கொழும்பில் அரசியல் குழப்பம் – டில்லியுடனான பேச்சுகளில் இழுபறி!

இலங்கையில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பினால், கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பாக, இந்தியாவுடன் நடத்தப்படவிருந்த பேச்சுக்களில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்வது தொடர்பாக 2017 ஏப்ரல் மாதம் புரிந்துணர்வு உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது.

மலிக் சமரவிக்ரமவுக்கும் சுஸ்மா சுவராஜூக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட இந்த உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் விரும்பிய போதும்,  மைத்திரிபால சிறிசேனவும் துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சரான மகிந்த சமரசிங்கவும் அதனை எதிர்த்தனர்.

இதனால், இழுபறிகள் ஏற்பட்டிருந்தன.  ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவை பதவி நீக்கப்படுவதற்கு முன்னர்- கடைசியாக நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது,  இதுகுறித்து இந்தியாவுடன் பேசி முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போதைய அரசியல் நெருக்கடிகளால்,திட்டமிட்டபடி இந்தியாவுடன் பேச்சுக்களை நடத்த முடியவில்லை என்று துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சரான மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

வரும் 14ஆம் நாள் நாடாளுமன்றம் கூட்டப்பட்ட பின்னர், இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவுடன், இதுபற்றித் தாம் பேச்சு நடத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

2017 இல் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்பாடு இந்த விடயங்களை உள்ளடக்கியுள்ளதாக ஐதேக தவறாக ஏற்றுக் கொண்ட போதிலும், அதனை சிறிலங்கா ஏற்றுக் கொள்ளாது என்றும் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, கொழும்பு மேற்கு கொள்கலன் முனையத்தில் இந்தியாவின் முதலீட்டை ஏற்றுக் கொள்வதற்கு சிறிலங்கா அதிபர் தயாராக இருக்கிறார் என்றும்  அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *