Lead NewsLocal

இலங்கை அரசின் அழைப்பை அடியோடு நிராகரித்த எட்டு மேற்குலகத் தூதுவர்கள்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம விடுத்த அழைப்பை எட்டு மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் நிராகரித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே, மேற்குலக இராஜதந்திரிகள் வெளிவிவகார அமைச்சரின் கூட்டத்தைப் புறக்கணித்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் குறித்து விளக்கமளிப்பதற்கான கூட்டம் ஒன்றுக்கு கொழும்பில் உள்ள 43 நாடுகளின் தூதுவர்களுக்கு, வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம இன்று அழைப்பு விடுத்திருந்தார்.

இந்தக் கூட்டத்தை பிரிட்டன், நெதர்லாந்து, நோர்வே, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இத்தாலி, மற்றும் கனடா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் புறக்கணித்துள்ளனர்.

அதேவேளை, அமெரிக்கா, ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் தமது பிரதிநிதிகளை அனுப்பியுள்ளன. இந்தியா தனது இளநிலை இராஜதந்திரி ஒருவரை இந்தக் கூட்டத்துக்கு அனுப்பியுள்ளது.

அதேவேளை, சீனா, கியூபா, ஆப்கானிஸ்தான், துருக்கி, பாகிஸ்தான் உள்ளிட்ட 20 வரையான நாடுகளின் தூதுவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர் என்று இலங்கை அரச வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம, கடந்த வாரங்களில் இடம்பெற்ற அனைத்து நகர்வுகளும் அரசமைப்புச் சட்டத்தின்படியே முன்னெடுக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.

எந்த நாடும் கொடைகள், சலுகைகள், கடன்களை நிறுத்துவது தொடர்பாகக் கூறவில்லை என்றும் கூட்டத்தின் பின்னர் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading