வனவளத் திணைக்கள அடாவடிகளை நேரில் ஆராய்ந்த வடக்கு அரசின் குழு!
வவுனியா வடக்கு மருதோடை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரமோட்டை மற்றும் நாவலர்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் மக்களை மீள்குடியேறவிடாது வனவளத் திணைக்களம் தடுத்துவரும் நிலையில் அது குறித்து வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் குழு அந்தக் கிராமங்களுக்கு நேற்று நேரில் சென்று பார்வையிட்டது.
அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் மாகாணசபை உறுப்பினர்கள் 12 பேர் கொண்ட குழு இந்தக் கிராமங்களுக்கு நேரில் சென்றது.
வவுனியா மாகாண சபையின் கடந்த 133 ஆவது அமர்வின்போது சபையின் வவுனியா மாவட்ட உறுப்பினர் ஜீ.ரீ.லிங்கநாதன், வவுனியா வனலாகாவினரின் அடாவடிகள் தொடர்பில் சுட்டிக்காட்டி, இந்த விடயத்தில் சபை விசேட கவனமெடுத்து கள விஜயமொன்றை மேற்கொள்ளவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
இதற்கமைய மாகாண சபையின் உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று நேற்று அங்கு சென்று நிலைமைகளைப் பார்வையிட்டது.
இதன்போது அங்கு சகல காணிகளையும் வன இலாகாவினர் கையகப்படுத்தி வைத்திருக்க முயற்சிப்பதாலேயே மீள்குடியமர்வை தடுத்து வருகின்றனர் என்று அங்குள்ள மக்கள் குற்றஞ்சாட்டிய அதேவேளை, தமது மீள்குடியமர்வை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு உடனடியாகக கொண்டு வந்து தம்மாலான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்த அவைத் தலைவர் சிவஞானம், இந்தியத் தூதுவருக்கும் இங்குள்ள நிலைமைகள் தொடர்பில் தெரியப்படுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சபையின் 38 உறுப்பினர்களில் 12 பேர் மட்டுமே நேற்று இந்தப் பயணத்தில் இணைந்துகொண்டனர்.