வெள்ளையுடைக்கும் விடைகொடுத்தார் ஹேரத்!
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சாதனைகளின் நாயகன் ரங்கன ஹேரத் தனது 19 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்
வாழ்விற்கு தனது 40 வயதுகளில் முற்றுப்புள்ளி வைத்து நேற்று (09) சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வு பெற்றிருக்கின்றார்.
1999 ஆம் ஆண்டு இலங்கை டெஸ்ட் அணி சார்பில் 21 ஆவது வயதில் சர்வதேச அறிமுகத்தை பெற்றுக்கொண்ட ரங்கன ஹேரத் இடது கை சுழல் பந்துவீச்சில் மெதுமெதுவாக மிளிர்ந்து சத்தமின்றி பல சாதனைகளை படைத்திருக்கும் நிலையில். காலியில் நேற்று மாலை நிறைவிற்கு வந்து இங்கிலாந்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விடைபெற்றுள்ளார்.
இந்தப் போட்டியில் இலங்கை அணியினர் ஹேரத்தை வெற்றியுடன் வழியனுப்புவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த போதும் இங்கிலாந்து அணியின் சிறப்பாட்டத்தால் அது நிறைவேறாமலே போய்விட்டது. குறித்த போட்டியில் இலங்கை அணி ஓட்டங்களினால் தோல்வியடைந்தது. இதேவேளை, இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஹேரத் (1), இரண்டாவது இன்னிங்ஸில் (2) என மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரங்கன ஹேரத் 1999 ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகத்தை பெற்றுக் கொண்ட போதிலும் முத்தையா முரளிதரன் சாதனைகளின் சிகரமாக இருந்தமையால் அவருக்கான வாய்ப்புக்கள் பறிபோனது. எனினும் முத்தையா முரளிதரனின் ஓய்வுக்கு பின்னரான காலப்பகுதியில் பிரகாசிக்கத் தொடங்கிய ஹேரத் 2012 ஆண்டளவில் இருத்து இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற அந்தஸ்த்தை பெற்றுக்கொண்டார். அதனை நிரூபிக்கும் வகையில் அணிக்காக பல சாதனைகளை படைத்து வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.
93 டெஸ்ட் போட்டிகளில் பங்கெடுத்து 170 இன்னிங்ஸ்களில் ஆடியிருக்கும் ஹேரத் 433 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருக்கிறார். அதேபோல், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரசங்கில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய எட்டாவது மற்றும் இலங்கை அணியின் இரண்டாவது வீரராகவும் தடம் பதித்திருக்கிறார். அத்துடன், அவர் சர்வதேச டெஸ்ட் அரங்கில் 34 தடவைகள் 5 விக்கெட்டுக்கள் (ஐந்தாவது வீரர்), 9 தடவைகள் 10 விக்கெட்டுக்கள் (நான்காவது வீரர்), 20 தடவைகள் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதித்திருக்கிறார்.
மேலும், அவரது சாதனை பயனத்தில் 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் சர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது வீரராகவும், 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இலங்கை அணி சார்பில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது வீரராகவும் ஹேரத் தனது சாதனைகள் பதிந்துள்ளார்.
இதேவேளை, 2016 ஆம் ஆண்டு 39 வயதில் இலங்கை டெஸ்ட் அணித் தலைவராக நியமிக்கப்பட்ட ரங்கன ஹேரத் அதிகூடிய வயதில் அணித் தலைவராகிய முதல் இலங்கை வீரர் என்றும் ஐந்தாவது சர்வதேச வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டது மாத்திரமல்லாமல் தலைவராக நியமிக்கப்பட்ட போட்டியிலேயே 11 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதித்தார்.
இவ்வாறாக, பல சாதனைகளை தன்னகத்தே வைத்துள்ள ரங்கன ஹேரத் 40 வயதிலும் உச்சத்தில் இருக்கும் போது தனது ஓய்வை அறிவித்து சர்வதேச டெஸ்ட் அரங்கில் இருத்து சோதனையுடன் விடைபெற்றுக்கிறார். எனினும் ரசிகர்களின் எதிர்பார்ப்பானது ஹேரத் மேலும் சில காலம் டெஸ்ட் அரங்கில் இருக்க வேண்டும் என்பதாக இருத்தது எனினும் இளையவர்களுக்கு வாய்ப்பளித்து சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து முற்றாக ஓய்வுபெற்றுள்ளார்.
இதேநேரம், ஒருநாள், ரி-20 போட்டிகளில் படுதோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கும் இலங்கை அணியினர் டெஸ்ட் அரங்கில சில வெற்றிகளை பெற்றுக்கொள்ள துணையாக இருந்தவர் ரங்கன ஹேரத் ஆனால் அவரின் ஓய்வுடன் அந்த சில டெஸ்ட் வெற்றிகளும் கேள்விக்குறியானதாக மாறியிருக்கிறது. எது எப்படியோ ரங்கன ஹேரத்தை வாழ்த்தி விடைகொடுப்போம்.
ஞா.பிரகாஸ்