Sports

‘அப்பாவுக்காகத்தான் இவ்வளவுநாள் அனைத்தையும் மறைத்தேன்’ – சூதாட்ட குற்றச்சாட்டை ஏற்கிறார் பாக். பந்துவீச்சாளர்

தன்மீது சுமத்தப்பட்ட சூதாட்டப் புகாரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா ஒப்புக்கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா.   இவர், இங்கிலாந்து உள்நாட்டு அணியான எஸ்ஸெக்ஸ் அணிக்கு ஆடியபோது  ஸ்பாட் பிக்சிங்  செய்ததாக புகார் எழுந்தது. விசாரணையில் இது உறுதியானது. இதையடுத்து அவருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆயுள் காலத் தடை விதித்தது.
ஆனால் கனேரியா, தான் தவறுசெய்யவில்லை. என் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது  என்று கூறி வந்தார்.
அனு பட் என்ற இந்திய தொழிலதிபர் 2007-ம் ஆண்டில் பாகிஸ்தான் வீரர்கள் சிலரை அழைத்து விருந்து வைத்து விலை உயர்ந்த பரிசுகளை வழங்கினார். இதையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் வெஸ்ட்பீல்டை, அனு பட்டிற்கு கனேரியா அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, டர்ஹம் அணிக்கு எதிராக குறிப்பிட்ட ஓவரில் 12 ரன்களை வாரி வழங்க வேண்டும் என்ற ஸ்பாட் பிக்சிங்கில் வெஸ்ட் பீல்ட் ஈடுபட்டார். அதற்காக ஆறாயிரம் பவுண்ட் தொகை அவருக்கு வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதை வெஸ்ட் பீல்டு ஒப்புக்கொண்டதால் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவருடன் கைதான கனேரியா தன் தவறை ஒப்புக்கொள்ளாததால் அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், அந்த குற்றச்சாட்டை இப்போது ஒப்புக்கொண்டுள்ளார் கனேரியா. அல்ஜஸீரா சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், நான் தவறு செய்தது உண்மைதான். இதற்காக வெஸ்ட் பீல்டு, எஸ்ஸெக்ஸ் அணியில் என்னுடன் விளையாடியவர்கள், அந்த கிரிக்கெட் கிளப், என் கிரிக்கெட் ரசிகர்கள் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள். பாகிஸ்தானுக்கு எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் இதை என் அப்பாவுக்காகத்தான் இவ்வளவு நாள் மறுத்துவந்தேன். அவர் உடல் நலம் சரியில்லாமல் இருந்தார். அவர் உடல் நாளுக்கு நாள் மோசமானது. அந்த நேரத்தில் இந்த விஷயத்தை அவரிடம் கூற தைரியம் வரவில்லை. hஅவர் என் மீது அதிக பெருமை கொண்டிருந்தார். பாகிஸ்தானுக்காக விளையாடுவதற்காக இன்னும் பெருமை கொண்டிருந்தார். அவரிடம் நான் மன்னிப்புக் கேட்க வேண்டும். அவர்தான் எனக்கு ரோல் மாடலாக இருந்தவர்.
நான்தான் அனு பட்டிடம் வெஸ்ட்பீல்டை அறிமுகம் செய்து வைத்தேன். அனுவின் ஆசை வார்த்தை காரணமாக, சூதாட்டத்தில் ஈடுபட அவர் ஒப்புக்கொண்டார். அனு பட் குறித்து நான் கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவிக்காமல் இருந்து விட்டேன். முதலில் அதை என் தந்தைக்காகவே மறுத்துவந்தேன். பொய்களுடன் நீண்ட நாள் வாழ முடியாது. இப்போது இதை சொல் லும் வலிமையை பெற்றுவிட்டேன். அதனால் சொல்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கனேரியா, 261 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது சராசரி 34.8. பத்தொன்பது ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading