சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு! – போராட்ட அறிவிப்பு காரணமாக பாதுகாப்பு அதிகரிப்பு

சபரிமலை கோயில் நடை இன்று திறக்கப்படுகின்றது. போராட்ட அறிவிப்பு காரணமாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் சபரிமலையில் உலகப் புகழ்பெற்ற ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து கடந்த மாதம் 28ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. ஆனால், இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பி உள்ளது. குறிப்பாக கேரளாவில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. நீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி கேரள அரசு மனுதாக்கல் செய்யவேண்டும் என்று கோரியும் போராட்டங்கள் வலுத்துள்ளன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று (புதன்கிழமை) மாலை திறக்கப்படுகின்றது. 22ஆம் திகதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடை திறந்து இருக்கும். இதனால் பெண்களின் வருகை அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதையடுத்து, ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காண திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு அவசர ஆலோசனை கூட்டத்தை திருவனந்தபுரத்தில் நேற்று நடத்தியது. இதில் நீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி வரும் ஐயப்பன் கோயில் தலைமை தந்திரி, பந்தளம் அரச குடும்பத்தினர் மற்றும் ஐயப்பன் பக்தர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஆனால், இந்தக் கூட்டத்தில் எந்த சமரச தீர்வும் காணப்படவில்லை. இதனால் பேச்சு தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து, சபரிமலை பக்தர்கள் செல்லும் பிரதான வழியான நிலக்கல்லில், நேற்றுக் கூடிய பொலிஸார் ஐயப்பன் பக்தர்கள் மற்றும் அங்கு வரும் வாகனங்களைச் சோதனையிட்டு , 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வந்தால் அவர்களை தடுத்தி நிறுத்துகின்றனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *