கூட்டு உறவு கலைந்துவிடும்! ஒரு ஆண்டிலேயே தெரிந்துவிட்டது!! – மனம் திறக்கிறார் மைத்திரி

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடனான மகிழ்ச்சியற்ற பொருந்தாத திருமணம் முடிவுக்கு வந்து விட்டதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி விட்டு, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தமைக்கான காரணங்களை, இந்தக் கூட்டத்தில், ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

“கூட்டு அரசாங்கத்தை அமைத்து ஒரு ஆண்டுக்குள்ளாகவே, ரணில் விக்கிரமசிங்கவுடன், பொருந்தாத திருமணத்துக்குள் நுழைந்து விட்டதாக நன்றாக உணர்ந்து கொண்டேன்.

அவர்களுடன் எமக்கு கலாசார வேறுபாடுகள், மாத்திரமன்றி, பிணைமுறி விவகாரம், பொருளாதாரத்தைக் கொண்டு வருவதில் தோல்வியுற்றமை, உள்ளிட்ட வேறு காரணங்களும் கூட, இந்த பொருந்தா திருமணத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, புதிய அரசாங்கத்தை அமைத்ததற்குக் காரணமாகும்.

நாட்டு மக்களுக்கு  நாளை (இன்று) நிகழ்த்தவுள்ள உரையில் இந்த உண்மைகளை வெளிப்படுத்துவேன். ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில்,   அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வது தொடர்பாக  கலந்துரையாடப்பட்டது.

எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற பிரேரணை நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீரவினால் முன்வைக்கப்பட்டது.

இதனை நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க வழிமொழிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏகமனதாக அதற்கு இணக்கம் தெரிவித்தனர்.

அதேவேளை, இன்று கண்டியில் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து நிலைமைகளை விளக்கவுள்ள ஜனாதிபதி அதன் பின்னர், நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *