டெனீஸுக்கு அமைச்சுப் பதவி: விக்கியின் மேன்முறையீட்டை நிராகரித்தது உயர்நீதிமன்றம்!

டெனீஸ்வரனை வடக்கு மாகாண அமைச்சராகத் தொடர அனுமதிக்கும்படி முன்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்த இடைக்கால உத்தரவுக்கு எதிராக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு ஏற்க மறுத்துத் தள்ளுபடி செய்தது.

நீதியரசர்கள் பிரியந்த ஜெயவர்த்தன, விஜித் கே. மலகொட, முருது என். பி. பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட ஆயமே இன்று சுமார் மூன்று மணி நேரபூர்வாங்க விசாரணையின் பின்னர் அந்த மேன்முறையீட்டு மனுவைத் தொடர்ந்து விசாரணைக்கு ஏற்க மறுத்து நிராகரித்து.

இந்த மனுவை ஏற்று விசாரிப்பதற்கான முகாந்தரம் இல்லை எனத் தெரிவித்து அது நிராரிக்கப்பட்டது.

வடக்கு மாகாண சபையின் அமைச்சர் பதவியில் இருந்து தம்மை விலக்கிய முறைமை சட்டரீதியானது அல்ல என்று தெரிவித்து, அதனால் அப்பதவியில் தம்மைத் தொடர அனுமதிக்குமாறு உத்தரவிடக் கோரி டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதனை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், வழக்கு விசாரணை முடியும் வரை அவரை அமைச்சர் பதவியில் தொடர இடமளிக்கும் இடைக்கால உத்தரவை வழங்கி, அவ்வப்போது அந்த உத்தரவை நீடித்தும் வந்தது. இந்தநிலையில், அந்த இடைக்கால உத்தரவை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்த அப்போதைய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் பதவியை டெனீஸ்வரனுக்கு வழங்காமல் இருந்து வந்தார்.

இதனால் மேன்முறையீட்டுநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த மறுத்ததன் மூலம் முதல்வர் விக்னேஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் எனத் தெரிவித்து டெனீஸ்வரன் மற்றொரு வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அந்த வழக்குக்கு எதிராக விக்னேஸ்வரன் தரப்பில் பூர்வாங்க ஆட்சேபனை கிளப்பப்பட்ட நிலையில் அந்த ஆட்சேபனை மீதான தீர்ப்பை நீதிமன்றம் எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி வழங்கவிருக்கின்றது.

இதற்கிடையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்புக்கு எதிராக முதல்வர்
விக்னேஸ்வரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு இன்று உயர்நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் அரசமைப்புக்கு வியாக்கியானம் – பொருள் கோடல் செய்ய வேண்டிய தேவை இருப்பதால், அதனை உயர்நீதிமன்றுக்குப் பாரப்படுத்தாமல், மேன்முறையீட்டு நீதிமன்றம் தன்பாட்டில் விசாரித்துத் தீர்ப்பளித்தமை தவறு என்று மனுதாரரான விக்னேஸ்வரன் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை நீதியரசர்கள் நிராகரித்தனர்.

அரசமைப்பில் கூறப்பட்டதைப் பிரயோகிப்பது பற்றிய விடயம் மட்டுமே இதில் சம்பந்தப்பட்டுள்ளது என்பதால் அதனை மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்கொண்டது தவறல்ல என உயர்நீதிமன்ற நீதியரசர்கள் கருத்து வெளியிட்டனர்.

ஓர் அமைச்சரைப் பதவி நீக்குவதோ, நியமிப்பதோ ஆளுநருடன் சேர்ந்து முதலமைச்சர் மேற்கொள்ளும் நடவடிக்கை. அது தனித்து முன்னெடுக்கப்படக் கூடியதல்ல என்ற வாதத்தையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இவற்றின் அடிப்படையில் நோக்கினால் இந்த மேன்முறையீட்டு மனுவைத் தொடர்ந்து விசாரணைக்கு ஏற்பதற்கு முகாந்திரம் இல்லை எனத் தெரிவித்து அந்த மனுவை நீதியரசர்கள் நிராகரித்துத் தீர்ப்பாளித்தனர்.

இந்த உத்தரவு, ஏற்கனவே விக்னேஸ்வரனுக்கு எதிராக உள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *