புரட்சிப் பாதையானது புரட்டப் பாதை! – கொட்டும் மழையிலும் திட்டமிட்டபடி பணிகளை ஆரம்பித்துவைத்தார் திலகர் எம்.பி.

கொத்மலை பிரதேசத்தில் பெரும் சமூக பிரச்சினையாக உருவெடுத்திருந்த புரட்டப் பாதையின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மொத்தமாக 24 கிலோ மீற்றர் தூரமான பாதையின் முதல் ஐந்து கிலோ மீற்றர் தூரத்தை செப்பனிடுவதற்கு 35 மில்லியன் ரூபா நிதியை பிரதமரின் தேசிய திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு பெற்றுக் கொடுத்துள்ள நுவரலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் நேற்று புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

இந்தப் பாதையை புனரமைக்கக் கோரி அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் பொதுமக்கள் நுவரெலியா – கண்டி வீதியை வழிமறித்து ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். அதன் போது மக்களுக்குத் தான் வழங்கிய வாக்குறுதியின்படி நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது பொதுமக்களுடன் களமிறங்கி வீதி அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

வீதி அபிவிருத்தி குழு என பொதுமக்களின் ஒன்றிணைவினால் உருவாக்கப்பட்ட அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் அரசியல் இன மத பேதங்களுக்கு பெருந்திரளாக மக்கள் அணி திரண்டு திலகர் எம்பிக்கு பெரும் வரவேற்பளித்திருந்தனர்.

இந்த நிகழ்வில் திலகர் எம்.பி. உரையாற்றுகையில்,

“புரட்டப் பாதை இத்தனை காலம் புனரமைக்கப்படாமல் இருந்ததற்கும் இன்று புனரமைக்கப்படுவதற்கும் அடிப்படை காரணம் அரசியலே. சிலர் இந்த வீதியை வைத்து அரசியல் நடத்திக் கொண்டு இருக்கின்றனர். கடந்த முப்பதாண்டு காலமாக வாக்குறுதிகளை மட்டுமே வழங்கியவர்கள் நான் பாதையை செப்பனிட முன்வந்ததும் பல்வேறு தடைகளை ஏற்படுத்த முனைந்தனர். அந்தத் தடைகளை உடைத்து இன்று எனது விடா முயற்சியினால் அரசிடம் இருந்து 35 மில்லியனைப் பெற்றுக் கொடுத்து பணிகளை ஆரம்பித்துள்ளேன்.

இந்த நிதி யார் மூலமாக வந்தது என்பதை இங்கே வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதான பொறியியலாளர் திலகரத்ன தெரிவித்தார். வீதி அபிவிருத்தி அதிகார சபைதான் நிதி கொணர்ந்து பாதை அமைக்க வேண்டும். ஆனால், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு திலகராஜா மூலமே நிதி வந்தது என்பதை உணர்ந்த மக்கள் இனமத பேதமின்றி எனக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

இங்கு உரையாற்றிய பௌத்த மதகுரு, மக்கள் மனதறிந்து செயற்படும் எமது இனவாதமற்ற அரசியல் பயணத்தை வரவேற்று பேசினார். நாங்கள் எவ்வாறு இனவாதம், மதவாதம் பார்த்து பணி செய்வது இல்லையோ அதே போல கட்சிபேதம் பார்த்தும் பணி செய்வதில்லை. நாளை எஞ்சிய பாதையை புனரமைக்க யார் முன்வந்தாலும் நாங்கள் அதற்கு தடையாக இருக்க போவதில்லை.

இப்போது நான் ஆரம்பித்து வைத்திருக்கும் பணிகளைத் தொடர்ந்து மேலும் பத்து மில்லியன் ரூபாய்களை பெற்றுக் கொடுக்க இராஜாங்க கல்வி அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் முன்வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் திகாம்பரமும் ஒரு தொகை நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு நம்பி வாக்களித்த மக்களை நாம் கைவிடப் போவதில்லை. இந்தப் பகுதி மக்கள் இதற்கு முன்னர் பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். அப்போதெல்லாம் வீதி அபிவிருத்தி அதிகார சபை இந்தப் பாதையைப் புனரமைக்க முன்வரவில்லை. இப்போது நிதியை நான் பெற்றுக் கொடுத்து அவர்களை புனரமைக்கக் கோரியுள்ளேன். இனியும் இந்தப் பாதை புனரமைக்கப்படாது அசமந்தப் போக்கில் செயற்பட்டால் அடுத்த போராட்டத்துக்கு தலைமை கொடுப்பதும் நானாகவே இருப்பேன்.

புரட்டப் பாதையை புனரமைப்புச் செய்ய தமது நாடாளுமன்ற காலம் முழுவதையும் செலவழித்தும் முடியாது தோற்றவர்களே உள்ளனர். புதிய நாடாளுமன்ற உறுப்பினராக புரட்டப் பாதை புனரமைப்புப் பணியை சாத்தியமாக்கி காட்டியுள்ளேன். எனது அரசியல் பயணத்தில் புரட்டப் பாதை ஒரு புரட்சிப் பாதையாகும்” – என்றார்.

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *