுதி வரையும் வெளிப்படுத்தாத மைத்திரியின் அந்த பலம் இப்போது ரணிலின் வியூகத்தை உடைப்பதற்கு உதவியது.

19 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தபோது அதனூடாக நிறைவேற்று அதிகாரத்தையும் முற்றாக ஒழித்திருந்தால் ரணிலுக்கு இப்போது இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

19 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தவர்கள் மஹிந்த இனி ஒருபோதும் ஜனாதிபதியாகி விடக்கூடவே கூடாது என்பதில் குறியாக இருந்தார்களே தவிர நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பதில் கவனம் செலுத்தவில்லை.அதற்கு காரணம் ரணில்தான்.

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு அதிகாமான வாய்ப்பு இருந்தது மைத்திரி-ரணில் அரசில்தான்.இனி அப்படியொரு வாய்ப்பு-மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பது சாத்தியமில்லை.

தான் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக ஆக வேண்டும் என்பதற்காக ரணில் வகுத்த வியூகம் அவருக்கே ஆபத்தாக மாறிவிட்டது.

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி நினைத்தால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் இருக்கின்ற நாடாளுமன்றத்தைக்கூட கட்டுப்படுத்த முடியும் என்பதை நாம் தற்போதைய அரசியல் கூத்துக்களில் இருந்து காணக்கிறோம்.

இப்படிப்பட்ட சர்வாதிகாரம் கொண்ட-தனி ஒருவரின் தேவைக்காக மக்களின் உயர் சபையை அவமதிக்கின்ற நிறைவேற்று அதிகாரம் நீடித்து நிற்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி உட்பட அதனுடன் கைகோர்த்து நிற்கின்ற கட்சிகள் அனைத்துமே பொறுப்பு.அதன் பலனை நன்றாக அனுபவியுங்கள்.

[எம்.ஐ.முபாறக்-சிரேஷ்ட ஊடகவியலாளர்]

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading