பணம் வாங்கவில்லை! மக்களுக்காகவே புது அரசில் இணைந்தேன்!! – ‘பல்டி’ குறித்து வியாழேந்திரன் விளக்கம்

கிழக்கின் அபிவிருத்தியை மையப்படுத்திஇ ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் கிழக்கு அபிவிருத்தியின் பிரதியமைச்சராக நான் பொறுப்பேற்றிருக்கிறேன். எவரிடமிருந்தும் பணம் வாங்கவில்லை என்று பிரதியமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து , மைத்திரி – மஹிந்த கூட்டணி பக்கம் தாவியுள்ள வியாழேந்திரன் பி.பி.சி. தமிழோசைக்கு வழங்கிய செவ்வி வருமாறு,

 

கே- யாரை ஆதரிப்பது என்ற முடிவை கூட்டமைப்பு எடுப்பதற்கு முன்பாகவே நீங்கள் மஹிந்த பக்கம் சாய்ந்தது ஏன்?

ப-  2015 செப்டம்பர் ஒன்றாம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக வந்ததிலிருந்து 3 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த மூன்று ஆண்டுகளில் ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுவந்த வரவு – செலவுத் திட்டம் ஒவ்வொன்றும் தீர்மானத்திற்கு விடும்போது கைகளை உயர்த்தியிருக்கிறோம்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதுகூட, அவரைப் பாதுகாக்க எதிர்க்கட்சி வரிசையில் இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்திருக்கிறது.

நாங்கள் அரசியல் தீர்வுக்காக பல விஷயங்களை விட்டுக்கொடுத்திருக்கிறோம், ஆதரவு வழங்கியிருக்கிறோம், ரணில் அரசைப் பாதுகாத்திருக்கிறோம். ஆனால், எங்களுக்குக் கிடைத்தது என்ன? அரசியல் கைதி விடுவிப்பு, காணி விடுவிப்பு என எத்தனையோ உடனடியாக செய்ய வேண்டிய பிரச்சனைகளில் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. இதற்கிடையில், கிழக்கு தொடர்பாக நான் முன்வைத்த மூன்று கோரிக்கைகளில் இரண்டுக்கு சாதகமான பதிலைத்தந்தார் ஜனாதிபதி.

ஆகவே கிழக்கின் அபிவிருத்தியை மையப்படுத்தி, ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் கிழக்கு அபிவிருத்தியின் பிரதியமைச்சராக நான் பொறுப்பேற்றிருக்கிறேன். தவிர, தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள சிலரது செயல்பாடுகள், குறிப்பாக தமிழரசுக் கட்சியில் உள்ள சிலரது செயல்பாடுகளால் பல காலமாகவே மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறோம்.

தேர்தல் நடக்கும் காலத்திலேயே எங்களை ஆயுதக் குழுக்கள், ஒட்டுக்குழுக்கள் என்றெல்லாம் இவர்கள் விமர்சித்தார்கள். அவர்கள்தான் இப்போது எங்களை துரோகிகள் என்கிறார்கள். உரிமை கேட்டோம். அதுவும் கிடைக்கவில்லை.

அபிவிருத்தியும் கிடைக்கவில்லை. சகோதர சமூகங்களான இஸ்லாமியர்களும் சிங்களர்களும் எங்கேயோ போய்விட்டார்கள். அவர்கள் வசிக்கும் இடங்கள் இங்கிலாந்தைப் போலவும் நாங்கள் வசிக்கும் இடங்கள் சோமாலியாவைப் போலவும் இருக்கின்றன. நிலைமை இப்படியே நீடிக்கும் பட்சத்தில் ஐந்து வருடங்களுக்குப் பிறகு மக்களிடம் போய் நின்றால் மக்கள் செருப்பால் அடிப்பார்கள்.

கே. மஹிந்த கடந்த காலங்களில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வில் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்தவரல்ல. இப்போது அவரது அமைச்சரவையில் இணைந்து என்ன செய்ய முடியமென நினைக்கிறீர்கள்?

ப. நான் மஹிந்தவின் அழைப்பின் பேரில் இணையவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில்தான் நான் இணைந்திருக்கிறேன். கடந்த ஆகஸ்ட் மாதம் சந்தித்தபோது, எதுவுமே நடக்கவில்லை, எதையும் செய்யவில்லை என்றீர்களே, இப்போது வந்து இணையுங்கள் என்றார். அதனால், கிழக்கு அபிவிருத்தியை நான் கேட்டுப் பெற்றேன்.

கே. மைத்திரி அழைத்து அமைச்சரவையில் இணைந்தாலும் உங்கள் பிரதமர் மஹிந்ததான். இறுதிப் போரின்போது மனித உரிமை மீறல், போர்க் குற்றம் உட்பட பல குற்றச்சாட்டுகள் அவர் மீது இருக்கின்றன…

ப. போர்க் குற்றத்தைப் பொறுத்தவரை, நாங்கள் ஒரு நாளும் பின்வாங்க மாட்டோம். தவறு செய்தால் குரல் கொடுப்போம். மனோ கணேசன் ஆளும் தரப்பில் இருந்தாலும் அரசின் பிழைகளை அவர் சுட்டிக்காட்டினார். ஆனால், எதிர்க் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து எப்போதாவது சுட்டிக்காட்டியிருக்கிறார்களா? எல்லாவற்றுக்கும் ஆதரவு கொடுத்ததுதான் மிச்சம்.

கே. நீங்கள் பதவிக்காகவும் பணத்திற்காகவும் இடம் மாறியிருப்பதாக குற்றச்சாட்டுகள் இருக்கின்றன..

ப. அது அவர்கள் கருத்து. என்னைப் பொறுத்தவரை 30 ஆண்டுகள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். தொடர்ந்து அரசியலில் 50 -60 வருடம் இருந்தேன் என சொல்வது பெருமையல்ல. 7 மாதம் அரசியலில் இருந்தாலும் என்ன செய்தேன் என்பதுதான் முக்கியம். இஸ்லாமியர்களைப் பாருங்கள். தொடர்ந்து அபிவிருத்திக்காக போராடி, சிறப்பாக இருக்கிறார்கள். நாங்கள் அரசியல் உரிமைக்காகப் போராடி பலவற்றை இழந்தோம். உரிமையும் இல்லை, அபிவிருத்தியும் இல்லை.

கே. நீங்கள் கட்சி மாறும் தருணத்தில் ப்ளாட் தலைமை தொடர்ந்து உங்களை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, உங்களை தொடர்புகொள்ள முடியவில்லை. அந்த நேரத்தில் என்ன நடந்தது?

ப. நான் கனடா சென்றிருந்தேன். அங்கிருந்து ப்ளாட் தலைவர் சித்தார்த்தனுடன் பேசினேன். அங்கிருந்த புதன்கிழமை புறப்பட்டேன். அதுவரை அவருடன் தொடர்பிலிருந்தேன். வியாழக்கிழமை நள்ளிரவில் இங்கு வந்து சேர்ந்தேன். அப்போது என் வாகன சாரதிக்கு அவர் அழைத்தார். அப்போது நான் பேசவில்லை. ஆனால், அதற்குள் நான் ஒரு தீர்க்கமான முடிவெடுத்திருந்தேன். அப்போது அவரோடு பேச விரும்பில்லை.

கே. இப்படி பணமும் பதவியும் கொடுத்து மஹிந்த ஆதரவைத் திரட்டுவது சரியா?

ப. என்னைப் பொறுத்தவரை நான் ஒருவரிடமும் பணம் வாங்கவில்லை. இதேபோலத்தான், நாங்கள் ரணிலுக்கு ஆதரவு கொடுக்க 20 மில்லியன் வாங்கியதாக சொன்னார்கள். நாங்கள் அப்படி ஏதும் வாங்கவில்லை. குறிப்பாகச் சொன்னால், நான் பணம் பெறவில்லை. இன்று ஐக்கிய தேசியக் கட்சியினர் மட்டக்கிளப்பில் ரணிலுக்கு ஆதரவாகவும் மஹிந்தவுக்கு எதிராகவும் ஓர் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் பேசியவர்கள் 30 கோடி ரூபாய் வாங்கியதாக சொல்லியிருக்கிறார்கள். என் மீது குற்றம் சுமத்தியவர்கள் விவரங்களைத் திரட்டியிருக்கிறேன். சட்ட நடவடிக்கை எடுக்கவிருக்கிறேன்.

கே. நீங்கள் ப்ளாட்டை விட்டு நீக்கப்பட்டிருக்கிறீர்கள். இனி மட்டக்கிளப்பு அரசியலில் எதிர்காலம் உண்டா?

ப. மக்களின் அபிவிருத்தி சார்ந்த விஷயங்களில் எந்தக் கட்சி வேகமாக செயல்படுகிறதோ, அதனோடு இணைந்து நான் பயணிப்பேன். கட்சி நலனுக்காக, தனிப்பட்ட நலனுக்காக நான் செயல்பட்டால் பிறகு வாக்களிக்கவே மக்கள் இருக்க மாட்டார்கள். உரிமையைப் பெற்றுத் தருகிறேன் என்று தொடர்ந்து கூறி, மக்களை ஏமாற்றக்கூடாது. எங்க போனாலும் மக்கள் என்ன செய்தீர்கள் எனக் கேட்கிறார்கள். மக்கள் வறுமையில் மதம் மாறுகிறார்கள். அவர்கள் துரோகிகள் என்று சொல்லப்போகிறோமா?

நடந்து முடிந்த உல்ளூராட்சித் தேர்தலில் பிள்ளையானின் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கூடுதல் வாக்குளை பெற்றிருக்கிறார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. இவர்கள் எல்லோரும் அபிவிருத்தியை மட்டுமே பேசியவர்கள். கடந்த தேர்தலில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்ற கூட்டமைப்பின் வாக்கு 40,000 அளவுக்கு சரிந்திருக்கிறது.

கே. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இனி அபிவிருத்தியைப் பற்றி மட்டும் பேசுவோம்.. உரிமைகளைக் கேட்க வேண்டாம் என்பதைப் போல இருக்கிறது..

ப. நான் அப்படிச் சொல்லவில்லை. உரிமைகளை மட்டும் கேட்டால் காணாமல் போய்விடுவோம். அபிவிருத்தியையும் சேர்த்துப் பேசுவோம் என்கிறேன்.

கே. கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்றத்திற்குள் சென்றுவிட்டு, இப்போது மஹிந்தவுக்கு ஆதரவளிப்பது துரோகமென நினைக்கவில்லையா?

ப. எனக்கு வாக்களித்த சுமார் 40,000 மக்களோடு இணைந்து பணியாற்றியவர்களிடம் நான் தொடர்ந்து பேசினேன். அவர்கள்தான் அபிவிருத்திக்காக செயல்படுங்கள் என்றார்கள். அவர்களைக் கேட்டே இந்த முடிவை எடுத்தேன்.

கே. உங்களை அடையாளம் கண்டு முன்னிறுத்தியவர் சித்தார்த்தன். அவரைக் கைவிட்டிருக்கிறீர்கள்..

ப. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் ஆறு கட்சிகள் இருந்தன. இன்றைக்கு வெறும் மூன்று கட்சிகள் மட்டுமே இருக்கின்றன. கடைசியாக ஈபிஆர்எல்எஃப்பும் வெளியேறியது. ஏன் வெளியேறினார்கள்? எனக்கு வாய்ப்பளித்ததற்காக சித்தார்த்தனுக்கு நன்றி கூறுகிறேன். ஆனால், அவரிடம் பல முறை பேசியிருக்கிறேன். அபிவிருத்திக்காக ஏதாவது செய்யுங்கள் என்றேன். ஆகவே அவருக்கு நிலைமை தெரியும். கிழக்கின் நிலை வேறு. யாரும் எதுவும் சொல்லிவிட்டுப் போகட்டும். சித்தார்த்தன் எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி கூறுகிறேன். ஆனால், அவரோடு தொடர்ந்து இந்தக் கூட்டுக்குள் இருக்க மனசாட்சி இடம் கொடுக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *